Published : 11 Sep 2018 06:28 PM
Last Updated : 11 Sep 2018 06:28 PM

எங்களிடம் கருத்து மோதல்கள் உள்ளன: அமைச்சர் செல்லூர் ராஜூ பேச்சால் அதிமுகவினர் அதிர்ச்சி

எங்களிடம் கருத்து மோதல்கள் உள்ளன, மறுக்கவில்லை என்று திருப்பரங்குன்றத்தில் நடந்த ‘பூத்’ கமிட்டி ஆலோசனைக் கூட்டத்தில் கட்சி நிர்வாகிகள் மத்தியில் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ பேசியதால் அதிமுகவினர் அதிர்ச்சியடைந்தனர்.

திருப்பரங்குன்றத்தில் இடைத்தேர்தல் ‘பூத்’ கமிட்டி ஆலோசனைக் கூட்டம் புறநகர் அதிமுக சார்பில் இன்று நடந்தது. புறநகர் மாவட்டச் செயலாளர் வி.வி.ராஜன் செல்லப்பா தலைமை வகித்தார். அமைச்சர்கள் செல்லூர் கே.ராஜூ, ஆர்.பி.உதயகுமார் மற்றும் எம்எல்ஏக்கள், நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இதில் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ பேசியதாவது:

அதிமுகவினர் தேர்தலைச் சந்திப்பதில் அனுபவம் மிக்கவர்கள். கற்ற பாடங்கள் ஏராளம். தேர்தலில் எதிரியை எப்படிச் சந்திக்க வேண்டும், எதிர்கொள்ள வேண்டும் என்பதில் வல்லவர்கள். அமைப்பு ரீதியாக கட்சி தொடங்காத காலத்தில் திண்டுக்கல் மக்களவைத் தேர்தலில் இரட்டை இலை சின்னம் கிடைத்த 15 நாளிலே திமுகவைத் தோற்கடித்தோம். கட்சி நிர்வாகிகளுக்கு, தொண்டர்களுக்கு ஆலோசனை சொல்லிதான் தேர்தல் களப்பணியாற்ற வேண்டும் என்றில்லை. கடந்த மக்களவைத் தேர்தலில் 37 இடங்களில் தனித்து நின்று அதிமுக வெற்றி பெற்றது. அதே வெற்றியை வரும் மக்களவைத் தேர்தலில் பெறுவோம். அதற்கு முன்னோட்டமாகதான் இந்த இடைத்தேர்தல். அதனால், பிரமாண்ட வெற்றி பெற வேண்டும்.

இடைத்தேர்தல் என்பது புதிதல்ல. நம்மில் கருத்து மோதல்கள் இருக்கும். இருக்கதான் செய்யும். மறுக்கவில்லை. அதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், தேர்தல் களம் என்றுவந்துவிட்டால் எதிரியை வீழ்த்த ஒன்று சேர்ந்துவிடுவோம். சோடை போக மாட்டோம். இந்தப் பிரச்சனையை ஊதி ஊதிப் பெரிதாக்கி இயக்கத்தை காட்டிக்கொடுப்பவர்களைப் பற்றி கட்சி கவலைப்பட்டதில்லை. ஜெயலலிதா இருக்கும்போதே சில துரோகிகள் அடையாளம் காணப்பட்டார்கள். அவர்களைப் பற்றி எங்களுக்கு கவலையில்லை.

கடந்த 96-ம் ஆண்டிற்கு பிறகு 100 ‘சீட்’ கூட பிடிக்காத கட்சிதான் திமுக. எத்தனை கட்சிகள் கூட்டணி வைத்திருந்தாலும் அவர்களால் 100-ஐ எட்ட முடியவில்லை. பேச்சாற்றால், எழுத்தாற்றல், சாணக்கியத்தனம் அத்தனையும் பெற்ற கருணாநிதியாலே அதிமுகவை ஒன்றும் செய்ய முடியவில்லை. தற்போது திமுகவுக்கு தலைவராக வந்துள்ள ஸ்டாலினால் எந்த விதத்திலும் அதிமுகவை வீழ்த்த முடியாது. யார் வலிமையானவர்களோ அவர்களைதான் நாம் எதிர்க்க வேண்டும். ஆனால், சும்மா கூட்டம் கூடிவிட்டது என்பதற்காக தகுதியில்லாதவர்களை நாம் போட்டியாகக் கருதக்கூடாது.

