Published : 11 Sep 2018 01:38 PM
Last Updated : 11 Sep 2018 01:38 PM

அண்ணா அறிவாலயத்தில் நிறுவத் தயாராகும் கருணாநிதியின் முழு உருவச் சிலை: ஸ்டாலின் நேரில் பார்வை

திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் நிறுவுவதற்காக உருவாக்கப்படும் கருணாநிதியின் முழு உருவச் சிலையின் மாதிரியை திமுக தலைவர் ஸ்டாலின் நேரில் பார்த்து திருத்தங்களைத் தெரிவித்தார்.

திமுகவின் தலைவரும் முன்னாள் முதல்வருமான மறைந்த கருணாநிதியின் 8 அடி உயரமுள்ள வெண்கலச் சிலை திமுகவின் தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் விரைவில் அமைக்கப்பட உள்ளது. இதற்காக கருணாநிதியின் முழு உருவ வெண்கலச் சிலையை வடிவமைக்கும் பணி, திருவள்ளூர் மாவட்டம் புதுப்பட்டு பகுதியில் நடைபெற்று வருகிறது.

சிற்பி தீனதயாளன் என்பவர் சிலையை வடிவமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். அறிவாலயத்தில் வைக்கப்படும் கருணாநிதி சிலையின் மாதிரி வடிவத்தை சிற்பி தீனதயாளன் தயாரித்துள்ளார். சிலையின் மாதிரியைப் பார்வையிடவும், திருத்தம் ஏதாவது இருந்தால் சுட்டிக்காட்டவும் திமுக தலைவர் ஸ்டாலின் சிற்பக்கூடத்துக்கு நேரில் சென்று பார்வையிட்டார். அவருடன் எ.வ.வேலு உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

சிரித்த முகத்துடன் ஒரு கையை உயர்த்தி கையசைக்கும் விதமாக சிலை அமைக்கப்பட்டுள்ளது. சிலையைப் பார்வையிட்டபின், முகத்தில் சில மாறுதல்கள் செய்யுமாறு சிற்பியிடம் மு.க.ஸ்டாலின் கூறினார்.

சிற்பி தீனதயாளன் இதற்கு முன்னர் அண்ணா அறிவாலயத்தில் உள்ள அண்ணா சிலையையும், அன்பகத்தில் உள்ள கண்ணகி சிலை, முரசொலி அலுவலகத்தில் உள்ள முரசொலி மாறன் சிலையை வடிவமைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது,

இந்தச் சிலை கருணாநிதி மறைந்த நூறாவது நாளில் அண்ணா அறிவாலயத்தில் அமைக்கப்பட உள்ளதாக திமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x