Published : 02 Sep 2018 10:53 AM
Last Updated : 02 Sep 2018 10:53 AM

ஆந்திராவுக்கு கூலி வேலைக்குச் செல்லும் தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்க: வாசன்

கூலி வேலைக்காக தமிழர்கள் ஆந்திராவிற்கு சென்று, வருவது தொடர்பாக இரு மாநில அரசும் ஒருங்கிணைந்து செயல்பட்டு, தமிழக மக்களின் பாதுகாப்பினை உறுதி செய்ய வேண்டும் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''ஆந்திர மாநிலம் சேஷாசலம் வனப்பகுதியில் தமிழகத்தின் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த காமராஜ் என்பவர் ஆந்திர போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பலியானார். இது மிகவும் வேதனைக்குரியது. தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் ஆந்திர மாநிலத்திற்கு வேலைக்குச் செல்லும் போது அம்மாநில அரசின் காவல்துறைக்கு ஏதேனும் ஆதாரப்பூர்வமான சந்தேகம் இருப்பின் அது தொடர்பாக கைது செய்யலாம், விசாரிக்கலாம் அதற்கு மேல் உயிரை இழக்கின்ற அளவுக்கு நடவடிக்கையில் ஈடுபடக்கூடாது.

இது சம்பந்தமாக உரிய விசாரணையை எடுக்க ஆந்திர அரசும் மறுக்கிறது. அதே போல இப்பிரச்சினை தொடர்பாக தமிழக அரசும் தீவிர நடவடிக்கையை எடுக்கத் தவறுகிறது. ஏற்கெனவே கடந்த 2015-ல் ஆந்திர மாநிலம் சித்தூரில் ஆந்திர காவல்துறை நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 20 தமிழர்கள் கொல்லப்பட்டனர். இப்போது அதே போல ஒரு துப்பாக்கிச்சூடு நடைபெற்று ஒரு தமிழர் கொல்லப்பட்டது முற்றிலும் கண்டிக்கத்தக்க செயலாகும். எனவே தமிழக அரசு இது தொடர்பாக ஆந்திர அரசுக்கு கண்டனத்தை தெரிவிப்பதோடு, துப்பாக்கிச்சூடு நடத்திய காவல்துறையின் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்த வேண்டும்.

குறிப்பாக பலியான தமிழரின் குடும்பத்திற்கு இழப்பீடாக 25 லட்சம் ரூபாயை இழப்பீட்டுத் தொகையாக ஆந்திர அரசிடம் தமிழக அரசு பெற்று அக்குடும்பத்திற்கு தர வேண்டும். மேலும் தமிழக அரசு இனிமேல் தமிழகத்தில் இருந்து ஆந்திர மாநிலத்திற்கு கூலி வேலைக்குச் செல்பவர்கள் குறித்த முழு விவரத்தை பெற்றுக்கொள்ள வேண்டும். அதாவது எந்த வேலைக்காக, யார் மூலமாக எப்போது செல்கிறார்கள் போன்ற அனைத்து விபரத்தையும் தெரிந்து வைத்திருக்க வேண்டும். ஏதாவது சந்தேகம் இருப்பின் அதனை நிவர்த்தி செய்த பிறகே வேலைக்குச் செல்ல அனுமதிக்க வேண்டியது தமிழக அரசின் செயல்பாடாக இருக்க வேண்டும்.

மேலும் ஆந்திர மாநில அரசிடம் தொடர்பு கொண்டு கூலி வேலைக்காக தமிழர்கள் அங்கு வந்தால் என்ன காரணத்திற்காக, எந்த வேலை, தங்குமிடம், பாதுகாப்பு போன்றவற்றை ஆந்திர மாநிலத்திற்கு வரும் போதே தெரிந்துகொண்டு அதற்கேற்ப நடவடிக்கை எடுக்க வேண்டுமே தவிர துப்பாக்கிச் சூட்டில் ஈடுபடக்கூடாது என்பதை கண்டிப்போடு தெரிவிக்க வேண்டும்.

மிக முக்கியமாக கூலி வேலைக்காக தமிழர்கள் ஆந்திராவிற்கு சென்று, வருவது தொடர்பாக இரு மாநில அரசும் ஒருங்கிணைந்து செயல்பட்டு, மாநில ஒற்றுமைக்கும், ஒருமைப்பாட்டிற்கும் நல்வழி ஏற்படுத்திக்கொடுக்க உரிய நடவடிக்கைகளில் ஈடுபட்டு மாநில மக்களின் பாதுகாப்பினை உறுதி செய்ய வேண்டும்'' என்று வாசன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x