Published : 07 Sep 2018 08:23 AM
Last Updated : 07 Sep 2018 08:23 AM

குட்கா ஊழல் வழக்கு தொடர்பாக ஜார்ஜ் வீட்டில் 25 மணி நேரம் சிபிஐ சோதனை; அமைச்சர் விஜயபாஸ்கர், டிஜிபி ராஜேந்திரனுக்கு சம்மன்?

குட்கா ஊழல் வழக்கு தொடர்பாக சென்னை மாநகர முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் 25 மணி நேரம் சோதனை நடத்தியுள்ளனர். அவர் வீட்டில் இருந்து முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

சோதனை நடத்தியதையடுத்து அமைச்சர் சி.விஜயபாஸ்கர், டிஜிபி டி.கே.ராஜேந்திரன் ஆகியோருக்கு சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளதாக தெரிகிறது.

சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின்படி குட்கா ஊழல் தொடர்பான வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது. டெல்லி சிபிஐ போலீஸார் வழக்கு பதிந்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இதையடுத்து சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், டிஜிபி டி.கே.ராஜேந்திரன், சென்னை மாநகர முன்னாள்காவல் ஆணையர் எஸ்.ஜார்ஜ், முன்னாள் வணிக வரித் துறை அமைச்சர் பி.வி.ரமணா மற்றும் மத்திய, மாநில அதிகாரிகளின் வீடுகள் உட்பட 35 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் நேற்று முன்தினம் ஒரே நேரத்தில் சோதனை நடத்தினர்.

சென்னை நொளம்பூரில் வசிக்கும் முன்னாள் காவல் ஆணையர் எஸ்.ஜார்ஜ் வீட்டில் நேற்று முன்தினம் காலை 8 மணிக்கு சிபிஐ அதிகாரிகள் சோதனையைத் தொடங்கினர். முதலில் 5 அதிகாரிகள் மட்டுமே சோதனை நடத்தினர். மதியத்துக்கு பின்னர் மேலும் 2 அதிகாரிகள் வந்து சோதனையில் ஈடுபட்டனர். நேற்று காலை 9 மணி வரை இந்த சோதனை நீடித்தது. 25 மணி நேரம் சோதனை நடத்தி முடித்துவிட்டு வெளியே சென்ற சிபிஐ அதிகாரிகள், 2 பைகளில் ஆவணங்களை அள்ளிச் சென்றனர்.

இதேபோல முகப்பேரில் உள்ளடிஜிபி டி.கே.ராஜேந்திரன் வீட்டில் இருந்தும் ஏராளமான சொத்துஆவணங்களை சிபிஐ அதிகாரிகள் எடுத்துச் சென்றதாக கூறப்படுகிறது. புழலில் காவல் ஆய்வாளராக பணிபுரிந்து தற்போது தூத்துக்குடியில் ஆய்வாளராக இருக்கும் சம்பத்குமாரின் வீடு, சென்னை ராயபுரத்தில் உள்ளது. இந்த வீட்டிலும் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர். நேற்று முன்தினம் இரவு சோதனையை முடித்து சென்ற அதிகாரிகள், வீட்டை பூட்டி சீல் வைத்துவிட்டுச் சென்றனர்.

குட்கா நிறுவன உரிமையாளர் மாதவ ராவை, சிபிஐ அதிகாரிகள் அப்ரூவராக மாற்றியுள்ளனர். அவர் அளித்துள்ள வாக்குமூலத்தில் அமைச்சர் விஜயபாஸ்கர், டிஜிபி டி.கே.ராஜேந்திரன், முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ் ஆகியோரின் பெயர்களை கூறியிருப்பதாக கூறப்படுகிறது. குட்கா விவகாரத்தில் மாதவ ராவ் உட்பட 7 பேரை சிபிஐ அதிகாரிகள் நேற்று கைது செய்துள்ள நிலையில், மேலும் 22 பேரை விசாரணைக்கு ஆஜராகச் சொல்லி சம்மன் அனுப்பியுள்ளனர். இதில், மதுரை ரயில்வே டிஎஸ்பி மன்னர் மன்னன், தூத்துக்குடி சிப்காட் காவல் நிலைய ஆய்வாளர் சம்பத்குமார் உட்பட பல அதிகாரிகள் உள்ளனர்.

மேலும், அமைச்சர் விஜயபாஸ்கர், டிஜிபி டி.கே.ராஜேந்திரன், முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ் ஆகியோருக்கும் சம்மன் அனுப்பியிருப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சிபிஐ அதிகாரிகளிடம் கேட்டபோது, அவர்கள் பதில்கூற மறுத்துவிட்டனர்.

 டிஜிபி மாற்றமா?

தனது வீட்டில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி முடித்ததும் நேற்று முன்தினம் இரவு 9.30 மணி அளவில் முதல்வர் பழனிசாமியை அவரது இல்லத்தில் டிஜிபி டி.கே.ராஜேந்திரன் சந்தித்துப் பேசினார். அப்போது சிபிஐ சோதனை குறித்த விவரங்களை தெரிவித்ததாகவும், தன்னை டிஜிபி பதவியில் இருந்து விடுவிக்குமாறு அவர் கேட்டுக்கொண்டதாகவும் கூறப்படுகிறது. அவரது கோரிக்கை

ஏற்கப்பட்டு, டிஜிபி மாற்றம் செய்யப்பட்டால் அடுத்த சீனியாரிட்டி பட்டியலில் கே.பி.மகேந்திரன், ஜாங்கிட், ஜே.கே.திரிபாதி, காந்திராஜன் ஆகியோர் உள்ளனர். இதில் ஜே.கே.திரிபாதி டிஜிபியாக வருவதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x