Published : 17 Sep 2018 04:40 PM
Last Updated : 17 Sep 2018 04:40 PM

‘அக்கா ஒரு நிமிஷம், அந்த பெட்ரோல் விலை’ : தமிழிசையிடம் கேள்வி கேட்ட ஆட்டோ ஓட்டுநருக்கு தர்ம அடி?- வைரலாகும் விவகாரம்

 தமிழிசை பேட்டி அளிக்கும்போது பெட்ரோல் விலை தினமும் ஏறுவதாக தெரிவித்த ஆட்டோ டிரைவர் பாஜக ஆட்களால் இழுத்துச் செல்லப்பட்டு தாக்கப்பட்டதாக வெளியான தகவல் ட்விட்டரில் வைரலாகி வருகிறது.

பாஜக ஆட்சிக்கு வந்தவுடன் பெட்ரோல் விலையை தினந்தோறும் நிர்ணயிக்கும் உரிமையை எண்ணெய் நிறுவனங்களுக்கு அளித்தது. இதனால் தினம் தினம் உயர்ந்த பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத வகையில் அதிகரித்து வருகிறது.

இதனால் விலைவாசியும் கடுமையாக உயர்ந்து வருகிறது. பெட்ரோல் விலை உயர்வு குறித்து பாஜகவை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வரும் வேளையில் பிரதமர் மோடி அதுகுறித்து வாய் திறக்காமல் மவுனமாக இருந்து வருகிறார்.

மறுபுறம் மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் பெட்ரோல், டீசல் விலையை குறைப்பது குறித்து எதுவும் செய்ய முடியாது. அது எங்கள் கையில் இல்லை என்று கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது.

மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே, எனக்கு அரசாங்கம் இலவசமாக பெட்ரோலைத் தருவதால் பெட்ரோல் விலை உயர்வு என்னைப் பாதிக்கவில்லை என்று தெரிவித்தார். பின்னர் சர்ச்சையானவுடன் மன்னிப்பு கேட்டார்.

ராஜஸ்தான் மாநில பாஜக அமைச்சர் மக்கள் பெட்ரோல் பயன்பாட்டை குறைத்துக்கொள்ள வேண்டும் என்று பேட்டி அளித்தார்.

இவ்வாறு பெட்ரோல் டீசல் உயர்வு மக்களைப் பாதிப்பதைப் பற்றி கவலைப்படாமல் எரியும் தீயில் எண்ணெய் ஊற்றும் பாஜக அமைச்சர்கள், தலைவர்கள் விமர்சிக்கப்பட்டு வரும் வேளையில் மற்றொரு சமபவம் நேற்று சென்னையில் நடந்துள்ளது.

விநாயகர் சிலை ஊர்வலம் குறித்த விழாவில் சைதாப்பேட்டையில் தமிழிசை கலந்துகொண்டார். அப்போது அவர் பேட்டி அளிக்கும்போது பின்னால் நின்ற ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் பவ்யமாக “அக்கா ஒரு நிமிடம் பெட்ரோல் விலை டெய்லி ஏறுதுக்கா” என தனது ஆதங்கத்தைத் தெரிவித்தார்.

அப்போது இதைக்கேட்ட தமிழிசை, அவரது பக்கம்கூட திரும்பாமல் சிரித்தபடி இருந்தார். அப்போது அவரைப் பாஜக நிர்வாகிகள் கழுத்தில் கையைப்போட்டு இழுத்தனர். பின்னர் அவரை வெளியே இழுத்துச் சென்றவர்கள் அவரைத் தாக்கியதாக செய்தி வெளியானது.

தற்போது இந்தக் காட்சி ட்விட்டர், வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அக்கா ஒரு நிமிஷம் என பலரும் விமர்சனம் செய்கின்றனர். ஆட்டோ ஓட்டுநர் அர்பன் நக்சல் ஆக மாற்றப்படுவார் எனவும், வன்முறை கூடாது என்று தமிழிசை கூறுகிறார், ஆனால் அந்த மனிதரை அப்படி இழுத்துச் செல்கின்றனர் என்றும் நெட்டிசன்கள் விமர்சித்துள்ளனர்.

இப்படித்தான் இவர்கள் நடப்பார்கள், இதுதான் இவர்கள் பாதை என்று ஒருவர் விமர்சித்துள்ளார். “பாஜகவுக்கு விமர்சனம் என்றால் பிடிக்காது. ஏனென்றால் அவர்களிடம் இதற்கு பதிலே கிடையாது. இவர்களுக்கு நாட்டை ஆளவே தெரியாது. அனைத்தும் ஜூம்லா தான். 2019-ல் அனைத்துக்கும் முடிவு வருகிறது” என்று ஒருவர் விமர்சித்துள்ளார்.

பாஜக ஆதரவு நெட்டிசன் ஒருவர் “கேட்டது தவறில்லை... இடம் பொருள் அறிந்து கேட்க வேண்டியதைக் கேட்க வேண்டியவர்களிடம் கேட்க வேண்டும் எதையும்.. பிரபலமானவர்களை பொது இடத்தில் சீண்டுவதே வேலையாகிப் போய்விட்டது... இதை தொடர்கதையாக விடாமல் தண்டிக்க வேண்டும்” என்று பதிவிட்டுள்ளார்.

ஆட்டோ ஓட்டுநர் பொய்யொன்றும் சொல்லவில்லையே, இவர்கள் அவருக்கு கட்டாயம் பதிலளித்தே ஆகவேண்டும் என ஒருவர் பதிவிட்டுள்ளார். ஹெச்.ராஜா பிரச்சினை ஒருபுறம் என்றால், தமிழிசையிடம் கேள்வி எழுப்பிய ஆட்டோ ஓட்டுநர் தாக்கப்பட்டது தற்போது வைரலாகி வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x