Published : 11 Sep 2018 09:27 AM
Last Updated : 11 Sep 2018 09:27 AM

பெட்ரோல், டீசல் விலையை கட்டுப்படுத்தாவிட்டால் பணவீக்கம் ஏற்பட்டு நாட்டின் பொருளாதாரமே பாதிக்கப்படும்: நிபுணர்கள் எச்சரிக்கை; அரசுகளின் கடமை குறித்து அறிவுறுத்தல்

பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்துகொண்டே போகிறது. தமிழகத்தில் நேற்றைய நிலவரப்படி, ஒரு லிட்டர் பெட் ரோல் விலை ரூ.83.66, டீசல் விலை ரூ.76.75. நாளுக்கு நாள் விலை உயர்வதால், அத்தியா வசியப் பொருட்களின் விலையும் அதிகரிக்கிறது. கச்சா எண்ணெய் விலையேற்றம் என்பது இந்தியப் பொருளாதாரத்தின் அடித்தளத் தையே ஆட்டிப் படைக்கும் வலி மைமிகு எதிரியாக வளர்ந்து நிற்கிறது.

இதற்கிடையே, எரிபொருட் களின் விலை உயர்வைக் கட்டுக் குள் கொண்டுவரவும், பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு மாற்றாக பேட்டரி, சூரிய சக்தியில் இயங்கும் வாகனங்களின் பயன்பாட்டை அமெரிக்கா, இங்கிலாந்து, ஜப்பான், ஜெர்மனி, பிரான்ஸ், நார்வே போன்ற நாடுகள் அதி கரித்து வருகின்றன. ஆனாலும், மாற்று வளங்களை அதிகமாக கொண்டுள்ள நம் நாட்டில் இது போன்ற திட்டங்களுக்கு மத்திய, மாநில அரசுகள் முக்கியத்துவம் தரவில்லை.

இந்த சூழலில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்துவது எப்படி? இதற்கான மாற்று ஏற் பாடுகள் என்ன? இந்த விஷயத்தில் மத்திய, மாநில அரசுகள் செய்ய வேண்டியது என்ன என்பது குறித்து துறை நிபுணர்கள் கூறுவதாவது:

பொருளாதாரமே பாதிக்கும்

பொருளாதார நிபுணர் பேராசிரி யர் வெங்கடேஷ் பி.ஆத்ரேயா: பெட்ரோல், டீசலுக்கு மத்திய, மாநில அரசுகள் கலால் வரி விதிக் கின்றன. கடந்த 4 ஆண்டுகளாக சர்வதேச அளவில் கச்சா எண் ணெய் விலை குறைந்தபோது, உள்நாட்டில் பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு குறைக்க வில்லை. ஆனால், மத்திய அரசு தொடர்ந்து கலால் வரியை உயர்த்தி வருவாயை பெருக்கிக் கொண்டுள்ளது. மத்திய அரசுக்கு கலால் வரி மூலமாக மட்டும் ஆண் டுக்கு சுமார் ரூ.1 லட்சம் கோடி கிடைக்கிறது.

தற்போது வரலாறு காணாத அளவுக்கு பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துவரும் நிலையில், மாநில அரசுகள் கலால் வரியை குறைக்கலாம் என மத்திய அரசு அறிவுறுத்துகிறது. பல்வேறு வளர்ச்சி திட்டங்களைச் செயல் படுத்துவதால் மாநில அரசுகள் ஏற்கெனவே நிதி நெருக்கடியில் இருக்கின்றன. மத்திய அரசின் கொள்கை முடிவுகளின் காரணமாக, மாநில அரசுகளின் வரி வருவாய் குறைந்து வருகிறது. மாநில அரசுகளின் திட்ட செலவுகள் அதிகரித்துள்ளன. இதனால், மாநில அரசுகள் கலால் வரியை குறைப்பது கஷ்டமானது.

தவிர, சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை ஏற்ற, இறக்கமாக இருந்து வருகிறது. மத்திய அரசு கலால் வரியைக் குறைப்பதால் எண்ணெய் நிறுவ னங்களுக்கு பாதிப்பு ஏற்படாமல், பெட்ரோல், டீசல் விலையைக் கட்டுப்படுத்தலாம்.

நாட்டின் மொத்த எண்ணெய் தேவையில் 90 சதவீதம் இறக்குமதி செய்யப்படுகிறது. நாட்டின் மொத்த இறக்குமதி செலவில் 33 சதவீதம் எண்ணெய்க்காக செல விடப்படுகிறது. மத்திய அரசு பொதுத்துறை நிறுவனங்கள் மூலம் முதலீடு செய்து உள்நாட்டில் உற் பத்தியை சற்று அதிகரித்திருந்தால், இறக்குமதியை ஓரளவு குறைத்து, விலை உயர்வை கட்டுக்குள் கொண்டுவந்திருக்கலாம். பெட் ரோல், டீசல் விலையை கட்டுப் படுத்தி, படிப்படியாக குறைக்க நடவடிக்கை எடுக்காவிட்டால் அத் தியாவசியப் பொருட்கள் மேலும் விலை உயர்ந்து, பணவீக்கம் ஏற் படும். ரூபாய் மதிப்பு குறைந்து, பொருளாதாரமே பாதிக்கப்படும்.

