Published : 11 Sep 2018 05:32 PM
Last Updated : 11 Sep 2018 05:32 PM

“மனம் இருக்கிறது; பணம் இல்லை”; பெட்ரோல் - டீசல் விலை குறைப்புக்கு அமைச்சர் ஜெயக்குமார் பதில்

பெட்ரோல் - டீசல் விற்பனை வரியை தமிழக அரசு குறைக்குமா என்ற கேள்விக்கு மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் பதிலளித்துள்ளார்.

சென்னை நந்தனத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்குப் பதிலளித்தார்.

சென்னையில் நடைபெறும் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு நிறைவு விழாவில் பிரதமர் மோடி கலந்துகொள்வாரா?

விழா நடைபெற இன்னும் நாட்கள் இருக்கின்றன. தேசியத் தலைவர்கள் வருகை குறித்து கட்சித் தலைமைதான் முடிவு செய்யும். அதுகுறித்து பின்னர் அறிவிக்கப்படும்.

ஏழு பேர் விடுதலை விவகாரம் எந்த நிலையில் உள்ளது?

உடனடியாக ஏழு பேரும் விடுதலை செய்யப்பட வேண்டும் என்று ஆளுநருக்கு பரிந்துரை செய்வதென அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. ஆளுநர் நிர்வாகத்தின் தலைவராக இருப்பதால், அன்றைக்கே அவருக்கு அந்தப் பரிந்துரை அனுப்பப்பட்டது. தமிழக மக்களின் உணர்வை மதித்து, ஆளுநர் உரிய நடவடிக்கை எடுத்து ஒப்புதல் அளிப்பார் என்ற நம்பிக்கை உள்ளது.

அமைச்சரவையின் முடிவு தீவிரவாதப் போக்குடன் மென்மையாகச் செல்வது போன்றுள்ளது என்று விமர்சிக்கப்படுகிறதே?

காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜே வாலா கருத்தைத்தான் காங்கிரஸின் கருத்தாக எடுத்துக்கொள்ள முடியும். தமிழகத்தை நீண்டகாலம் ஆட்சி செய்த திமுக தமிழகத்திற்கு எந்தவொரு திட்டத்தையும் கொண்டு வரவில்லை. நீண்ட கால கோரிக்கையான எழுவர் விடுதலைக்கு எந்த நடவடிக்கையும் திமுக எடுக்கவில்லை.

திமுக தலைவர் ஸ்டாலின் வாய் கிழியக் கூச்சலிடுகிறார். கூட்டணிக் கட்சியான காங்கிரஸை திமுக நிர்பந்தப்படுத்தி தமிழர்களின் உணர்வை எடுத்துச் சொல்லி ஸ்டாலின் வலியுறுத்த வேண்டும். அதனைச் செய்ய ஸ்டாலின் தயாரா? அப்படி இல்லையென்றால் அந்தக் கூட்டணியில் நீடிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. அப்படியும் நீடித்தால் அது சந்தர்ப்பவாத கூட்டணி. திமுக இதுகுறித்து நிச்சயம் வாய்திறக்கப் போவதில்லை. அந்த தைரியமும் இல்லை.

 ஏற்கெனவே முள்ளிவாய்க்காலில் ஒன்றரை லட்சம் பேர் கொன்று குவிக்கப்பட்ட போது வாய்மூடி மவுனியாக இருந்தது திமுக. தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்தால் திமுக காங்கிரஸுக்கு நிர்பந்தம் கொடுக்க வேண்டும். இல்லையென்றால் கூட்டணியிலிருந்து விலகுவோம் எனச் சொல்ல வேண்டும்.

ஆளுநரின் முடிவுக்காக தமிழக அரசு எவ்வளவு நாட்கள் காத்திருக்கும்?

ஆளுநர் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தால் நியமிக்கப்படுபவர். ஆளுநருக்கு தமிழக அரசு காலக்கெடு கொடுக்க முடியாது. தமிழர்களின் உணர்வுக்கு ஆளுநர் மதிப்பளிப்பார் என்ற நம்பிக்கை உள்ளது. பொறுத்திருந்து பார்ப்போம்.

பெட்ரோல் - டீசல் விற்பனை வரியை தமிழக அரசு குறைப்பதற்கான வாய்ப்பிருக்கிறதா?

மத்திய அரசு சொல்லமுடியாத அளவுக்கு பெட்ரோல், டீசல் விலையை ஏற்றிக்கொண்டே போவது ஏற்றுக்கொள்ள முடியாது. ஆனால், மத்திய அரசுக்கு பல்வேறு வாய்ப்புகள் உள்ளன. வரியை இன்னும் அதிகரித்து வருமானத்தைக் கூட்டிக் கொள்வதற்கான வாய்ப்புகள் இருக்கும்போது, மத்திய கலால் வரியை 50 சதவீதம் குறைத்தாலே எல்லா மாநில மக்களும் பயன்பெறுவர்.

தமிழகத்தில் குறைந்தபட்ச வளம் தான் உள்ளது. ஓய்வூதியம், மானியம், சம்பளம் என சமூக நீதிக்கான மாநிலம் தமிழ்நாடு. சட்டியில் இருந்தால்தானே அகப்பையில் வரும். மனம் இருக்கிறது. ஆனால், அடிப்படைக் கட்டமைப்பு வசதிக்கு பணம் இல்லை. மத்திய அரசு தமிழகத்திற்கு தர வேண்டிய 6 ஆயிரம் கோடி ரூபாய் நிதி இன்னும் வரவில்லை''.

இவ்வாறு அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x