Published : 14 Sep 2018 09:44 AM
Last Updated : 14 Sep 2018 09:44 AM

ஏழு பேர் விடுதலை; ஆளுநரின் நடவடிக்கை அதிர்ச்சியளிக்கிறது: திருமாவளவன்

 

ஏழு பேர் விடுதலை விவகாரத்தில் மத்திய உள்துறை அமைச்சகத்தின் கருத்தை ஆளுநர் கேட்டிருப்பதாக வெளியாகியுள்ள செய்தி அதிர்ச்சியளிக்கிறது என்று விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக நேற்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''பேரறிவாளன் உள்ளிட்ட ஏழுபேரையும் விடுதலை செய்ய வேண்டுமென தமிழக அமைச்சரவை பரிந்துரை செய்துள்ள நிலையில்; அது குறித்து மத்திய உள்துறை அமைச்சகத்தின் கருத்தை ஆளுநர் கேட்டிருப்பதாக வெளியாகியுள்ள செய்தி அதிர்ச்சியளிக்கிறது. இது காலம் தாழ்த்தும் நடவடிக்கை மட்டுமல்ல மாநில உரிமைகளுக்கு முரணானதுமாகும். ஆளுநர் தனது முடிவை மறுபரிசீலனை செய்து ஏழு பேரின் விடுதலைக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறோம்.

பேரறிவாளன் 2015-ம் ஆண்டு தமிழக ஆளுநரிடம் சமர்ப்பித்த கருணை மனு மீது முடிவெடுக்க வேண்டுமென்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து தமிழக அமைச்சரவை கூடி பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரையும் விடுதலை செய்யுமாறு தீர்மானம் இயற்றி ஆளுநருக்கு அனுப்பியது. அரசியலமைப்புச் சட்டம் உறுப்பு 161-ன் கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி ஏழு பேரையும் ஆளுநர் விடுவிப்பார் என ஒட்டுமொத்த தமிழகமும் எதிர்பார்த்திருக்கும் நிலையில் உள்துறை அமைச்சகத்திற்கு ஆளுநர் கடிதம் எழுதியிருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.

அரசியலமைப்புச் சட்டம் உறுப்பு 161-ன் கீழ் ஆளுநர் முடிவெடுக்கும் போது உள்துறை அமைச்சகத்தையோ மத்திய அரசையோ கலந்தாலோசிக்குமாறு அந்த சட்டத்திலோ நீதிமன்ற தீர்ப்புகளிலோ குறிப்பிடப்படவில்லை. எனவே, ஆளுநரின் இந்த நடவடிக்கையை காலம் தாழ்த்தும் முயற்சியாகவே கருத வேண்டியுள்ளது.

‘தனஞ்செய் சாட்டர்ஜி எதிர் மேற்குவங்க அரசு’ என்ற வழக்கில் தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம் உறுப்பு 161-ன் கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தை ஆளுநர் தன்னிச்சையாக செயல்படுத்த முடியாது; அது மாநில அரசின் பரிந்துரைக்கு கட்டுப்பட்டது என்று தெளிவுபடுத்தியுள்ளது. இந்த ஏழு பேர் விடுதலை தொடர்பான விஷயத்தில் மாநில அரசு ஏற்கெனவே தீர்மானம் நிறைவேற்றி ஆளுநரிடம் அளித்துவிட்டது. அப்படியிருக்க ஆளநர் உள்துறை அமைச்சகத்துக்குக் கடிதம் எழுதியதை மாநில அரசை உதாசீனம் செய்யும் செயலாகவே கருத வேண்டியுள்ளது.

தமிழக ஆளுநர் தனது முடிவை மறுபரிசீலனை செய்து பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரையும் விரைந்து விடுவிப்பதற்கு முன்வர வேண்டும்'' என்று திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x