இவ்வாறு அமைச்சர் செல்லூர் ராஜூ பேசினார்.

அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசும்போது, ''திருப்பரங்குன்றத்திற்கு ஒரு வரலாறு உண்டு. அந்த வரலாறு அதிமுகவுக்குச் சொந்தமானது. இடைத்தேர்தல் களத்தை சாமானியமாகச் சந்தித்துவிட முடியாது. அதற்காக வித்தை காட்டுபவர்களை மக்கள் நம்ப மாட்டார்கள். அப்படிப்பட்டவர்களிடம் இருந்து மக்களைக் காப்பாற்ற வேண்டும். ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது ஒரு புறம் கவலை, மற்றொரு புறம் திருப்பரங்குன்றம் தேர்தல் கவலை. அப்படியிருந்தும் திருப்பரங்குன்றத்தில் வெற்றி பெற்றோம். திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல், அதிமுகவின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் என்கிறார்கள். அது தவறு. எங்களை எதிர்ப்பவர்களுக்கு (அமமுக) கட்டமைப்பு இல்லை. அதிமுகவிடம் பல சார்பு அணிகள் உள்ளன. திமுகவில் உள்ள கட்டமைப்புகள் தலைமையின் கட்டளைக்கு கீழ்படியாதவை. அதிமுகவிடம் உள்ள கட்டமைப்புகள் வேறு எந்தக் கட்சியிடமும் இல்லை. இடைத்தேர்தல் எந்த நேரத்திலும் அறிவிக்கப்படலாம். அதைப் பற்றியெல்லாம் நாம் கவலைப்படத் தேவையில்லை. திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அதிமுகவைப் பற்றி பொய் பிரச்சாரங்கள் செய்கின்றனர். அந்தப் பிரச்சாரங்களை முறியடிக்க வேண்டும். நம்மிடம் இருந்து பிரிந்தவர்கள் கட்சிக்கு ஆள் பிடிக்கிறார்கள். அக்கட்சிக்கு அமைப்பு இல்லை'' என்றார்.

‘கை’யில் கட்டுடன் வந்த மாவட்டச் செயலாளர்

புறநகர் மாவட்டச் செயலாளர் வி.வி. ராஜன் செல்லப்பா எம்எல்ஏ, இன்று ‘கை’யில் கட்டுப்போட்டுக் கொண்டு கூட்டத்திற்கு வந்தார். அவர் கீழே விழுந்ததில் கையில் பலமான அடிபட்டு தசைப்பிடிப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அதனால், சிகிச்சையில் இருந்த அவர், ‘கை’யில் கட்டுடன் கூட்டத்திற்கு வந்தார். அவரிடம் நிர்வாகிகள் எல்லோரும் நலம் விசாரித்தனர்.

அமைச்சர் செல்லூர் ராஜூ பேசுகையில், ''நான் படிக்கிற காலத்திலே விவி.ராஜன் செல்லப்பா மாணவர் அணி மாவட்டச் செயலாளராக இருந்தவர். அப்போது பார்த்த சுறுசுறுப்பு இப்போதும் அவரிடம் உள்ளது. எங்களைப் போன்றவர்களுடைய கண் பட்டு விட்டதால் அவருக்கு விழுப்புண் ஏற்பட்டுள்ளது. இந்த விழுப்புண் நிச்சயமாக இடைத்தேர்தல் வெற்றிக்கு அச்சாரமாக அமையும் என்று கருதுகிறோம்'' என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x