Published : 01 Sep 2018 02:08 PM
Last Updated : 01 Sep 2018 02:08 PM

விசாகா கமிட்டி விவகாரம்: உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு

காவல் துறையில் பாலியல் புகார்கள் விசாரிக்க கூடுதல் டிஜிபி சீமா அகர்வால் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள விசாகா குழுவில் சமூக ஆர்வலர் இருக்கும் வகையில் மாற்றியமைக்கக் கோரியும், விசாகா குழுவை அனைத்து தனியார் நிறுவனங்களிலும் அமைக்க உத்தரவிடக் கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

காவல்துறையில் பெண் காவலர்கள், அதிகாரிகள் அளிக்கும் பாலியல் புகார்கள் குறித்து விசாரிக்க, கூடுதல் டிஜிபி சீமா அகர்வால் தலைமையில், கூடுதல் டிஜிபி அருணாச்சலம், டிஐஜி தேன்மொழி, மூத்த நிர்வாக அதிகாரி ரமேஷ் பாபு மற்றும் ஓய்வுபெற்ற எஸ்பி சரஸ்வதி அடங்கிய குழுவை அமைத்து கடந்த 17-ம் தேதி டிஜிபி உத்தரவிட்டார்.

விசாகா கமிட்டி முறையாக அமைக்கப்படவில்லை என்ற விமர்சனம் எழுந்தது. போலீஸ் துறை சார்ந்த அதிகாரிகள் மட்டுமல்லாமல் கூடுதலாக பாலியல் விவகாரங்களைக் கையாண்ட சமூக செயற்பாட்டாளர் அல்லது சமூக ஆர்வளரை இணைக்க வேண்டும் என்ற உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல் பின்பற்றப்படவில்லை என்று அரசியல் கட்சித் தலைவர்கள், மாதர் அமைப்பினர் உள்ளிட்டோர் குற்றம் சாட்டியிருந்தனர்.

இந்நிலையில் விசாகா குழு சட்டப்படி அமைக்கப்படவில்லை எனக் கூறி, சென்னை சூளைமேட்டைச் சேர்ந்த வழக்கறிஞர் பிரேம் ஆனந்த் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்துள்ளார்.

அவரது மனுவில், “சட்டப்படி விசாகா குழுவில் ஒரு தலைமை அதிகாரியும் குறைந்தது மூன்று உறுப்பினர்களும் இடம்பெற்றிருக்க வேண்டும். அவர்களில் ஒருவர் பெண்கள் அமைப்பு அல்லது தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த பிரதிநிதிகளாக இருக்க வேண்டும்.

ஆனால் டிஜிபி அமைத்துள்ள இந்தக் குழுவில் தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் யாரும் இடம் பெறவில்லை. மேலும் இந்தக் குழு உயர் அதிகாரிகளைப் பாதுகாக்கும் நோக்கில் அமைக்கப்பட்டுள்ளது” என்று மனுவில் கூறியுள்ளார்.

மேலும், தமிழக அரசின் அனைத்துத் துறைகளிலும் சட்டவிதிகளைப் பின்பற்றி, விசாகா குழுக்களை அமைக்க உள்துறைச் செயலாளர், டிஜிபி உள்ளிட்டோருக்கு உத்தரவிட வேண்டும் என்றும், அரசு மற்றும் தனியார் துறைகளில் பணியிடத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் புகார்கள் மற்றும் அவற்றின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் அறிக்கை தாக்கல் செய்ய அரசுத்துறை செயலாளர்களுக்கும், டிஜிபிக்கும் உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் கோரியிருந்தார்.

இந்த மனு தலைமை நீதிபதி தஹில்ரமானி, நீதிபதி துரைசாமி அடங்கிய அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுவை வேறு அமர்வுக்கு மாற்றி தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டது.

அடுத்த அமர்வு முன் இந்த மனு விசாரணைக்கு வரும்பட்சத்தில் இதற்கு உரிய உத்தரவோ அல்லது நோட்டீஸோ பிறப்பிக்கப்படும் எனத் தெரிகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x