Published : 11 Sep 2018 04:23 PM
Last Updated : 11 Sep 2018 04:23 PM

2 நாய்களைக் கொன்று, கொள்ளையடிக்க திட்டம் போட்டுக் கொடுத்த பணிப்பெண்: வங்கி மேலாளர் வீட்டு கொள்ளையில் 4 பேர் கைது

ஜமீன் பல்லாவரத்தில் வங்கி மேலாளர் வீட்டில் 227 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் திட்டம் போட்டுக்கொடுத்த வீட்டு பணிப்பெண்ணும் 4 கொள்ளையர்களும் பிடிபட்டனர்.

சென்னை ஜமீன் பல்லாவரம் அருகே உள்ள பெருமாள் நகரில் யோக சேகரன் (55) என்பவர் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர் தி.நகரில் உள்ள ரெப்கோ வங்கியில் மேலாளராக பணியாற்றுகிறார். கடந்த ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் வீட்டில் தங்கியிருந்தார். அப்போது அவரது வீட்டுக்குள் நுழைந்த 4 பேர் கும்பல் கத்திமுனையில் அவர்களை மிரட்டியது.

பீரோ லாக்கர் சாவியை வாங்கி உள்ளே இருந்த 200 சவரன் தங்க நகைகளை எடுத்துக்கொண்டது. பின்னர் வெளியே வந்த அந்த கும்பல் யோகேஸ்வரன், அவரது மனைவி சுப்புலட்சுமி, வீட்டு பணிப்பெண் மகாராணி உள்ளிட்டோரை கயிற்றால் கட்டிப்போட்டது. அப்போது யோகேஸ்வரன் மனைவி சுப்புலட்சுமி அணிந்திருந்த 27 சவரன் மதிப்புள்ள, கழுத்திலிருந்த நகைகள், வளையல், கம்மலையும் கழற்றினர்.

மொத்தம் 227 சவரன் நகைகளுடன் அந்தக்கும்பல் தப்பிச்சென்றது. அவர்கள் சென்ற சிறிது நேரத்தில் கூச்சலிட்ட யோகேஸ்வரன் குடும்பத்தார் யாரும் உதவிக்கு வராததால் தாங்களே கட்டை அவிழ்த்துக்கொண்டு வெளியே வந்தனர். பின்னர் யோகேஸ்வரன் திருடு போனது குறித்து பல்லாவரம் போலீஸில் புகார் அளித்தார்.

போலீஸார் யோகேஸ்வரன் வீட்டுக்கு வந்து விசாரணை நடத்தினர். கொள்ளையர்கள் வீட்டிலிருந்த பணிப்பெண் மகாராணியின் செல்போனை மட்டும் எடுத்துச் சென்றது போலீஸாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. உடனடியாக அவரது கால் டீடெய்லை எடுத்தபோது சில நம்பர்கள் கிடைத்தது.

இதையடுத்து போலீஸார் வேலைக்காரி ராணியை பிடித்து விசாரணை நடத்தினர். பணிப்பெண் ராணி அப்போது கூறிய தகவல்கள் போலீஸாரை திடுக்கிட வைத்தது. பல ஆண்டுகளாக யோகேஸ்வரன் வீட்டில் வேலை செய்து வருகிறேன். அவர் வீட்டில் அவரது மகள் அடிக்கடி நகைகளை கொடுத்து யோகேஸ்வரனிடம் லாக்கரில் வைக்கச்சொல்வார். அவை எப்படியும் 200 சவரனுக்கு மேலிருக்கும்.

அதனால் அவைகளை கொள்ளையடிக்க முடிவு செய்தேன். இதற்காக எனது உறவினர்களிடம் தெரிவித்து அவர்கள் மூலம் திட்டம் போட்டோம். வீட்டில் யோகேஸ்வரன் அவரது மனைவி மட்டுமே இருப்பதால் எளிதாக கொள்ளையடிக்கலாம் என்று முடிவு செய்தோம்.

