Published : 02 Sep 2018 12:54 PM
Last Updated : 02 Sep 2018 12:54 PM

பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான ஐஜியை இடமாற்றம் செய்க; முதல்வர் தலையிட வேண்டும்: கனிமொழி

பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான ஐஜி முருகனை இடமாற்றம் செய்ய வேண்டும். விசாரணை நியாயமாக நடைபெற தமிழக முதல்வர் தலையிட வேண்டும் என்றும் திமுக எம்.பி.கனிமொழி கோரிக்கை விடுத்துள்ளார்.

ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறையில் பணியாற்றிய பெண் எஸ்பி ஒருவர் தனது மேலதிகாரியான ஐஜி முருகன் மீது பாலியல் புகார் தெரிவித்தார். அதைத் தொடர்ந்து மாநில குற்ற ஆவணக் காப்பக கூடுதல் டிஜிபி சீமா அகர்வால் தலைமையிலான 5 நபர் கொண்ட விசாகா கமிட்டி அமைக்கப்பட்டு விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.

பாலியல் புகார் குறித்து விசாகா கமிட்டி விசாரித்து வந்த நிலையில், இந்தப் புகார் குறித்து சிபிசிஐடி விசாரணை நடத்த விசாகா கமிட்டி பரிந்துரை செய்துள்ளது.

இதுகுறித்து தமிழக அரசுக்கு விசாகா கமிட்டி அளித்துள்ள அறிக்கையில், ''பாலியல் புகார் அளித்த பெண் எஸ்பியை நேரில் ஆஜராகச் சொல்லி சம்மன் அனுப்பியிருந்த நிலையில், அவர் கடந்த 29-ம் தேதி விசாரணைக்கு ஆஜராகவில்லை. ஆனால் புகாருக்குள்ளான ஐஜியை இடமாற்றம் செய்ய வேண்டும். குழுவை மாற்றி அமைக்க வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தார்.

அவரது கோரிக்கை குறித்து முடிவெடுக்க எங்களுக்கு அதிகாரம் இல்லை. பெண் எஸ்பியின் புகார் குறித்து நடத்தப்பட்ட விசாரணையில் புகாரில் உண்மைத்தன்மை இருப்பது தெரியவந்துள்ளது. எனவே, புகாருக்குள்ளான ஐஜி முருகன் மீது கிரிமினல் வழக்குப் பதிவு செய்யவும், பணியிடமாற்றம் செய்யவும் விசாகா கமிட்டி பரிந்துரை செய்கிறது'' என்று தெரிவிக்கப்பட்டது.

விசாகா கமிட்டியில், பாலியல் வழக்குகளில் அனுபவமுள்ள தனியார் நபர் நியமிக்கப்படுவதற்குப் பதிலாக, ஓய்வு பெற்ற காவல் அதிகாரி சரஸ்வதி நியமிக்கப்பட்டதை அடுத்து சர்ச்சை எழுந்தது. இந்தக் குழுவில் வெளிநபர் ஒருவர் நியமிக்கப்பட வேண்டும் என்ற உச்ச நீதிமன்ற வழிகாட்டல் மீறப்பட்டதாக கூறப்பட்டது. இதனால் இக்குழுவை மாற்றியமைக்கவும், சம்பந்தப்பட்ட ஐஜியை இடமாற்றம் செய்ய வேண்டும் என்றும் பாதிக்கப்பட்ட பெண் அதிகாரி தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

ஆனால், தங்களுக்கு இதற்கான அதிகாரம் இல்லை என்பதால் இவ்வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற தமிழக அரசுக்கு விசாகா கமிட்டி பரிந்துரை செய்துள்ளது.

மேலும் ஐஜி முருகன் குறித்து பெண் எஸ்பி கொடுத்த பாலியல் புகார் மீதான விசாகா கமிட்டியின் விசாரணை இன்னும் முடிவடையவில்லை. தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் ஐஜி முருகனை இடமாற்றம் செய்ய வேண்டும் என்று திமுக எம்.பி.கனிமொழி கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் தன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவுகளில், ''காவல்துறையில் பாலியல் புகார்களை விசாரிக்க அமைக்கப்பட்டுள்ள குழு, பெண் எஸ்பி ஒருவர் அளித்த புகாரை, சிபி சிஐடிக்கு அனுப்பி வழக்கு பதிவு செய்ய பரிந்துரை செய்துள்ளது.

இந்தக் குற்றச்சாட்டுக்கு ஆளான ஐஜி முருகனை, இவ்வழக்கின் புலன் விசாரணை முறையாக நடக்க ஏதுவாக உடனடியாக லஞ்ச ஒழிப்புத் துறையை விட்டு மாற்ற வேண்டும். அவர் லஞ்ச ஒழிப்புத் துறையில் தொடர்வது, சாட்சிகளையும் தடயங்களையும் அவர் அழிக்க உதவும்.

தமிழக முதல்வர், இந்த விசாரணை நியாயமான முறையில் நடைபெறுவதற்கும், விசாரணையில் நம்பிக்கை ஏற்படுத்துவதற்கும் ஏதுவாக உடனடியாக இவ்விஷயத்தில் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று கனிமொழி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x