Published : 14 Sep 2018 05:39 PM
Last Updated : 14 Sep 2018 05:39 PM

சென்னை - சேலம் எட்டு வழிச்சாலை திட்டம்: நிலம் கையகப்படுத்தும் பணி தற்காலிகமாக நிறுத்திவைப்பு; சென்னை உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு உறுதி

சென்னை - சேலம் எட்டு வழிச்சாலை திட்டத்துக்கு தேவையான நிலங்கள் கையகப்படுத்தும் பணி தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு உறுதி அளித்துள்ளது.

சென்னை - சேலம் நெடுஞ்சாலை யில் அதிகரித்து வரும் வாகன போக்கு வரத்தை கருத்தில் கொண்டு ரூ.10 ஆயிரம் கோடி செலவில் 8 வழிச் சாலை அமைக்க மத்திய-மாநில அரசுகள் முடிவு செய்தன. இந்த திட்டத்துக்காக 2,560 ஹெக்டேர் நிலத்தை கையகப்படுத்த மதிப்பிடப் பட்டுள்ளது. எட்டு வழிச்சாலை திட்டத் தால் பாதிக்கப்பட்ட பல்வேறு தரப்பினர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இவ்வழக்கு களை நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், பவானி சுப்பராயன் ஆகியோர் விசாரித்து வருகிறார்கள்.

இந்நிலையில், நீதிமன்றத்தில் மத்திய-மாநில அரசுகள் அளித் திருந்த வாக்குறுதிகளை மீறி, நிலம் அளவிடும் பணியின் இடையில் மரங்கள் சட்டவிரோதமாக வெட்டப் படுவதாகவும் நிலம் கையகப் படுத்தும் பணிக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் மனுதாரர்கள் சார்பில் முறையிடப்பட்டது. இதைத் தொடர்ந்து, நீதிமன்ற உத்தரவுகளை மதிக்காவிட்டால் ஒட்டுமொத்தமாக எட்டு வழிசாலை திட்டத்துக்கே தடை விதிக்க நேரிடும் என்று நீதிபதிகள் எச்சரிக்கை விடுத்தனர்.

இந்த நிலையில், இவ்வழக்குகள் நீதிபதிகள் சிவஞானம், பவானி சுப்பராயன் ஆகியோர் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தன. அப்போது மத்திய அரசின் சார்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ராஜகோபால் ஆஜராகி ஒரு அறிக்கையை சமர்ப்பித்தார்.

அந்த அறிக்கையில், எட்டு வழிச் சாலையின் வழித்தடத்தை மாற்றி அமைக்க திட்டமிட்டுள்ளதாகவும் ஆனால் இது குறித்து இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. தொடர்ந்து அவர் வாதிடும்போது, "நில ஆர்ஜித பணிகள் இன்னும் தொடங்கப்பட வில்லை. சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீடுகள் தொடர்பான விவகாரங் களுக்கு மனுதாரர்கள் தேசிய பசுமை தீர்ப்பாயத்தை அணுகலாம். புதிய திட்டத்தை இறுதி செய்யும் வரை தற்காலிகமாக நிலத்தை கையகப்படுத்த மாட்டோம்" என்று உறுதி அளித்தார்.

இதைத்தொடர்ந்து, சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீடு குறித்து மேற் கொள்ளப்பட்ட நடவடிக்கைகளை விரிவான அறிக்கையாக தாக்கல் செய்யும்படி மத்திய அரசுக்கு நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.

இதற்கிடையே, சென்னை - சேலம் இடையில் அமைய உள்ள சாலைக்கு அருகில் 109 மரங்கள் சட்டவிரோதமாக வெட்டப்பட்ட விவகாரம் குறித்து நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண், சட்டவிரோதமாக மரங்கள் வெட்டியதாக 5 பேருக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப் பட்டுள்ளதாகவும் கிராம நிர்வாக அலுவலர், கிராம உதவியாளர் மற்றும் வருவாய் ஆய்வாளர் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப் பட்டுள்ளதாகவும் இருவர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுதலை யாகி உள்ளதாகவும் மேலும் 3 பேர் தலைமறைவாகியுள்ளதாகவும் தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து, இருவரின் ஜாமீனை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கும்படி தமிழக அரசுக்கு உத்தரவு பிறப்பித்த நீதிபதிகள், மரம் வெட்டியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள 5 பேரின் குற்றப் பின்னணி குறித்து கரூர் மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் அறிக்கை தாக்கல் செய்யவும் மரங்கள் வெட்டப்பட்டது குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்யு மாறும் மாவட்ட வன அதிகாரிக்கு உத்தரவிட்டனர். பின்னர் இந்த வழக்கு விசாரணையை வரும் 20-ம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளி வைத் தனர்.

மாற்றம் செய்யப்பட்ட திட்ட அறிக்கை

பாரத்மாலா பரியோஜனா என்ற மத்திய அரசின் நெடுஞ்சாலை திட்டத்தின் மூலம் சென்னை - சேலம் இடையே ரூ.10 ஆயிரம் கோடி செலவில் 8 வழி பசுமைச்சாலை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த திட்டத்தால் விவசாய நிலங்கள், வனப்பகுதிகள் பாதிக்கப்படும் எனக்கூறி விவாயிகள், பொதுமக்கள், அரசியல் கட்சியினர் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த திட்டம் அமையவுள்ள காஞ்சிபுரம், திருவண்ணாமலை, சேலம், கிருஷ்ணகிரி ஆகிய 4 மாவட்டங்களில் பொதுமக்கள், விவசாய பிரதிநிதிகள், தேசிய நெடுஞ்சாலை ஆணையம் கருத்து கேட்புக்கூட்டம் நடத்தியது. இந்த கூட்டத்தில் பெரும்பாலானோர் இத்திட்டத்தை மாற்றுப்பாதையில் நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தினர். அதன் அடிப்படையில், பல்வேறு மாற்றங்களைச் செய்து தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்துக்கு அனுப்பியது.

குறிப்பாக, திட்ட மதிப்பீடு ரூ.10 ஆயிரம் கோடியிலிருந்து ரூ.7,210 கோடியாக குறைத்தல், 120 ஹெக்டேர் வனப்பகுதிக்குப் பதிலாக 45 ஹெக்டேர் வனப்பகுதி மட்டுமே கையகப்படுத்துதல், சாலையின் அகலம் 90 மீட்டரில் இருந்து 70 மீட்டராக குறைத்தல், ஒட்டுமொத்தமாக 2,560 ஹெக்டருக்குப் பதிலாக 1900 ஹெக்டர் நிலம் கையகப்படுத்துதல் என அந்த திட்ட அறிக்கையில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x