Published : 13 Sep 2018 07:48 AM
Last Updated : 13 Sep 2018 07:48 AM

குட்கா குடோனுக்கு அழைத்துச் சென்று மாதவராவிடம் விசாரணை: போலீஸ் அதிகாரிகள் விரைவில் கைது; ஆதாரங்களை திரட்டும் பணியில் டெல்லி சிபிஐ தீவிரம்

குட்கா ஊழல் விவகாரத்தில் போலீஸ் அதிகாரிகளுக்கு எதிராக வலுவான ஆதாரங்கள் கிடைத்தால் அவர்களை கைது செய்ய டெல்லி சிபிஐ அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

குட்கா விவகாரம் தொடர்பாக கடந்த 6-ம் தேதி தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், டிஜிபி டி.கே.ராஜேந்திரன், முன்னாள் காவல் ஆணையர் எஸ்.ஜார்ஜ், முன்னாள் வணிக வரித்துறை அமைச்சர் பி.வி.ரமணா, கலால் மற்றும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் உட்பட பலரது வீடுகளில் டெல்லி சிபிஐ அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். சென்னை, மும்பை, பெங்களூரு, புதுவை என 35 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. குட்கா நிறுவன உரிமையாளர்கள் மாதவ ராவ், உமா சங்கர் குப்தா, மத்திய கலால் வரி அதிகாரி பாண்டியன், மாநில உணவு பாதுகாப்பு பிரிவு அதிகாரி செந்தில்முருகன் ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

கைதான 5 பேரையும் 4 நாட்கள் காவலில் எடுத்துள்ள சிபிஐ அதிகாரி கள், நுங்கம்பாக்கம் அலுவலகத்தில் வைத்து தனித்தனியாக விசாரணை நடத்தி வருகின்றனர். யாருக்கெல்லாம் லஞ்சம் கொடுக்கப்பட்டது, உணவுப் பாதுகாப்பு மற்றும் கலால் வரித்துறையில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என்பது பற்றியும் விசாரணை நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், நேற்று காலை 11.30 மணியளவில் மாதவ ராவை, செங்குன்றம் தீர்த்தங்கரையன்பட்டு பகுதியில் உள்ள அவருக்குச் சொந்தமான குட்கா கிடங்குக்கு அழைத்துச் சென்று சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் எங்கிருந்து எல்லாம் செங்குன்றம் குடோனுக்கு கொண்டு வரப்பட்டது என்பது பற்றியும் இதற்காக லஞ்சம் கொடுக்கப்பட்டது எப்படி என்பது குறித்தும் குடோனில் வைத்து மாதவ ராவிடம் விசாரணை நடத்தப்பட்டது.

லேப்-டாப்பில் பதிவு

குட்கா பொருட்களை குடோனுக்கு கொண்டு வருவது முதல் அதை அனைத்து இடங்களுக்கும் எப்படி விநியோகம் செய்யப்படுகிறது என்பது வரை அதிகாரிகள் கேள்விகள் கேட்ட னர். அதற்கு மாதவ ராவ் விளக்கமாக பதில் அளித்தார். அப்படி கொண்டு செல்லப்படும்போது யாருக்கெல்லாம் லஞ்சம் கொடுக்கப்படும் என்பதையும் மாதவ ராவ் தெரிவித்தார். அதை டெல்லி சிபிஐ அதிகாரிகள் தங்களது லேப்-டாப்பில் பதிவு செய்து வைத்துக் கொண்டனர்.

சிபிஐ காவலில் மாதவ ராவிடம் நடத்தப்பட்ட விசாரணையில், குட்கா ஊழலில் யார் யாருக்கு தொடர்பு இருந்தது என்பது பற்றியும் ஒவ்வொரு மாதமும் லஞ்சமாக எத்தனை லட்சம் ரூபாய் கொடுக்கப்பட்டது என்பது பற்றியும் பல்வேறு தகவல்களை தெரிவித்துள்ளார். இதன் மூலம் குட்கா ஊழலில் தொடர்புடைய அனைத்து அதிகாரிகளும் சிக்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குட்கா முறைகேடு நடந்த காலக்கட்டத்தில் செங்குன்றம் சரக காவல் உதவி ஆணையராக இருந்த மன்னர் மன்னன், செங்குன்றம் காவல் ஆய்வாளராக இருந்த சம்பத்குமார் ஆகியோருக்கும் விசாரணைக்கு ஆஜராகுமாறு சிபிஐ சம்மன் அனுப்பி உள்ளது. அவர்கள் இன்று அல்லது நாளை ஆஜராவார்கள் என்று அதிகாரி கள் தெரிவித்துள்ளனர். உயர் மட்டத் தில் இருக்கும் போலீஸ் அதிகாரி களுக்கு குட்கா லஞ்சப்பணம் கைமாறி யதில் உதவி ஆணையராக இருந்த மன்னர் மன்னனுக்கு தொடர்பு இருப்ப தாக கூறப்படுகிறது. எனவே, சிபிஐ விசாரணையில் அவர் உண்மைகளை கூறிவிட்டால் மேலும் பல போலீஸ் அதிகாரிகள் சிக்க வாய்ப்புள்ளது என்று காவல் துறை வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.

தென்மண்டல சிபிஐ அதிகாரி ஒருவர் கூறும்போது, “மாதவ ராவின் டைரியில் எழுதப்பட்டிருப்பதை ஒரு ஆதாரமாக வைத்து போலீஸாரை கைது செய்ய முடியாது. எனவே, போலீஸாருக்கு எதிரான வலுவான ஆதாரங்களை டெல்லி சிபிஐ அதிகாரிகள் தேடுகின்றனர். குட்கா விவகாரத்தில் சிக்கியுள்ள போலீஸ் அதிகாரிகளையும் கைது செய்யும் முடிவில்தான் சிபிஐ உள்ளது.. ஒருவேளை வலுவான ஆதாரங்கள் கிடைக்காவிட்டால், உயர் மட்டத்தில் இருந்து அனுமதி கொடுக்கும் பட்சத்தில் போலீஸ் அதிகாரிகளும் விரைவில் கைதாக வாய்ப்புள்ளது” என்றார்.

சிபிஐ காவலில் உள்ள மாதவ ராவ் உட்பட 5 பேரையும் நாளை காலை 11 மணிக்கு நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும். எனவே, அதற்கு முன்னதாக அனைத்து தகவல்களையும் அதற்கான ஆதா ரங்களையும் திரட்டும் பணியில் சிபிஐ அதிகாரிகள் ஈடுபட்டுள் ளனர். இதற்காக டெல்லி சிபிஐ அதிகாரி கள் 13 பேர் தமிழகத்தில் முகாமிட்டு உள்ளனர்.

மேலும், தற்போது கைதாகியுள்ள 5 பேரையும் சிபிஐ அதிகாரிகள் அவர்களது வீடுகள், அலுவலகங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு தனித்தனியாக அழைத்துச் சென்று விடியவிடிய விசாரணை மற்றும் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் குட்கா ஊழல் வழக்கில் தொடர்புடைய மேலும் சிலரை இன்னும் சில தினங்களில் டெல்லி சிபிஐ அதிகாரிகள் கைது செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x