Published : 24 Aug 2018 06:51 PM
Last Updated : 24 Aug 2018 06:51 PM

கணவரை எரிப்பதா, புதைப்பதா?- இறுதிச்சடங்கில் சண்டையிட்ட மனைவிகள்: ஒருவாரத்துக்கு மேல் பிணவறையில் உடல்; கெடு விதித்த நீதிமன்றம்

கணவர் இறந்து ஒருவாரம் ஆகியும் அவரை இந்து முறைப்படி எரிப்பதா அல்லது கிறிஸ்தவ முறைப்படி புதைப்பதா எனக் கூறி நீதிமன்றத்தை நாடிய இரு மனைவிகளுக்கு கெடுவிதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

சென்னை ஓட்டேரியைச் சேர்ந்தவர் தட்சிணாமூர்த்தி. இவருக்கு இரு மனைவிகள் இருக்கின்றனர். இந்து மதத்தைச் சேர்ந்த முதல் மனைவியின் பெயர் டி தங்கம்மாள். கிறிஸ்துவ மதத்தைச் சேர்ந்த பெண்ணான யேசுமேரியை 2-வதாக தட்சிணாமூர்த்தி திருமணம் செய்தார்.

முதல்மனைவி தங்கம்மாளுக்கு ஜானகிராமன், சரவணன் ஆகிய இரு மகன்களும் 2-வது மனைவிக்கு ஒரு மகளும் உள்ளனர்.

இந்நிலையில், கடந்த 16-ம் தேதி தட்சிணாமூர்த்தி உடல்நலக் குறைவு காரணமாக மரணமடைந்தார். ஆனால், முதல் மனைவியான தங்கம்மாள் அவரின் மகன்கள் ஜானகிராமன், சரவணன் ஆகியோர் இந்து முறைப்படி தட்சிணாமூர்த்தியை எரியூட்ட முடிவு செய்தனர்.

ஆனால், 2-வது மனைவியின் குடும்பத்தினரோ தட்சிணாமூர்த்தி இறக்கும் தருவாயில் தன்னைக் கிறிஸ்தவ முறைப்படி அடக்கம் செய்ய தெரிவித்துள்ளார் என்றனர். இதனால், தட்சிணாமூர்த்தியின் இறுதிச்சடங்கை எப்படிச் செய்வது என்ற குழப்பம் இருதரப்பிலும் ஏற்பட்டது. இது தொடர்பாக ஓட்டேரி போலீஸ் நிலையத்தில் இரு தரப்பினரும் புகார் அளித்ததால், உடலைக் கைப்பற்றி போலீஸார் அரசு மருத்துவமனையில் வைத்தனர்.

இதையடுத்து, முதல்மனைவியின் மகன்கள் ஜானகிராமன், சரவணன் ஆகியோர் கூட்டாக இணைந்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். அதில், தங்களுடைய தந்தையின் இறுதிச்சடங்கு செய்யும் போது பாதுகாப்பு அளிக்க ஓட்டேரி போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு உத்தரவிட வேண்டும் என கோரினார்கள்.

அதேபோல தட்சிணாமூர்த்தியின் 2-வது மனைவி யேசுமேரியின் மகள் ஹேமலாதாவும் உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். அதில் தனது தந்தையைக் கிறிஸ்தவ முறைப்படி அடக்கம் செய்ய இருப்பதால், ஓட்டேரி போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் பாதுகாப்பு அளிக்க உத்தரவிடக்கோரி மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனு உயர் நீதிமன்ற நீதிபதி பி.என் பிரகாஷ் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுவை விசாரணை செய்த நீதிபதியிடம் 2-வது மனைவி சார்பில் கடிதம் அளிக்கப்பட்டது. அதில் தட்சிணாமூர்த்தி கொலப்பாக்கத்தில் உள்ள இடத்தில் தன்னை கிறிஸ்தவமுறைப்படி அடக்கம் செய்ய வேண்டும் என்று தெரிவித்திருந்தார். அதில் கையொப்பம் இடுவதற்கு பதிலாகக் கைவிரல் ரேகை வைக்கப்பட்ட கடிதத்தை அளித்தனர். அந்தக் கடிதம் அவர் இறந்த அன்று எழுதப்பட்டு இருந்தது

ஆனால், இந்தக் கடிதத்தை பரிசீலிக்கக் கூடாது என்று முதல் மனைவியின் தரப்பில் கூறி, கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்தனர். தட்சிணாமூர்த்தி இறக்கும் தருவாயில் 2-வது மனைவியின் வீட்டில் இருந்து இறந்ததால், 2-வது மனைவி தனக்கு தெரியாமல் கைவிரல் ரேகையைப் பெற்றிருப்பார் என்று முதல் மனைவி தங்கம்மாள் தரப்பினர் வாதிட்டனர். இதனால், நீதிமன்றத்தில் சலசலப்பு ஏற்பட்டது.

இது தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி பிரகாஷ், மனுதாரர்கள் இருவருக்கும் 2 நாட்கள் கெடுவிதித்தார். இரு நாட்களுக்குள் இரு தரப்பினரும் பேசி முடிவுக்கு வர வேண்டும். தட்சிணாமூர்த்தி இறந்து ஏற்கனவே ஒரு வாரத்துக்கு மேல் ஆகிவிட்டதால், தொடர்ந்து அரசு மருத்துவமனையின் பிணவறையில் காரணமின்றி உடலை வைத்திருக்க முடியாது.

இரு நாட்களுக்குள் இரு தரப்பினரும் முடிவுக்கு வராவிட்டால், போலீஸார் ஆதரவில்லாத உடலை எவ்வாறு அடக்கம் செய்வார்களோ அதுபோல் அடக்கம் செய்துவிடலாம் என்று கூறி மனுக்களைத் தள்ளுபடி செய்தார்.

இறுதியாக, சிலருக்கு இறப்பில்கூட மகிழ்ச்சி வந்துசேராது என்பார்கள், அது இந்த வழக்கில் தட்சிணாமூர்த்தியை குறிப்பிடலாம் எனக் கூறி நீதிபதி முடித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x