Published : 02 Sep 2018 02:45 PM
Last Updated : 02 Sep 2018 02:45 PM

ஐ.ஜி. முருகன் மீதான பாலியல் புகாரை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும்: தினகரன்

தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை ஐ.ஜி. முருகன் மீதான பாலியல் புகாரை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை இணை இயக்குனரும், ஐ.ஜி.யுமான முருகன், தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, அதே துறையில் காவல் கண்காணிப்பாளராகப் பணிபுரிந்த பெண் அதிகாரி ஒருவர் புகார் கொடுத்து ஒரு மாதம் ஆகப்போகிறது. அதுபற்றி ஒரு வழக்கு கூட பதிய முன்வராத முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் அரசு, அந்தப் பெண் அதிகாரியை மட்டும் இடம் மாற்றம் செய்து, புகாருக்கு உள்ளான முருகனை அதே இடத்தில் தொடர்ந்து பணிபுரிய அனுமதித்தது.

இப்படிச் செய்வதால் புகாருக்கு உள்ளானவர் தனக்கு எதிரான ஆதாரங்களை அழிக்க வாய்ப்பளிக்கும் என்பதை எடுத்துச்சொல்லி, அவரையும் இடம் மாற்றம் செய்ய நான் ஏற்கெனவே வலியுறுத்தினேன்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஆட்சியில் இதே போன்று ஒரு பாலியல் புகார், அப்போதைய சட்டம் ஒழுங்கு டிஜிபியின் மீதே எழுந்தபோது அன்று மாலையே அவரைப் பணி நீக்கம் செய்தார் ஜெயலலிதா. ஆனால், ஜெயலலிதாவின் ஆட்சியை நடத்துவதாகச் சொல்லி தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றி வரும் எடப்பாடி பழனிசாமியின் அரசு, ஒரு பெண் அதிகாரியின் கவுரவத்தை கொச்சைப்படுத்தும் வகையில் தொடர்ந்து அலட்சியமாக நடந்துகொள்கிறது.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஆகியோர் மீது லஞ்சப் புகார் மற்றும் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்தது போன்ற புகார்கள் எழுந்து, நீதிமன்ற உத்தரவுப்படி லஞ்ச ஒழிப்பு போலீஸார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அத்துடன், குட்கா விவகாரத்தில் லஞ்சம் பெற்ற விவகாரத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் டி.ஜி.பி., டி.கே.ராஜேந்திரன் ஆகியோர் மீதான வழக்கையும் லஞ்ச ஒழிப்பு போலீஸார் விசாரித்து வந்தார்கள். இவை எல்லாமே, பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளான ஐ.ஜி., முருகனின் மேற்பார்வையிலேயே நடந்து வருவதால்தான், அவரை இடம் மாற்றம் செய்ய முதல்வர் பழனிசாமியின் அரசு தயங்குகிறது என்ற குற்றச்சாட்டும் பலரால் எழுப்பப்பட்டது.

இந்த நிலையில் ஆகஸ்ட் 30-ம் தேதி, கூடுதல் டி.ஜி.பி., சீமா அகர்வால் தலைமையில் கூடிய விசாகா கமிட்டி, பாதிக்கப்பட்ட பெண் அதிகாரி அளித்துள்ள ஆதாரங்களைப் பரிசீலித்து, அதில் போதிய முகாந்திரம் இருந்த காரணத்தால் இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீஸார் விசாரணைக்கு மாற்றியும், ஐ.ஜி., முருகன் மீது கிரிமினல் வழக்குப் பதிந்து சி.பி.சி.ஐ.டி. போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தவும் உத்தரவிட்டிருக்கிறார். இதற்குப் பிறகும் ஐ.ஜி., முருகனை இடம் மாற்றம் கூட செய்யாமல் இருப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது.

முருகன் லஞ்ச ஒழிப்புப் பிரிவில் தொடர்ந்து பணிபுரியும் நிலையில் சி.பி.சி.ஐ.டி. போலீஸாரும் நியாயமான விசாரணை நடத்துவார்கள் என்று எதிர்பார்க்க முடியாது. அப்படியே அவர்கள் நியாயமாக நடந்துகொள்ள நினைத்தாலும், முருகனைக் காப்பாற்ற முயலும் தமிழக முதல்வரின் நிர்வாகத்தின் கீழ்தான் சி.பி.சி.ஐ.டி. போலீஸாரும் வருகிறார்கள் என்பதால் அவர்களை நியாயமாக செயல்பட விடமாட்டார்கள். எனவே, இந்த விவகாரத்தை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி, தமிழகத்தை சாராத ஓர் அதிகாரியின் மேற்பார்வையில் விசாரணை நடத்தி குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை பெற்றுத் தரவேண்டும்'' என்று தினகரன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x