Published : 24 Aug 2018 09:41 PM
Last Updated : 24 Aug 2018 09:41 PM

கருணாநிதி நினைவேந்தல் கூட்டம்: அமித் ஷா, குலாம் நபி ஆசாத், யெச்சூரி, கேஜ்ரிவால், சந்திரபாபு நாயுடு பங்கேற்பு

'தெற்கில் உதித்தெழுந்த சூரியன்' என்ற தலைப்பில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவேந்தல் கூட்டம் வரும் 30-ம் தேதி நடக்கிறது. இதில் அமித் ஷா, யெச்சூரி, குலாம் நபி ஆசாத், சந்திரபாபு நாயுடு உள்ளிட்ட தேசியத் தலைவர்கள் பங்கேற்கிறார்கள்.

திமுக தலைவர் கருணாநிதி கடந்த ஆகஸ்டு 7-ம் தேதி காலமானார். அவரது உடலுக்கு குடியரசுத் தலைவர், பிரதமர், குடியரசு துணைத் தலைவர், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மாநில முதல்வர்கள், இடதுசாரி கட்சித்தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர்.

திமுக தலைவர் கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக திமுக சார்பில் 'தெற்கில் உதித்தெழுந்த சூரியன்' என்ற தலைப்பில் நினைவேந்தல் கூட்டம் நடத்துகின்றனர். இந்த கூட்டம் நந்தனம் ஒய்.எம்.சி.ஏவில் வரும் ஆகஸ்டு 30 மாலை 4 மணி அளவில் நடக்கிறது.

இந்தக் கூட்டத்திற்கான அழைப்பிதழ் வெளியாகி உள்ளது. அதில் முதலிடத்தில் எச்.டி. தேவ கவுடா பெயரும், பாஜக தலைவர் அமித் ஷா பெயரும், பக்கத்தில் காங்கிரஸ் தலைவர் குலாம் நபி ஆசாத் பெயரும் உள்ளது.

க.அன்பழகன் தலைமையில் நடக்கும் இந்தக் கூட்டத்திற்கு ஸ்டாலின் முன்னிலை வகிக்க துரைமுருகன் வரவேற்புரை ஆற்றுகிறார். தேசியவாத காங்கிரஸ் நிறுவனர் சரத்பவார், தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் பரூக் அப்துல்லா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சுதாகர் ரெட்டி, பிஹார் முதல்வர் நிதிஷ் குமார், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, டெல்லி முதல்வர் கேஜ்ரிவால், புதுவை முதல்வர் நாராயணசாமி, முஸ்லீம் லீக் கட்சித்தலைவர் காதர் மொகிதீன், திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் டெரிக் ஓ பிரைன் உள்ளிட்டோர் கலந்துக்கொண்டு அஞ்சலி செலுத்துகின்றனர்.

முடிவில் சென்னை தெற்கு மாவட்டச் செயலாளர் மா.சுப்ரமணியம் நன்றி சொல்கிறார். இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட ராகுல் காந்தி கலந்து கொள்ளவில்லை. ஆனால், அமித் ஷா கலந்துகொள்ளும் நிகழ்வை வைத்து திமுகவும் பாஜகவும் நெருங்கி வருவதாகவும், கூட்டணிக்கு அச்சாரம் என்று இந்த நினைவேந்தல் கூட்டம் குறித்து பேச்சு அடிபடுகிறது. இந்தக் கூட்டத்திற்கு தமிழகத்தின் இரண்டு பெரிய நடிகர்கள் ரஜினி, கமலுக்கு அழைப்பு இல்லை. ஆளுங்கட்சியான அதிமுகவுக்கும் அழைப்பு இல்லை.

அழைத்தால் பரிசீலிப்போம் என்று நேற்று துணை முதல்வர் ஓபிஎஸ் கூறிய நிலையில் அவர்கள் பெயர் இல்லாமலே அழைப்பிதழ் வெளியாகியுள்ளதால் சமீபகாலமாக அதிமுக, திமுக இடையே இருந்த அரசியல் நாகரிகம் மீண்டும் முடிவுக்கு வந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இதற்கிடையே சுப்பிரமணியன் சுவாமி தனது ட்விட்டர் பதிவில் “எனக்குத் தெரிந்தவரை கருணாநிதியின் நினைவேந்தல் கூட்டத்தில் அமித் ஷா கலந்து கொள்ளமாட்டார் என்பது மகிழ்ச்சியளிக்கிறது” என்று பதிவிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x