Published : 11 Sep 2018 11:59 AM
Last Updated : 11 Sep 2018 11:59 AM

பெண் பத்திரிகையாளரை மிரட்டிய அமைச்சரின் கூட்டாளி மீது நடவடிக்கை தேவை: தினகரன்

பெண் பத்திரிகையாளரை மிரட்டிய அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் நெருங்கிய கூட்டாளியான சந்திரபிரகாஷ் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உறவினர்கள், பினாமிகள் பெயரில் டெண்டர்கள் விடுவதாகவும், அவருடைய சொத்துகள் குறித்தும் பிரபல ஆங்கில தொலைக்காட்சி சமீபத்தில் செய்தி வெளியிட்டது. இதையடுத்து அந்தத் தொலைக்காட்சியின் மீது வழக்குப் போட உள்ளதாக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், அந்தத் தொலைக்காட்சி நிறுவனத்துக்கு சொந்தமான பிரபல ஆங்கில செய்தித்தாளின் பெண் பத்திரிகையாளர் கோமல் கவுதம் என்பவரின் வாட்ஸ் அப்பில் அவரைத் தரக்குறைவான வார்த்தைகளில் திட்டி கோவை மாநகராட்சி ஒப்பந்ததாரர் சந்திரபிரகாஷ் மெசேஜ் அனுப்பியது சமூக வலைதளங்களில் வைரலானது. இதுகுறித்து பலரும் கண்டனக் குரல் எழுப்பினர்.

இதையடுத்து, சென்னை காவல் ஆணையரிடம் செய்தியாளர் கோமல் கவுதம் இதுகுறித்து புகார் அளித்துள்ளார். மேலும், பெண் பத்திரிகையாளரை மிரட்டிய சந்திரபிரகாஷ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் கோவை காவல் ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இதுகுறித்து அம்மா மக்கள் முன்னேற்றக் கழக துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், “அமைச்சர் வேலுமணி தனது உறவினர்களுக்கும் கூட்டாளிகளுக்கும் முறைகேடாக மாநகராட்சி பணி ஒப்பந்தங்கள் அளித்து பல கோடி ரூபாய் ஊழல் செய்துள்ளதாக ஆங்கில தொலைக்காட்சி செய்தி வெளியிட்டது.

இதையடுத்து, ஒப்பந்ததாரர் சந்திரபிரகாஷ் பெண் பத்திரிகையாளர் ஒருவரை மிகவும் தரக்குறைவான வார்த்தைகளில் மிரட்டியதோடு மட்டுமல்லாமல், அவர் மீது அவதூறும் பரப்பியுள்ளார். வேலுமணியின் நெருங்கிய கூட்டாளியான இவரது செயல் வன்மையாக கண்டிக்கதக்கது.

முதல்வர் பழனிசாமி ஆட்சியில் ஊடகங்கள் மிரட்டப்படுவதும், பத்திரிகையாளர்கள் குறிப்பாக பெண்கள் தரக்குறைவான வார்த்தைகளால் அவமானப்படுத்தப்படுவதும் வாடிக்கையாகி விட்டது.

பெண் பத்திரிகையாளர்களைப் பற்றி அவதூறான கருத்து தெரிவித்த எஸ்.வி.சேகர் மீது இதுவரை எவ்வித நடவடிக்கையும் தமிழக அரசு எடுக்காத நிலையில், அமைச்சர் ஒருவரின் நெருங்கிய கூட்டாளியே தற்போது பெண் நிருபரை தரக்குறைவாக பேசியிருக்கிறார்.

ஜனநாயகத்தின் நான்காவது தூணான ஊடகத் துறையை சேர்ந்தவர்களுக்கே இத்தகைய பாதுகாப்பற்ற சூழ்நிலை நிலவி வருகிறது என்றால், சாமானிய மக்களின் நிலை என்ன என்ற கேள்வி எழுகிறது. காவல்துறையினர் உடனடியாக சந்திரபிரகாஷ் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஒவ்வொரு நாளும் தங்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் வெளியாகி வரும் விரக்தியில், கருத்து சுதந்திரத்தை நசுக்க முயலும் பழனிசாமி அரசுக்கு விரைவில் மக்கள் பாடம் புகட்டுவார்கள்” என டிடிவி தினகரன் பதிவிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x