Published : 24 Aug 2018 08:27 PM
Last Updated : 24 Aug 2018 08:27 PM

தேர்வில் காப்பியடித்த தமிழக ஐபிஎஸ் அதிகாரி நிரந்தரப் பணி நீக்கம்: உள்துறை அமைச்சகம் உத்தரவு

தமிழக ஐபிஎஸ் அதிகாரிகள் வரலாற்றில் முதன்முறையாக ஐஏஎஸ் தேர்வில் காப்பி அடித்த ஐபிஎஸ் அதிகாரி சிக்கினார். கைதாகி ஜாமீனில் உள்ள அவரை ஐபிஎஸ் பொறுப்பிலிருந்தும் உள்துறை அமைச்சகம் நிரந்தரமாக நீக்கி உத்தரவிட்டுள்ளது.

மத்திய உள்துறை அமைச்சகத்தால் நாட்டின் மிக உயரிய தேர்வான குடிமைப்பணிகளுக்கான ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎப்எஸ் உள்ளிட்ட முக்கிய தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இதில் கிடைக்கும் ரேங்குகளைப் பொறுத்து ஐஏஎஸ், ஐபிஎஸ், சொந்த மாநிலத்தில் பணி போன்றவை நிர்ணயிக்கப்படும்.

இதில் தேர்ச்சி பெற்ற பலரும் ரேங்கை உயர்த்திக்கொள்ள மீண்டும் தேர்வு எழுதி மேலும் உயர்வான இடத்தை அடைவார்கள். கேரளாவை பூர்வீகமாகக் கொண்ட சபீர் கரீம் தமிழ்நாடு கேடர் ஐபிஎஸ் அதிகாரி ஆவார், நாங்குநேரி சப்டிவிஷனில் ஏஎஸ்பியாக பணியாற்றி வந்த இவர் ஐஏஎஸ் தேர்வுக்காக விண்ணப்பித்து கடந்த ஆண்டு அக்டோபர் 30-ம் தேதி எழும்பூர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்த எழுத்துத்தேர்வில் கலந்துகொண்டார்.

தேர்வு எழுதும்போது கமல் நடித்த ’வசூல் ராஜா எம்பிபிஎஸ்’ படத்தில் திருட்டுத்தனமாக ப்ளூடூத் மாட்டிக்கொண்டு காப்பி அடிப்பது போல் தானும் ப்ளூடூத் மூலம் மனைவியிடம் கேள்விக்கான விடையைக் கேட்டு எழுதினார். இதைக் கவனித்த அதிகாரிகள் அவரை கையும் களவுமாகப் பிடித்தனர்.

தேர்வில் காப்பியடித்ததாக பிடிபட்ட ஷபீர் மீது மோசடி(420), கூட்டுச்சதி(120(பி)), 34 மற்றும் 66 ஐடி பிரிவு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில் தேர்வில் ப்ளூடூத் மூலம் காப்பியடிக்க உதவியதாக, அவரது மனைவி ஜாய்சி ஜோசியும் மற்றொரு நண்பர் டாக்டர் ராம் பாபு என்பவரும் கைது செய்யப்பட்டனர்.

சபீர் கரீம் தனது மனைவி மற்றும் நண்பருடன் சேர்ந்து ஐஏஎஸ் அகாடமி மையங்களை நடத்தி வந்தார். கைது செய்யப்பட்ட சபீர் கரீம் பின்னர் ஜாமீனில் வெளிவந்தார். அவரது வழக்கு சிபிசிஐடி போலீஸுக்கு மாற்றப்பட்டது. இந்நிலையில் ஏற்கெனவே சஸ்பெண்ட் செய்யப்பட்டிருந்த சபீர் கரீமின் குற்றப்பின்னணியை ஆராய்ந்த மத்திய உள்துறை அமைச்சகம், யுபிஎஸ்சி தேர்வாணையம் நடத்திய விசாரணைக்குப் பின் சபீர் கரீம் ஐபிஎஸ் பணியில் இருந்து நிரந்தரமாக நீக்கம் செய்யப்பட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x