Published : 05 Sep 2018 11:01 AM
Last Updated : 05 Sep 2018 11:01 AM

குட்கா ஊழல் விவகாரம்: அமைச்சர் விஜயபாஸ்கர், டிஜிபி ராஜேந்திரன், முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ் வீடுகளில் சிபிஐ ரெய்டு

குட்கா ஊழல் விவகாரம் தொடர்பாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சென்னை முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ், டிஜிபி ராஜேந்திரன் உள்ளிட்டோரின் வீடுகளில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். 40 இடங்களில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்களின் விற்பனை தங்கு தடையின்றி நடைபெற்று வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில் கடந்த 2017-ம் ஆண்டு ஜூலை மாதம் 8-ம் தேதி வருமானவரித் துறையினர் சென்னை அருகே செங்குன்றத்தில் உள்ள மாதவ ராவ் உள்ளிட்டோர் பங்குதாரராக உள்ள குட்கா கிடங்கில் திடீர் சோதனை நடத்தினர்.

இந்தச் சோதனையில் குட்கா விற்பனை செய்வதற்கு லஞ்சம் வாங்கிய முக்கிய பிரமுகர்கள் மற்றும் அரசு அதிகாரிகள், போலீஸ் அதிகாரிகள் குறித்த ஆவணங்கள் மற்றும் மாதவராவ் எழுதிய ரகசிய டைரி ஒன்று சிக்கியது.

அந்த டைரியில் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சென்னை காவல்துறை ஆணையராக அன்றைய காலகட்டத்தில் இருந்த இப்போதைய டிஜிபி டி.கே. ராஜேந்திரன், ஓய்வுபெற்ற டிஜிபி எஸ்.ஜார்ஜ் உட்பட காவல்துறையைச் சேர்ந்த 23 அதிகாரிகளின் பெயர்கள், கலால் வரித்துறை அதிகாரிகள், மத்திய உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் உள்ளிட்டோரும் லஞ்சம் பெற்றதாக குறிப்பிடப் பட்டிருந்ததாக கூறப்பட்டது.

இதுதொடர்பாக லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்தனர். பின்னர் இந்த வழக்கு சிபிஐ விசாரணைக்குச் சென்றது. அதன்படி, கடந்த ஜூன் மாதம் டில்லி சிபிஐ அதிகாரிகள் விசாரணையைத் தொடங்கினர். முதல் கட்டமாக சென்னையில் உள்ள உணவு மற்றும் பாதுகாப் புத் துறையைச் சேர்ந்த சில அதிகாரிகளிடம் அவர்கள் விசாரணை நடத்தி இருந்தனர்.

இந்நிலையில் இந்த வழக்கின் முக்கிய நபராகக் கருதப்படும் மாதவராவிடம் விசாரணை நடத்துவதற்கு சிபிஐ அதிகாரிகள் சம்மன் அனுப்பி இருந்தனர். அதன்படி, நுங்கம்பாக்கத்தில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் மாதவராவ் சில தினங்களுக்கு முன் ஆஜரானார். அவரிடம் சிபிஐ அதிகாரிகள் சுமார் 9 மணி நேரம் விசாரணை நடத்தியதாகக் கூறப்படுகிறது.

விசாரணையில், குட்கா விற்பனைக்காக வழங்கப்பட்ட லஞ்சம் தொடர்பாக கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன. மேலும், எவ்வளவு காலம் லஞ்சம் கொடுக்கப்பட்டது, எந்த அதிகாரிகள் எவ்வளவு லஞ்சம் வாங்கினார்கள், உடந்தையாக இருந்தது யார்? யார்? என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர். அதற்கு அவர் அளித்துள்ள பதில்களை வீடியோவிலும், எழுத்து மூலமாகவும் பதிவு செய்துள்ளனர். விரைவில் அடுத்தகட்ட நடவடிக்கையைத் தொடங்க இருப்பதாக சிபிஐ அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதன் அடுத்த கட்டமாக இன்று காலை தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சென்னை முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ் உள்ளிட்டோரின் வீடுகளில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

சென்னை முகப்பேரில் உள்ள டிஜிபி ராஜேந்திரன் வீடு, விழுப்புரத்தில் பல்பொருள் அங்காடி உரிமையாளர், முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா வீடு ஆகியவற்றிலும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. மொத்தம் 40 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். முக்கிய ஆவணங்களை பறிமுதல் செய்யும் நோக்கத்துடன் இந்த சோதனை நடைபெற்று வருவதாக தெரிகிறது. 

இதுகுறித்து சிபிஐ செய்தித்தொடர்பாளர் தி இந்துவிடம் (ஆங்கிலம்) கூறுகையில் ‘‘குட்கா ஊழல் விவகாரம் தொடர்பாக அமைச்சர் விஜயபாஸ்கர், டிஜிபி ராஜேந்திரன் உள்ளிட்டோர் வீடுகளில் காலை முதல் சோதனை செய்து வருகிறோம்’’ என கூறினார்.

டிஜிபி ராஜேந்திரன் மற்றும் சென்னை முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ் ஆகியோருக்கு நெருக்கமான முன்னாள் மற்றும் தற்போதைய காவல்துறை அதிகாரிகள், சுங்கத்துறை அதிகாரிகள், சில உணவு பாதுகாப்பு பிரிவு அதிகாரிகள் வீடுகளில் சோதனை நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x