Published : 11 Sep 2018 09:26 PM
Last Updated : 11 Sep 2018 09:26 PM

தன்பாலின சமூகத்தினரும் மனிதர்களே: அது உணர்வால் வரும் பிரச்சினை: டாக்டர் காமராஜ்

தன்பாலினத்தவர் குறித்த உச்சநீதிமன்ற தீர்ப்பு சரியானது என்று உலக பாலியல் சங்க உரிமைக்குழு உறுப்பினர் டாக்டர் காமராஜ் தெரிவித்துள்ளார்.

உலக பாலியல் தினத்தையொட்டி சென்னை வடபழனியில் உள்ள டாக்டர் காமராஜ் மருத்துவமனையில் பாலியல் விழிப்புணர்வு கண்காட்சி மூன்று நாட்கள் நடைபெற்றது.

இதனை சட்டமன்ற உறுப்பினரும் வசந்த் அண்ட் கோ உரிமையாளருமான எச்.வசந்த்குமார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணனும் சிறப்பு விருந்தினராக பங்கேற்று துவக்கிவைத்து கண்காட்சியை பார்வையிட்டனர்.

இந்நிகழ்ச்சியில் உலக பாலியல் சங்க பாலியல் உரிமைக் குழு உறுப்பினர் டாக்டர் டி.காமராஜ், மீடியா கமிட்டி தலைவர் டாக்டர் கே.எஸ்.ஜெயராணி காமராஜ் ஆகியோர் உள்பட பலர் பங்கேற்றனர்.

இந்நிகழ்ச்சியில் பல்வேறு கருத்துகள் பரிமாறப்பட்டது. இதில் சமீபத்திய தன்பாலின சேர்க்கையாளர் குறித்த உச்சநீதிமன்ற கருத்து குறித்து டாக்டர் காமராஜ் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

“பாலியல் சிறுபான்மையினரை பாதுகாக்க உச்சநீதிமன்றம் சமீபத்தில் ஒரு தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை ஆதரிப்பதால், தன்பாலினச் சேர்க்கையை ஆதரிப்பதாகவும், உற்சாகப்படுத்துவதாகவும் சிலர் தவறாக கருதுகிறார்கள்.

ஒரு பாலியல் மருத்துவராக எங்களது கருத்து என்னவென்றால், உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் ஏற்படும் சில மாற்றங்களினால் தான் அவர்கள் அத்தகைய நிலையை அடைகிறார்கள். அவர்களும் நம்மைப்போன்ற மனிதர்கள் தான். அவர்களுக்கும் இந்த உலகில் வாழ உரிமை உள்ளது. அந்த உரிமையைத்தான் இப்போது உச்சநீதிமன்றம் வரலாற்று தீர்ப்பாக வழங்கியுள்ளது.

இல்லாவிட்டால் அத்தகைய மனிதர்களின் நிலை என்ன ஆவது?

இந்த பிரச்சனை இந்தியாவில் மட்டுமல்ல, உலக நாடுகள் பலவற்றிலும் உள்ளது. ஏற்கனவே பல நாடுகளில் இதனை ஏற்றுக்கொண்டுவிட்டார்கள். ஒரு தனிநபருடைய விருப்பத்தில் யாரும் தலையிட முடியாது. இது தான் சரி என்றோ அல்லது தவறு என்றோ நாமே தீர்மானிக்கக்கூடாது.

எல்லாவற்றிற்கும் அடிப்படை தேவை பாலியல் விழிப்புணர்வு தான்.

இல்லறத்தில்கூட தம்பதியர் மகிழ்ச்சியாக வாழ, ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு வாழ்க்கைத்துணையின் தேவையை நிறைவேற்ற வேண்டும். யாரும் ஒருவர் மீது ஒருவர் ஆதிக்கம் செலுத்தக்கூடாது. ஒருவருக்கு ஒருவர் விட்டுக்கொடுத்து வாழ்வார்களேயானால் அவர்களது வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். ”

இவ்வாறு காமராஜ் பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x