Published : 17 Sep 2018 04:41 PM
Last Updated : 17 Sep 2018 04:41 PM

அவரின் பெயரை சொல்லக்கூட நான் விரும்பவில்லை: ஹெச்.ராஜாவை மறைமுகமாகச் சாடிய வைகோ

பெரியார் சிலையை அவமதிப்பவர்கள் பாம்பை விட கொடிய விஷத்தன்மை உடையவர்கள் என, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

பெரியாரின் 140-வது பிறந்த நாளான இன்று (திங்கட்கிழமை) சென்னை, அண்ணா சாலையில் சிம்சன் அருகே உள்ள பெரியார் சிலைக்கு பல்வேறு கட்சிகளின் சார்பில் மாலை அணிவிக்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து அங்கு வந்த சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் ஜெகதீசன் (35) என்பவர், திடீரென பெரியார் சிலை மீது காலணி வீசினார். இதனால் அங்கு கூடியிருந்த தொண்டர்களும் பொதுமக்களும் அதிர்ச்சி அடைந்தனர். இதைத் தொடர்ந்து கிண்டி, ஈக்காட்டுத் தாங்கலைச் சேர்ந்த ஜெகதீசனைக் காவல்துறையினர் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட ஜெகதீசனிடம் தற்போது விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

பெரியார் சிலை அவமதிக்கப்பட்டதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், ஜெகதீசனை தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இந்நிலையில், சிம்சன் அருகே உள்ள பெரியார் சிலையை பார்வையிட்ட மதிமுக பொதுச் செயலாளர் வைகோ செய்தியாளர்களிடம், “பெரியார் மீது காலணி வீசியது பாஜகவின் வழக்கறிஞர் பிரிவைச் சேர்ந்த ஜெகதீசன் என்று தகவல் வெளியாகியுள்ளது. அவருக்கு இந்த அகம்பாவமும் திமிரும் எப்படி ஏற்பட்டது? அவரை இன்னும் பாஜக நீக்கவில்லையே? பாஜகவுக்கும் இதற்கும் சம்பந்தமில்லை என ஏன் அக்கட்சி கூறவில்லை. பெரியாரை இந்தியாவே போற்றுகின்ற சூழலில், பாஜகவைச் சேர்ந்த தலைவர் அவரது சிலையை இடித்து தள்ள வேண்டும் என சொன்னார். அந்நபரின் பெயரை சொல்லக் கூட நான் விரும்பவில்லை.

பெரியார் சிலையை அவமதிப்பவர்கள் பாம்பை விட கொடிய விஷத்தன்மை உடையவர்கள்” என வைகோ தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x