Published : 25 Aug 2018 09:44 AM
Last Updated : 25 Aug 2018 09:44 AM

புகை பிடிப்போர் சிகரெட்டுக்காக செலவிடும் பணம் மாதந்தோறும் ரூ.1,343 கோடி; தமிழகத்தில் புகையிலை பொருட்கள் பயன்பாடு 4 சதவீதம் அதிகரிப்பு: மத்திய சுகாதாரத் துறை ஆய்வறிக்கையில் அதிர்ச்சி தகவல்

தமிழகத்தில் புகையிலைப் பொருட்கள் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை கடந்த 7 ஆண்டுகளில் 3.8 சதவீதம் அதிகரித்துள்ளது என்று மத்திய சுகாதாரத் துறை ஆய்வறிக்கையின் மூலம் தெரியவந்துள்ளது.

உலக அளவிலான வயதுவந் தோர் புகையிலைப் பயன்பாட்டு ஆய்வை (Global Adult Tobacco Survey-1) மத்திய சுகாதாரத் துறை அமைச்சகத்துக்காக டாடா இன்ஸ்டிடியூட் ஆஃப் சோஷியல் சயின்ஸஸ் அமைப்பு,  நாடு முழுவதும் 30 மாநிலங்களில் மேற் கொண்டது. அந்த ஆய்வறிக்கை 2010 செப்டம்பரில் வெளியிடப்பட் டது. அதன்படி தமிழகத்தில் அனைத்து வடிவிலான புகையிலைப் பொருட்கள் பயன்படுத்து வோரின் எண்ணிக்கை 16.2 சதவீதமாக இருந்தது.

கடந்த 7 ஆண்டுகளில்...

இந்நிலையில், இரண்டாவது புகையிலைப் பயன்பாட்டு ஆய்வு (Global Adult Tobacco Survey-2)கடந்த 2016 ஆகஸ்ட் முதல் 2017 பிப்ரவரி வரை மேற்கொள்ளப்பட்டது. தமிழகத்தில் மொத்தம் 1,371 ஆண்கள், 1,544 பெண்களிடம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அந்த ஆய்வறிக்கை மத்திய சுகாதாரத் துறையின் www.mohfw.gov.in இணையதளத்தில் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் அனைத்து வடிவிலான (புகைக்கும், மெல்லும்) புகையிலையை பயன்படுத்துவோ ரின் எண்ணிக்கை கடந்த 7 ஆண்டு களில் 16.2 சதவீதத்திலிருந்து 20 சதவீதமாக அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது.

மேலும், சிகரெட் பயன்படுத்து வோரின் எண்ணிக்கை 6 சதவீதத்திலிருந்து 6.3 சதவீதமாகவும், கைனி பயன்படுத்துவோரின் எண்ணிக்கை 0.5 சதவீதத்தில் இருந்து 2.4 சதவீதமாகவும் அதிகரித்துள்ளது.

செலவுத் தொகை அதிகரிப்பு

மேலும், கடந்த 2010-ல் வெளியிடப்பட்ட ஆய்வறிக்கை யில் தமிழகத்தில் மாதந்தோறும் சிகரெட் வாங்குவதற்காக சராசரியாக செலவிடப்படும் தொகை ரூ.986.2 கோடியாக இருந்தது. அந்தத் தொகையானது தற்போது ரூ.1,343.8 கோடியாக அதிகரித்துள் ளது. அதேபோல, பீடிக்காக மாதந்தோறும் சராசரியாக செலவிடப் படும் தொகை ரூ.243.7 கோடியில் இருந்து ரூ.522.7 கோடியாக அதிகரித்துள்ளது.

ரூ.2.66 கோடி அபராதம் வசூல்

புகையிலைப் பயன்பாடு அதிகரித்துள்ளது குறித்து பொதுசுகாதாரத் துறை இணை இயக்குநர் ஏ.சோமசுந்தரம் கூறும்போது, “கல்வி நிறுவனங்கள் அருகே புகையிலைப் பொருட்களை விற்கவும், பொதுஇடங்களில் புகை பிடிக்கவும் தடை விதிக்கப்பட்டதன் விளைவாக  முதல்முறையாக புகையிலையைப் பயன்படுத்தத் தொடங்குவோரின் வயது தமிழகத்தில் 18.5-ல் இருந்து 20.6 ஆக அதிகரித்துள்ளதும் இதே ஆய்வில் தெரியவந்துள்ளது. இது ஒரு நல்ல அம்சம். இருப்பினும், ஒட்டுமொத்தமாக புகையிலைப் பொருட்கள் பயன்படுத்துவோரின் எண்ணிக்கையைக் குறைக்க விழிப்புணர்வு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த உள்ளோம்.

அபராத வசூல் ரூ.2.23 கோடி

கடந்த 2008 அக்டோபர் முதல் 2018 ஜூலை வரை  பொது இடங்களில் புகை பிடித்த 1.63 லட்சம்பேரிடம் இருந்து ரூ.2.23 கோடி அபராதமாக வசூலிக்கப் பட்டுள்ளது. அதேபோல, கல்வி நிறுவனங்கள் அருகே புகையி லைப் பொருட்களை விற்ற 18,113 கடை உரிமையாளர்களிடமிருந்து ரூ.34.86 லட்சமும், 18 வயதுக்கு குறைந்தவர்களுக்கு புகையிலைப் பொருட்களை விற்ற 4,630 பேரிடமிருந்து ரூ.9.36 லட்சமும் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

எனவே, பொது இடங்களில் புகை பிடித்தாலோ, கல்வி நிறுவனங்களின் அருகில் புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்தாலோ 104 என்ற 24 மணி நேர இலவச எண்ணைத் தொடர்புகொண்டு மக்கள் புகார் தெரிவிக்கலாம். பின்னர், சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

தனிக் கவனம் செலுத்த வேண்டும்

கன்சியூமர் அசோசியேஷன் ஆஃப் இந்தியா அமைப்பின் தலைவர் நிர்மலா தேசிகன் கூறும் போது, “புகையிலைப் பயன்பாடு  தமிழகத்தில் மட்டும் 4 சதவீதம் அதிகரித்துள்ளது வேதனை அளிக்கிறது. எனவே, தமிழக அரசு, இதுகுறித்து  தனிக் கவனம் செலுத்தி புகையிலைப் பயன்பாட்டை குறைக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்” என்றார்.

அண்டை மாநிலங்களில் குறைவு

தமிழகத்தின் அண்டை மாநிலங்களான கேரளத்தில் 21.4-லிருந்து 12.7 சதவீதமாகவும், கர்நாடகாவில் 28.2-லிருந்து 22.8 சதவீதமாகவும், புதுச்சேரியில் 15.1-லிருந்து இருந்து 11.2 சதவீதமாகவும் புகையிலைப் பயன்பாடு குறைந்துள்ளது. ஆனால், தமிழகத்தில் மட்டும் பயன்பாடு அதிகரித்துள்ளது கவனிக்கத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x