Published : 05 Sep 2018 09:06 PM
Last Updated : 05 Sep 2018 09:06 PM

குட்கா ஊழல் முறைகேடு; விசாரணை தொடரும், சோதனை நிறைவு: சிபிஐ

குட்கா முறைகேடு விவகாரத்தில் தமிழகம், புதுச்சேரியில் அமைச்சர் விஜய பாஸ்கர், டிஜிபி டிகேஆர், முன்னாள் டிஜிபி ஜார்ஜ் உள்ளிட்டோர் வீடுகள் உள்ளிட்ட 35 இடங்களில் சிபிஐ அதிரடி சோதனை மேற்கொண்டது. விசாரணை மேலும் தொடரும் என்று சிபிஐ ரெய்டுக்குப் பிறகு தெரிவித்துள்ளது.

குட்கா முறைகேடு குறித்த விவகாரம் பெரிதாக வெடித்த நிலையில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. ஆனால் அதில் முறையாக விசாரணை நடக்காததால் திமுக சார்பில் உயர் நீதிமன்றத்தில் சிபிஐ விசாரணை கேட்டு வழக்குத் தொடரப்பட்டது. இதையடுத்து கடந்த ஏப்ரல் 26 அன்று குட்கா முறைகேட்டை விசாரிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டார்.

இதையடுத்து சிபிஐ குட்கா விவகாரத்தில் வழக்குப் பதிவு செய்தது. இதனையடுத்து இன்று காலை சிபிஐ சென்னை, திருவள்ளூர், தூத்துக்குடி, புதுச்சேரி, பெங்களூரு, மும்பை, குண்டூர் உள்ளிட்ட 35 இடங்களில் அதிரடி சோதனை மேற்கொண்டது. குட்கா தயாரிப்பு நிறுவனத்தின் இயக்குநர்கள், மற்றும் பிற அரசு ஊழியர்கள், விற்பனை வரித்துறை அதிகாரிகள், சுங்க மற்றும் கலால் வரித்துறை அதிகாரிகள், உணவுப்பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறை மற்றும் போலீஸ் அதிகாரிகள் வீடுகளில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது

தமிழ்நாட்டில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்று 2011 முதல் தடைசெய்யப்பட்ட குட்கா மற்றும் வாயில் போட்டு மெல்லும் புகையிலைப் பொருட்களை உற்பத்தி செய்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனையடுத்து 2013-ல் குட்கா மற்றும் பிற புகையிலைப் பொருட்கள் தடை செய்யப்பட்டன. ஆனால் தடை செய்யப்பட்ட பிறகும் கூட தனியார் நிறுவனம் கட்டுப்பாட்டு ஆணைய அதிகாரிகள் உள்ளிட்டோருக்கு லஞ்சம் கொடுத்து தங்கள் வர்த்தகத்தை சட்ட விரோதமாகத் தொடர்ந்ததாக அம்பலமானது.

இன்றைய ரெய்டில் தமிழ்நாடு சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர், முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா, தமிழ்நாடு டிஜிபி டிகே. ராஜேந்திரன், முன்னாள் டிஜிபி ஜார்ஜ், உதவி ஆணையர் மன்னர் மன்னன், வில்லிபுரம் டிஎஸ்பி ஷங்கர், ஆய்வாளர் சம்பத் குமார், உணவு மற்றும் மருந்துத்துறையைச் சேர்ந்த அதிகாரிகளான செந்தில் முருகன், டாக்டர் லஷ்மி நாராயணன், இ.சிவகுமார், மத்திய கலால் வரித்துறை அதிகாரிகளான ஆர்.குல்சார் பேகம் ஆர்.கே.பாண்டியன், ஷேஷாத்ரி, விற்பனை வரித்துறையைச் சேர்ந்த பன்னீர் செல்வம், குறிஞ்சி செல்வம், கணேசன், ஜேஎம் நிறுவனத்தின் புரோமோட்டர்கள் மற்றும் இயக்குநர்களான ஏ.வி.மாதவராவ், உமா சங்கர் குப்தா, ஸ்ரீநிவாஸ் ராவ் ஆகியோர் வீடுகளில் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

இந்த மாலையுடன் நிறைவுப்பெற்றதாக சிபிஐ தரப்பு தெரிவித்துள்ளது. மேலும் இந்த வழக்கில் விசாரணை தொடரும் என்று தெரித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x