Published : 11 Sep 2018 02:41 PM
Last Updated : 11 Sep 2018 02:41 PM

மின் பகிர்மானக் கழகத்தையே இருட்டுக்குள் தள்ளியிருக்கிறார் அமைச்சர் தங்கமணி: ஸ்டாலின் குற்றச்சாட்டு

 வெளிச்சம் தரும் மின் பகிர்மானக் கழகத்தையே இருட்டுக்குள் தள்ளியிருக்கும் மின்துறை அமைச்சர் தங்கமணி, தமிழகம் முழுவதும் அறிவிக்கப்படாத மின்வெட்டை உடனடியாகக் கைவிட வேண்டும் என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில், “தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மானக் கழகத்தில் நடைபெற்றுள்ள ஊழல்கள், முறைகேடுகள் காரணமாக தமிழகத்தில் ஆங்காங்கே அறிவிக்கப்படாத மின்வெட்டுகள் அமலுக்கு வந்து கொண்டிருக்கின்றன என்று வரும் தகவல்கள் அதிர்ச்சியளிக்கின்றன.

சென்னையிலும், மதுரையிலும் ஏன் கிராமப்புறங்களிலும் கூட மின்வெட்டு செய்யப்படுவதும், விவசாயிகள் தங்களுக்குத் தேவையான மின்சாரம் கிடைக்காமல் தவிப்பதும், அதிமுக ஆட்சியில் இப்போதுள்ள மின்துறை அமைச்சர் தங்கமணியின் நிர்வாகம் அலங்கோலமாக மாறி, தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகத்தில் பேயாட்டம் போட்டுக் கொண்டிருக்கிறது.

மின் பகிர்மானக் கழகத்தில் தரமற்ற நிலக்கரியை வாங்கி, 12 ஆயிரத்து 250 கோடி ரூபாய்க்கும் மேல் இழப்பு; அதிக விலை கொடுத்து தனியார் நிறுவனங்களிடம் மின்சாரத்தை கொள்முதல் செய்ததில் ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கும் மேல் முறைகேடு; உதய் திட்டத்தில் கிடைத்த நிதியை நல்ல திட்டங்களுக்குப் பயன்படுத்தாமல் முறைகேடு; மின்வாரியத்திற்கு எலெக்ட்ரானிக் மீட்டர்கள் கொள்முதல் செய்ததில் மெகா ஊழல்; அதானி போன்ற தனியார் நிறுவனங்களிடமிருந்து விண்ணுயர விலை கொடுத்து சூரிய ஒளி மின்சாரம் வாங்க ஒப்பந்தம், மின் பொறியாளர்கள் மாறுதலுக்கு பதவி இடம் வாரியாக ஊழல் தொகை நிர்ணயம்; நியமனங்களில் தலைவிரித்தாடும் லஞ்ச லாவண்யம் என்று ஊழல்களின் அருவருப்பான தேரோட்டம் மின் பகிர்மானக் கழகத்தில் நடைபெற்று, அதிமுக ஆட்சியில் நிர்வாகம் அடியோடு ஸ்தம்பித்து நிற்கிறது.

நிர்வாகம் ஸ்தம்பித்து விட்டதால், மின் உற்பத்தியில் மிகப்பெரிய தேக்க நிலைமை ஏற்பட்டுள்ளது. தேவைப்படும் 13 ஆயிரத்து 260 மெகாவாட் மின்சாரத்தில் இப்போது 10 ஆயிரம் மெகாவாட் மின்சாரம்தான் கிடைக்கிறது. ஆகவே, 3 ஆயிரத்து 260 மெகாவாட் மின்சாரம் பற்றாக்குறையினால் மின் பகிர்மானக் கழகம் முச்சந்தியில் வந்து நிற்கிறது. இப்பற்றாக்குறையைப் போக்க ஆயிரத்து 600 மெகாவாட் மின்சாரம் கொள்முதல் செய்யப்படுகிறது என்றாலும், இன்னும் ஆயிரத்து 500 மெகாவாட் மின்சாரம் பற்றாக்குறையில் மின் பகிர்மானக் கழகம் தத்தளித்துக் கொண்டிருக்கிறது.

