Published : 26 Aug 2018 12:35 PM
Last Updated : 26 Aug 2018 12:35 PM

திமுக தலைவர் பதவிக்கு மு.க.ஸ்டாலின் மனுத்தாக்கல்: பொருளாளர் பதவிக்கு துரைமுருகன் மனு

திமுக பொதுக்குழுக்கூட்டம் நாளை மறுநாள் நடைபெற உள்ள நிலையில், தலைவர் பதவிக்கான தேர்தலில் மு.க. ஸ்டாலின் இன்று வேட்புமனுத் தாக்கல் செய்தார். பொருளாளர் பதவிக்கு துரைமுருகன் வேட்மனுத்தாக்கல் செய்தார்.

திமுக தலைவர் மு.கருணாநிதி இம்மாதம் 7-ம் தேதி உடல்நலக்குறைவால் காலமானார். அவரின் மறைவையடுத்து, புதிய தலைவரை தேர்வு செய்ய தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டது. தலைவர் பதவிக்கு செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் போட்டியிடுவார் என்றும், அவர் தற்போது வகிக்கும் பொருளாளர் பதவிக்கு துரைமுருகனும் போட்டியிடுவார்க எனக் கூறப்பட்டது.

அதன்படி, வரும் 28-ம் தேதி திமுகவின் பொதுக்குழுக் கூட்டம் நடத்தவும், அதில் திமுக தலைவர், பொருளாளர் பதவிக்கான தேர்தல் நடத்தவும் முடிவு செய்யப்பட்டது. இதன்படி, திமுக தலைவர் பதவி, பொருளாளர் பதவிக்கு போட்டியிடுவோர் தங்கள் வேட்புமனுக்களை இன்று திமுக தலைமை அலுவலகத்தில் காலை 10 மணி முதல் மாலை 4 மணிவரை தாக்கல் செய்யலாம் என அறிவிக்கப்பட்டது.

அதன்படி, திமுக தலைவர் பதவிக்கு மு.க.ஸ்டாலின் தனது வேட்புமனு திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதியிடம் இன்று தாக்கல் செய்தார். மு.க.ஸ்டாலின் மனுவை 65 மாவட்டச் செயலாளர்கள் முன்மொழிந்தனர்.

முன்னதாக, வேட்புமனுவைத் தாக்கல் செய்யும் முன், செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் மனுவுடன் பொதுச்செயலாளர் அன்பழகனை அவரின் இல்லத்தில் சந்தித்து ஆசிபெற்றார். அதன்பின் கருணாநிதி நினைவிடத்துக்குச் சென்று அங்கு அஞ்சலி செலுத்தினார். உடன் வந்திருந்த துரைமுருகனும் கருணாநிதி நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்.

அங்கிருந்து புறப்பட்ட ஸ்டாலின், கோபாலபுரம் இல்லத்துக்குச் சென்று கருணாநிதி புகைப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, தாயார் தயாளுஅம்மாளிடம் ஆசி பெற்று, அறிவாலயம் வந்து சேர்ந்தார்.

அறிவாலயம் வந்த திமுக செயல்தலைவர் ஸ்டாலினுக்கு தொண்டர்கள் வரவேற்பு அளித்தனர். அறிவாலயத்தில் உள்ள திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதியிடம் தலைவர் பதவிக்கான வேட்புமனுவை,  மு.க. ஸ்டாலின் தாக்கல் செய்தார்.

வேட்புமனுக் கட்டணம் ரூ.25 ஆயிரத்தைச் செலுத்தி அதற்கான ரசீதையும் பெற்றுக்கொண்டார். முக.ஸ்டாலின் வேட்புமனுவை 65 மாவட்டச் செயலாளர் முன்மொழிந்தனர். பொருளாதார பதவிக்கு துரைமுருகன் வேட்புமனுத் தாக்கல் செய்தார்.

தலைவர் பதவிக்கும், பொருளாளர் பதவிக்கும் வேறு யாரும் போட்டியிடாததால், போட்டியின்றி இருவரும் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. நாளை நண்பகல் 1.30மணிவரை வேட்புமனுக்களைத் திரும்பப்பெறலாம், மாலை 5மணிக்குப் பெயர்கள் உறுதி செய்யப்படும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x