Published : 19 Sep 2018 07:39 PM
Last Updated : 19 Sep 2018 07:39 PM

சாலையோரம் கேட்பாரற்று நிறுத்தப்பட்டு கைப்பற்றப்பட்ட 7877 வாகனங்கள்; சென்னை மாநகராட்சியால் ஆன்லைன் மூலம் ஏலம்: எப்படி பங்கேற்பது விளக்கம்

மாநகராட்சிக்குட்பட்ட சாலையோரங்களில் நீண்ட நாட்களாக பழுதடைந்து போக்குவரத்திற்கு இடையூறாக இருந்து அப்புறப்படுத்தப்பட்ட 7877 வாகனங்கள் மின்னணு முறையில் ஏலம் விடப்படுகிறது. எப்படி ஏலம் எடுப்பது என்பது குறித்த விபரமும் வெளியிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட சாலையோரங்களில் நீண்ட நாட்களாக பழுதடைந்து, போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த வாகனங்கள் காவல்துறை உதவியுடன் அப்புறப்படுத்தப்பட்டு, வடக்கு வட்டார அலுவலகத்தின் கீழ் வரும் 1 முதல் 5 வரையுள்ள மண்டலங்களுக்குட்பட்ட 2627 இரண்டு, மூன்று, நான்கு சக்கர பழுதடைந்த வாகனங்கள் இராயபுரம் மண்டலம், கோட்டம்-58, சூளை, அவதான பாப்பையா தெருவில் மலேரியா ஸ்டோர் அருகில் அமைந்துள்ள மாநகராட்சி இடத்திலும்,

மத்திய வட்டார அலுவலகத்தின் கீழ் வரும் 6 முதல் 10 வரையுள்ள மண்டலங்களுக்குட்பட்ட 2926 இரண்டு, மூன்று, நான்கு சக்கர பழுதடைந்த வாகனங்கள் அண்ணாநகர் மண்டலம், கோட்டம்-107, மேயர் சத்திய மூர்த்தி சாலை, மத்திய தார் கலவை நிலைய வளாகத்திலும்,

தெற்கு வட்டார அலுவலகத்தின் கீழ் வரும் 11 முதல் 15 வரையுள்ள மண்டலங்களுக்குட்பட்ட 2324 இரண்டு, மூன்று, நான்கு சக்கர பழுதடைந்த வாகனங்கள் கோட்டம்-188, பள்ளிக்கரணை பழைய குப்பை கொட்டும் வளாகத்திலும் என ஆக மொத்தம் 7877 வாகனங்கள் அகற்றப்பட்டு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

அவ்வாறு அகற்றப்பட்ட வாகனங்கள் எந்த வழக்குகளுடனும் சம்பந்தப்படவில்லை அல்லது எந்தவொரு நீதிமன்ற நடவடிக்கையிலும் நிலுவையில் இல்லை எனவும் காவல்துறையின் மூலம் சான்று அளிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு கைப்பற்றப்பட்ட வாகனங்களின் விபரங்கள் சென்னை மாநகராட்சியின் இணையதளமான www.chennaicorporation.gov.in மற்றும் தினசரி நாளிதழ்களில் வெளியிடப்பட்டு உரிமை கோரும் வாகனத்தின் உரிமையாளர்கள் சம்பந்தப்பட்ட காவல் துணை ஆணையரை 15 நாட்களுக்குள் அணுகுமாறும், அவ்வாறு 15 நாட்களுக்குப்பின் உரிமை கோராத வாகனங்களை இ-ஏலம் விட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டது.

இவ்வாறு உரிமை கோராத அனைத்து வாகனங்களையும் சுகாதாரத்துறை துணை ஆணையர் தலைமையில் கடந்த ஆகஸ்டு 20-ம் தேதி அன்று குழு அமைத்து 7877 வாகனங்களுக்கும் மதிப்பீடு தயார் செய்து வட்டார வாரியாக மூன்று தொகுப்பாக மின்னணு ஏலம் நடத்த பரிந்துரை செய்யப்பட்டது.

இதன் அடிப்படையில் மூன்று வட்டார அலுவலக வாகனங்களையும் விற்பனை செய்ய சென்னை மாநகராட்சியின் ஒப்ப முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட மத்திய அரசின் நிறுவனமான Metal Scrap Trading Corporation Ltd. மூலம் மின்னணு ஏலம் 27.09.2018 அன்று நடைபெற உள்ளது. மின்னணு ஏலத்தில் MSTC.Ltd பதிவுபெற்ற நிறுவனத்தார் மட்டுமே ஏலத்தில் கலந்து கொள்ள முடியும். ஏலம் குறித்த விவரங்கள் www.mstcecommerce.com, அல்லது www.mstcindia.co.in என்ற இணையதளம் மூலமாகவும் தெரிந்து கொள்ளலாம்.

மேலும், பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சாலையோரங்களில் இரண்டு, மூன்று மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் நீண்ட நாட்கள் நிறுத்தி வைக்கப்பட்டால் வாகனங்கள் உடனடியாக அகற்றப்பட்டு, வாகன உரிமையாளர்கள் மீது உரிய நடவடிக்கையும் உரிமை கோராத வாகனங்கள் ஏலம் விடப்படும் என சென்னை மாநகராட்சி ஆணையாளர் கார்த்திகேயன், தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x