மின் பகிர்மானக் கழகத்தில் அதிமுக ஆட்சியில் உருவாக்கப்பட்டுள்ள வரலாறு காணாத நிதி நெருக்கடியால், பராமரிப்புச் செலவுகளுக்கு பணமில்லாமல் தடுமாற்றம், மின்பகிர்மானக் கழகத்திற்குத் தேவையான கேபிள்கள் கூட வாங்க இயலாமல் தவிப்பு, மின் திட்டங்களை விரைவில் நிறைவேற்றி முடிக்க முடியாத நிர்வாகத் திறமையின்மை போன்ற கருப்பு அத்தியாயம், மின் பகிர்மானக் கழக வரலாற்றில் ஊழல் அமைச்சர் தங்கமணியின் நிர்வாகத் திறமையின்மையால் எழுதப்படுகிறது.

அதனால், விரைவில் கடுமையான மின்வெட்டைச் சந்திக்கும் அபாயகரமான சூழ்நிலைக்கு தமிழக மக்கள் இன்றைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள். அதனால், மின் தேவையை சமாளிக்க பராமரிப்புப் பணி, பழுது என்ற போர்வையில் மின்வெட்டுகளை அமல்படுத்துங்கள் என்று வாய்மொழியாக உத்தரவிடப்பட்டுள்ளதாகவும், அதை முன்னிட்டே திடீர் திடீரென்று, தமிழகம் முழுவதும் ஆங்காங்கே மின்வெட்டுகள் அரங்கேறி, மக்களை இன்னலுக்கு உள்ளாக்கி வருவதாகவும் தகவல்கள் வருகின்றன.

அதிமுக ஆட்சியில் ஒரு லட்சம் கோடிக்கு மேல் ஊழல் செய்து, மக்களுக்கு வெளிச்சம் தரும் மின் பகிர்மானக் கழகத்தையே இருட்டுக்குள் தள்ளியிருக்கும் முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதனும், இன்றைய அமைச்சர் தங்கமணியும் மக்களுக்கு மிகப்பெரிய மன்னிக்க முடியாத துரோகத்தைச் செய்திருக்கிறார்கள். மக்கள் தலையில் தாங்க முடியாத மின் கட்டணங்களைச் சுமத்தி வைத்து டெண்டர்கள் மூலம் தாராளமாகக் கொள்ளையடித்துள்ளார்கள்.

இந்நிலையில் திங்கள்கிழமை மின் உற்பத்தி குறித்து மின்துறை அமைச்சர் ஆய்வு செய்திருப்பதாக செய்திகள் வெளிவந்தாலும், உண்மை என்னவென்றால் ஒரு அறிவிக்கப்படாத மின் வெட்டு தமிழகத்தில் அமல்படுத்தப்படுகிறது என்றும், அதற்கு முன்னோட்டமாகத்தான் இந்த அதிகாரிகள் கூட்டத்தை மின் துறை அமைச்சர் தங்கமணி கூட்டியிருக்கிறார் என்பதும், வெட்ட வெளிச்சமாகியுள்ளது.

ஆகவே, பராமரிப்பு என்ற போர்வையிலும், பழுது என்ற போர்வையிலும் மக்களையும், விவசாயிகளையும், சிறு மற்றும் குறு தொழில் நிறுவனங்களையும் கடும் பாதிப்புக்குள்ளாக்கும் அறிவிக்கப்படாத மின்வெட்டுகளை உடனடியாகக் கைவிட வேண்டும். மின்பகிர்மானக் கழகத்தில் அதிமுக உருவாக்கியுள்ள நிதி நெருக்கடியை நீக்கி, மின் உற்பத்தியில் அதிக கவனம் செலுத்தி, மின் பற்றாக்குறையைப் போக்க உரிய நடவடிக்கைகளை எடுத்திட வேண்டும்” என்று ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x