Last Updated : 11 Sep, 2018 09:41 AM

 

Published : 11 Sep 2018 09:41 AM
Last Updated : 11 Sep 2018 09:41 AM

அதிக அளவில் செயின் பறிப்புகள் நடக்கும் நேரத்தை கண்டறிந்த போலீஸ்; மாலை 5 முதல் 9 மணி வரை ரோந்து பணியை தீவிரப்படுத்த முடிவு: கண்காணிப்பு கேமராக்களை பொருத்தவும் கோரிக்கை

சென்னையில் மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை அதிக அளவில் செயின் பறிப்புகள் நடைபெறுவதாக போலீஸாரின் கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.

சென்னையில் செயின் பறிப்பு, வழிப்பறி, திருட்டு உள்ளிட்ட சம்பவங்கள் தொடர்ந்து வருகிறது. குறிப்பாக 2017-ம் ஆண்டு 712 கொள்ளை, 615 செயின் பறிப்பு, 520 செல் போன் பறிப்புகள் நடைபெற்றன. 2018-ல் ஜூன் வரை 394 கொள்ளை, 200 செயின் பறிப்பு, 230 செல்போன் பறிப்புகள் நிகழ்ந்தன.

சென்னை காவல் ஆணையர் ஆய்வு

இதைத் தொடர்ந்து கடந்த ஜூன் 12-ம் தேதி சென்னை முழுவதும் போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனை 10 நாட்களுக்கு மேலாக நீடித்தது. இதில், குற்ற பின்னணி உடைய சுமார் 5 ஆயிரம் பேர் பிடிபட்டனர். சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் ஜூன் 15 நள்ளிரவு நேரடியாக போலீஸாரின் வாகன சோதனையை கண்காணித்தார்.

இருப்பினும் செயின் மற்றும் செல்போன் பறிப்புகள் முழுவதும் கட்டுக்குள் வரவில்லை. கடந்த 10 நாட்களுக்கு முன்னர் நடை பயிற்சியில் இருந்த சென்னை போலீஸ் ஐஜி ஒருவரின் செல்போன் பறிக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து செல்போன் மற்றும் செயின் பறிப்பு கொள்ளையர்களை சென்னை காவல் ஆணையர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்து வருகிறார். அதன்படி, கடந்த 7-ம் தேதி ஈரானிய கொள்ளையர்களான மும்பையைச் சேர்ந்த பாகர் அலி, தவுபிக் தேசிப் உசேன் குண்டர் சட்டத்தில் சிறைக்கு அனுப்பப்பட்டனர்.

வழிப்பறியை முற்றிலும் கட்டுப்படுத்தும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக சென்னையில் எந்த நேரத்தில் அதிக அளவில் செல்போன் மற்றும் செயின் பறிக்கப்படுகிறது என போலீஸார் கணக்கெடுத்தனர். இதில் கடந்த மாதம் மட்டும் 90 செயின் பறிப்புகள் நிகழ்ந்துள்ளதாக வழக்கு பதியப்பட்டுள்ளது. குறிப்பாக அதிகாலை 4 மணி முதல் காலை 7 மணிவரை 13 செயின் பறிப்புகளும் மாலை 5 மணிமுதல் இரவு 9 மணிவரை 27 செயின் பறிப்புகளும் இரவு 9 மணி முதல் நள்ளிரவு 12 மணிவரை 21 செயின் பறிப்புகளும் நிகழ்ந்துள்ளன.

இதுபோக மதியம் 2 மணி முதல் 5 மணி வரையும் பரவலாக செயின் மற்றும் செல்போன்கள் பறிக்கப்பட்டுள்ளதாக கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளன. இதைத் தொடர்ந்து குற்றச்சம்பவம் அதிகம் நடக்கும் மாலை 5 முதல் இரவு 9 மணி வரை ரோந்து பணியை தீவிரப்படுத்த காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டுள்ளார். சென்னையில் உள்ள 12 காவல் மாவட்ட துணை ஆணையர்களும் தினமும் செல்போன், செயின் பறிப்பு தொடர்பாக காவல் ஆணையருக்கு தகவல் தெரிவிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கண்காணிப்பு கேமரா

இதுகுறித்து போலீஸ் அதிகாரிகளிடம் கேட்டபோது, "செல்போன் மற்றும் செயின் பறிப்பில் பெரும்பாலும் பைக்கில் ஹெல்மெட் அணிந்து வரும் ஆசாமிகளே அதிக அளவில் ஈடுபடுகின்றனர். இந்த வகை குற்றத்தில் 18 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களும் ஈடுபடுகின்றனர். பெரும்பாலான குற்றவாளிகளை கைது செய்துள்ளோம். தலைமறைவாக உள்ளவர்களையும் விரைவில் கைது செய்வோம். குற்றவாளிகளை அடையாளம் காண்பதில் கண்காணிப்பு கேமராக்களின் பங்களிப்பு அதிகமாக உள்ளது. அதனால் அனைவரும் வீடு, அலுவலகங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும்" என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x