Published : 11 Sep 2018 08:19 PM
Last Updated : 11 Sep 2018 08:19 PM

குற்றவாளிகளை நள்ளிரவில் தனியாகச் சென்று பிடித்த போக்குவரத்து காவலர்கள்: காவல் ஆணையர் பாராட்டி வெகுமதி

இருவேறு சம்பவங்களில் லாரி ஓட்டுநரை கத்தியால் தாக்கி செல்போன் பறித்துச் சென்ற குற்றவாளி, கால்டாக்சி ஓட்டுநரை கடத்தி வந்து தாக்கிய ஆட்டோ ஓட்டுநர்களை மடக்கி பிடித்த போக்குவரத்து காவலர்களுக்கு காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் பாராட்டி வெகுமதி அளித்தார்.

தேனி மாவட்டம் போடி, பத்ராகாளிபுரத்தை சேர்ந்தவர் முருகேசன் (23). தனியார் லாரி டிரான்ஸ்போர்ட்டில் கண்டெய்னர் லாரி ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். நேற்றிரவு கண்டெய்னர் லாரியில் சரக்குகளுடன் துறைமுகத்தில் இறக்குவதற்காக வந்துள்ளார்.

இரவு 10.30 மணியளவில், எண்ணூர் விரைவு சாலை, தாங்கல் பெட்ரோல் பங்க் அருகே துறைமுகம் உள்ளே செல்ல வரிசையில் நின்றிருந்தார். அப்பொழுது அங்கு வந்த 2 நபர்கள் லாரி ஓட்டுநர் முருகேசனிடம் கத்தியைக் காட்டி பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். முருகேசன் பணம் தர மறுத்துள்ளார். உடனே அவர்கள் 2 பேரும் முருகேசனின் கையில் கத்தியால் தாக்கி, அவரது பாக்கெட்டில் இருந்த செல்போன் மற்றும் ரூ.1500/- ரொக்கப் பணத்தை பறித்துக் கொண்டு தப்பி சென்றனர்.

உடனே முருகேசன் சத்தம் போட்டுக் கொண்டே அங்கு போக்குவரத்து பணியிலிருந்த திருவொற்றியூர் போக்குவரத்து காவல் நிலைய தலைமைக் காவலர் குமாரிடம் விபரத்தை கூறியுள்ளார். குமார் விரைந்து செயல்பட்டு அவர்களை துரத்திச் சென்று குற்றவாளிகளில் ஒருவரான எர்ணாவூர் நேதாஜி நகரைச் சேர்ந்த ராம்குமார் (29) என்பவரை பிடித்து திருவொற்றியூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.

இரத்தக் காயமடைந்த லாரி ஓட்டுநர் முருகேசனை அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். மேலும், பணம் மற்றும் செல்போனுடன் தப்பிச் சென்ற மற்றொரு குற்றவாளியான எண்ணூரைச் சேர்ந்த மதன் (32) என்பவரை போலீஸார் கைது செய்தனர்.

இதே போன்று திருவொற்றியூர் போக்குவரத்து காவல் நிலைய தலைமைக் காவலர் முருகானந்தம் என்பவர் நேற்று இரவுப் பணியிலிருந்துள்ளார். இன்று அதிகாலை 03.30 மணியளவில் எண்ணூர் எக்ஸ்பிரஸ் சாலை, எல்லையம்மன் கோயில் அருகே பணியிலிருந்தபோது, அவ்வழியே சென்ற பொதுமக்கள் சற்று தொலைவில் அப்பர் சாமி தெருவில் ஆட்டோவில் ஒரு நபரை 2 பேர் தாக்கி கொண்டிருப்பதாக கூறியுள்ளனர்.

உடனடியாக தலைமைக் காவலர் முருகானந்தம் சம்பவ இடத்திற்கு தனியாகச் சென்று பார்த்தபோது, அங்கு ஆட்டோ ஓட்டுநர்கள் இரண்டுபேர் கால் டாக்சி ஓட்டுநர் ஒருவரை தாக்கி அவரிடமிருந்து செல்போன் பறிக்க முயன்றுள்ளனர். அவர்களை தடுத்து ஆட்டோ ஓட்டுநர்களிடமிருந்து செல்போனை பறிமுதல் செய்து, திருவொற்றியூர் காவல் நிலையத்தில் அவர்களை ஒப்படைத்தார்.

விசாரணையில், மேற்படி கால் டாக்சி ஓட்டுநர் கோர் மேலியூ, (29) என்பவர் கால் டாக்சியில் திருவொற்றியூர் சன்னதி தெரு அருகே சென்று கொண்டிருந்தபோது, மேற்படி ஆட்டோ ஓட்டுநர்களில் பிரசாந்த் என்பவரது ஆட்டோவை இடித்துவிட்டதால், பிரசாந்த் மற்றும் அவரது நண்பர் சுகந்தர் ஆகியோர் கால் டாக்சி ஓட்டுநரை தங்களது ஆட்டோவில் ஏற்றிக் கொண்டு, அப்பர் சாமி தெரு, பீச் ரோடுக்கு அழைத்துச் சென்று அவரை தாக்கி அவரிடமிருந்து செல்போன் பறித்துக் கொண்டு மேலும் பணம் கேட்டுத் தாக்கியுள்ளனர்.

கடத்தி தாக்குதல், வழிப்பறியில் ஈடுபட்ட ஆட்டோ ஓட்டுநர்கள் திருவொற்றியூரைச் சேர்ந்த பிரசாந்த் (25) மற்றும் சுகந்தர் (28) ஆகிய 2 பேரை கைது செய்து, அவர்களது ஆட்டோவையும் போலீஸார் பறிமுதல் செய்தனர்.

மேற்கண்ட இரண்டு சம்பவங்களில் செல்போன் பறிப்பில் ஈடுபட்ட குற்றவாளிகளை கைது செய்து, காவல் நிலையத்தில் ஒப்படைத்த திருவொற்றியூர் போக்குவரத்து காவல் நிலைய தலைமைக் காவலர் குமார் மற்றும் முருகானந்தம் ஆகியோரை சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விசுவநாதன் நேரில் அழைத்து வெகுமதி வழங்கிப் பாராட்டினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x