அதற்கான நேரத்தை எதிர்ப்பார்த்து காத்திருந்தபோது யோகேஸ்வரனின் மகள் தனது நகைகள் அனைத்தையும் யோகேஸ்வரனிடம் கொடுத்து வங்கி லாக்கரில் வைக்கச்சொல்லிவிட்டுச் சென்றார். இதுகுறித்து நான் எனது உறவினர்களுக்கு தகவல் கொடுத்தேன்.

அதன்படி ஞாயிற்றுக்கிழமை மதியம் யோகேஸ்வரன் அவரது மனைவி வீட்டில் தனியாக இருப்பதை பார்த்து அவர்களுக்கு தகவல் கொடுத்தேன். உடனடியாக அவர்கள் நான்குபேரும் வீட்டிற்குள் நுழைந்தனர். திட்டம் போட்டப்படி அவர்கள் கொள்ளையர்கள் போல் நடந்துக்கொண்டனர்.

நானும் நடித்தேன், எங்கள் மூன்றுபேரையும் கத்திமுனையில் கட்டிப்போட்டனர். பின்னர் நகைகளை கொள்ளையடித்த அவர்கள் அங்கிருந்து தப்பிச்சென்றனர். போகும்போது என்னுடைய செல்போனை எடுத்துச்சென்றதால் அதிலிருந்து போலீஸார் எந்த தகவலையும் எடுக்க முடியாது என்று திட்டம் போட்டோம்.

கொள்ளையடித்த நகைகளுடன் அவர்கள் தப்பிச்சென்றவுடன் நான் அப்பாவியாக இங்கிருந்து போலீஸ் விசாரணை மற்ற நடவடிக்கைகளை பார்த்து அவர்களுக்கு தகவல் சொல்வது என்றும், எல்லாப்பிரச்சினையும் ஓய்ந்தப்பிறது ஆளுக்கு ஒரு பங்காக பிரித்துக்கொள்வது என்றும் முடிவு செய்திருந்தோம்.

அதற்குள் எனது செல்போனே என்னை காட்டிக் கொடுத்துவிட்டது என்று கூறியுள்ளார். அவர் அளித்த தகவலை வைத்து மகாராணியையே வைத்து எல்லாம் நல்லபடியாக நடக்கிறது என்று போலீஸார் பேசவைத்தனர். பின்னர் அவர்கள் எங்கிருக்கிறார்கள் என்று கேட்க வைத்தனர்.

மகாராணி பேசிய எண்ணை வைத்து போலீஸாரும் ட்ராக் செய்ததில் அவர்கள் மதுரையில் இருப்பது தெரியவந்துள்ளது. கொள்ளையடித்த நகைகளுடன் தாங்கள் வந்த வாடகைக்காரிலேயே கோவைக்குச் சென்று அங்கு 7 சவரன் நகைகளை விற்று காசாக்கிக்கொண்டு அங்கிருந்து மதுரைக்கு தப்பிச் சென்றனர்.

அங்கு சென்ற அவர்களை பின் தொடர்ந்த தனிப்படை போலீஸார் அவர்கள் அனைவரையும் பிடித்துள்ளனர். அவர்கள் கொள்ளையடித்த தங்க நகைகள் அனைத்தையும் கோவையில் பதுக்கி வைத்திருப்பது தெரியவந்துள்ளது. பிடிபட்ட 4 பேரையும் போலீஸார் சென்னைக்கு அழைத்து வருகின்றனர்.

இதற்கிடையே போலீஸார் விசாரணையில் யோகேஸ்வரன் வீட்டில் வளர்த்து வந்த 2 நாய்கள் சில நாட்கள் இடைவெளியில் உயிரிழந்தது குறித்து தெரியவந்துள்ளது. கொள்ளைக்கு இடையூறாக இருந்ததால் பணிப்பெண் ராணியே அவற்றை விஷம் வைத்து கொன்றிருப்பதாக கூறப்படுகிறது. அவைகள் குறித்தும் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x