பொது போக்குவரத்து மேம்பாடு

சென்னை ஐஐடி உதவி பேராசிரியர் கீதகிருஷ்ணன்: அதிகரிக்கும் மக்கள் தொகைக்கு ஏற்ப, பொது போக்குவரத்து கட்டமைப்பு வசதி என்பது முக்கியமானது. பெருநகரங்களில் மக்கள்தொகை அதிகரித்துவரும் நிலையில் பொது போக்குவரத்து வசதியை மேம்படுத்த வேண்டும். அதனால், சுற்றுச்சூழல் பாதுகாக் கப்படுவதோடு, பெட்ரோல், டீசல் தேவையும் கணிசமாக குறையும். இந்தியாவில் தற்போதைய நிலை நேர்மாறாக உள்ளது. 2000-01-ம் ஆண்டில் 75 சதவீதமாக இருந்த மக்களின் பொது போக்குவரத்து பயன்பாடு படிப்படியாக குறைந்து வருகிறது. 2030-ல் இது 44 சதவீதமாக குறைந்துவிடும் என ஆய்வு முடிவுகள் கூறுகின்றன.

இதை கருத்தில் கொண்டு, குடி யிருப்பு பகுதிகளையும் இணைக் கும் வகையில் பொது போக்கு வரத்து வசதியை மேம்படுத்த வேண்டும். பேருந்து, ரயில், மெட்ரோ ரயில் போக்குவரத்தை மேம்படுத்த வேண்டும். இந்த வசதிகளை மேம்படுத்தினாலேயே மக்கள் பொது போக்குவரத்தை அதிகம் பயன்படுத்துவார்கள். தனியார் வாகனங்கள் குறைவதால் பெட்ரோல், டீசல் தேவையும் கணிசமாக குறையும்.

சென்னை போன்ற மாநகரங் களில் பேட்டரி பேருந்துகளின் பயன்பாட்டை அதிகரிக்க வேண் டும். இதுபோன்ற திட்டங்களுக்கு ஆரம்பத்தில் அதிக தொகை செலவிட்டாலும், நீண்ட காலமாக செயல்படுத்தும்போது, பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கான செலவைவிட குறைவுதான்.

சுமையை குறைப்பது எப்படி?

தமிழ்நாடு பெட்ரோலிய வணிகர்கள் சங்க மாநில தலைவர் முரளி: பெட்ரோல், டீசல் விலை உயரும்போது எல்லாம், மக்கள் பாதிக்கப்படாமல் இருக்க, அந்த விலை உயர்வை மத்திய அரசே ஓரளவுக்கு ஏற்றுக்கொள்ளும். ஆனால், இந்த நடைமுறை கடந்த 2012-ல் ரத்து செய்யப்பட்டது. எனவே, பெட்ரோல், டீசல் விலை உயர்ந்தால், அந்த சுமை நேரடியாக மக்கள் மீது விழுகிறது. எனவே, பழைய நடைமுறையை மீண்டும் அமல்படுத்த வேண்டும். அதுபோல, எரிபொருள் மீதான கலால் வரியை சதவீத அடிப்படை யில் இல்லாமல், ரூபாய் அடிப் படையில் வசூலிக்கலாம். இது போன்ற நடவடிக்கைகளை எடுத் தால், மக்கள் மீதான சுமை குறையும்.

ஜிஎஸ்டிக்குள் வருமா?

சென்னை போக்குவரத்து விழிப்புணர்வு அமைப்பின் இயக்குநர் வி.சுப்பிரமணியன்: பெட்ரோல், டீசல் விலை உயர்வை முடிவு செய்யும் அதி காரம் மத்திய அரசிடமே இருக்க வேண்டும். மேலும், தினமும் விலை நிர்ணயம் செய்வதை நிறுத்திவிட்டு, ஒரு மாதம் அல் லது 3 மாதத்துக்கு ஒருமுறை நிர்ணயம் செய்ய வேண்டும். பெட்ரோல், டீசல் விலையை உடனே கட்டுக்குள் கொண்டுவர, அதை ஜிஎஸ்டிக்குள் கொண்டுவர வேண்டும். நிர்ணயிக்கப்படும் விலையைவிட லிட்டருக்கு ரூ.10 பைசா கூடுதலாக வைத்து சில பெட்ரோல் பங்க்குகளில் விற்பனை செய்கின்றனர். இதை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

ரூ.28-ல் இருந்து ரூ.76 ஆவது எப்படி?

ஒரு பேரலில் 159 லிட்டர் இருக்கும். சுத்திகரிப்புக்குப் பிறகு ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.28.35. போக்குவரத்து கட்டணம் சேரும்போது ரூ.31.08 ஆகிறது. கலால் வரி ரூ.19 சேர்ந்து, ரூ.50 ஆக உயர்கிறது. இதன்பிறகு, டீலர் கமிஷன் ரூ.3, அந்தந்த மாநிலங்களின் வரி (16 - 18%) விதிக்கப்பட்டு, பங்க்கில் நாம் நிரப்பும்போது, டீசல் விலை ரூ.76 ஆக உயர்ந்துவிடுகிறது.

நம் நாட்டில் உற்பத்தியாகும் பெட்ரோல், டீசலை வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யும்போது நம் நாட்டில் ஏற்றுமதி வரியும், சம்பந்தப்பட்ட நாடுகளில் இறக்குமதி வரியும் மட்டுமே வசூலிக்கப்படும். இதர வரிகள், கட்டணங்கள் இல்லாததால், நம் நாட்டைவிட 50 சதவீத அளவுக்கு குறைந்த விலையில் பெட்ரோல், டீசல் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x