Published : 11 Sep 2018 07:10 PM
Last Updated : 11 Sep 2018 07:10 PM

குட்கா மாதவராவ் உள்ளிட்ட 5 பேருக்கு சிபிஐ காவல்: யார் யாருக்கு பணம் கைமாறியது என்பது குறித்து விசாரணை

குட்கா முறைகேட்டில் அமைச்சர்கள், அதிகாரிகளுக்கு, பல கோடி ரூபாய் லஞ்சம் கொடுத்தது தொடர்பான விவரங்கள் அடங்கிய டைரி சிக்கியதை அடுத்து இதில் முறையாக விசாரணை நடக்கவில்லை என திமுக தொடர்ந்த வழக்கில் உயர் நீதிமன்றம் கடந்த ஆகஸ்ட் மாதம் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது.

கடந்த 5-ம் தேதி அமைச்சர் விஜயபாஸ்கர், டிஜிபி டிகே ராஜேந்திரன், முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ் உள்ளிட்டோர் வீடு அலுவலகங்கள் உட்பட 35 இடங்களில் சோதனை நடந்தது. சோதனையை தொடர்ந்து கடந்த 6-ம் தேதி காலை இடைத்தரகர்கள் 2 பேர், குட்கா கிடங்கு உரிமையாளர்கள் மாதவ்ராவ், சீனிவாசராவ், உமாஷங்கர் குப்தா மூவரும் கைது செய்யப்பட்டனர். அவர்களுடன் உணவுப்பாதுகாப்புத்துறை அதிகாரி செந்தில்குமார், கலால் வரித்துறை அதிகாரி பாண்டியன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.

இதில் புரோக்கர்கள் ராஜேந்திரன், நந்தக்குமார் இருவரைத்தவிர மற்ற ஐந்து பேரையும் சிபிஐ முதன்மை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்நிலையில் இந்த வழக்கில் சிபிஐ 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க மனு அளித்தது. “இந்த வழக்கில் யார் யாருக்கெல்லாம் பணம் வழங்கப்பட்டுள்ளது, எவ்வளவு பணம் வழங்கப்பட்டுள்ளது, என்பது குறித்த விபரங்கள் திரட்ட வேண்டியுள்ளது. ஆரம்பக்கட்ட விசாரணையில் இவர்கள் குற்றம் இழைத்ததற்கான பல்வேறு ஆதாரங்கள் உள்ளது என்று காரணங்களை தெரிவித்து காவலில் விசாரிக்க கோரிக்கை வைக்கப்பட்டது. இதையடுத்து சிபிஐ முதன்மை நீதிமன்ற நீதிபதி திருநீலப்பிரசாத் 4 நாட்கள் காவலுக்கு அனுமதி அளித்தார். இதையடுத்து நேற்று மாலைமுதல் 5 பேரிடமும் சிபிஐ கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தி வருகிறது.

முதற்கட்டமாக குட்கா விசாரணையில் யார் யாருக்கெல்லாம் பணம் கொடுக்கப்பட்டது, காவல் அதிகாரிகள், அரசு அதிகாரிகள், அமைச்சர் உள்ளிட்டோர் தொடர்பு குறித்தும், கைமாறியப்பணம் மற்ற விபரங்கள் குறித்தும் விசாரிக்கப்படும்.

இதேபோன்று கைது செய்யப்பட்டுள்ள அரசு அதிகாரிகளிடமும் அவர்கள் பணம் பெற்றது, வேறு அதிகாரிகள் அரசியல்வாதிகள் தொடர்பு குறித்து விசாரணை நடத்தப்படும். விசாரணையின்போது கிடைக்கக்கூடிய தகவல்களை வைத்து அடுத்தக்கட்ட விசாரணை நடக்கும். நான்கு நாட்கள் சிபிஐ காவலில் முக்கிய காவல் அதிகாரிகள் சிக்குவார்கள் என தெரிகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x