Published : 24 Aug 2018 05:32 PM
Last Updated : 24 Aug 2018 05:32 PM

கருணாநிதி இரங்கல் கூட்டத்தில் அதிமுக கலந்துகொள்ளுமா? - துணை முதல்வர் ஓ.பி.எஸ். விளக்கம்

மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் நினைவேந்தல் கூட்டத்தில் கலந்துகொள்ள அழைப்பு விடுத்தால் ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என, அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு வரும் 30-ம் தேதி மாலை 4 மணிக்கு சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ திடலில் ‘தெற்கில் உதித்தெழுந்த சூரியன்’ என்ற தலைப்பில் அகில இந்தியத் தலைவர்கள் பங்கேற்கும் கூட்டம் நடக்கிறது. பாஜக தலைவர் அமித் ஷா, காங்கிரஸ் மூத்த தலைவரும், மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவருமான குலாம்நபி ஆசாத், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் தேசிய செயலாளர் டி.ராஜா, பிஹார் முதல்வர் நிதிஷ்குமார், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. டெரிக் ஓ பிரையன் உள்ளிட்ட அகில இந்தியத் தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர்.

இந்நிலையில், சென்னை விமான நிலையத்தில் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களை சந்தித்த துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திடம் கருணாநிதி நினைவேந்தலுக்கு பாஜக தேசிய தலைவர் அமித்ஷா வருவதை எப்படி பார்க்கிறீர்கள் என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த ஓ.பி.எஸ்., “திமுக அழைப்பு விடுத்து அவர் வருவதில் நாங்கள் கருத்து சொல்ல என்ன இருக்கிறது? நீண்ட காலம் கருணாநிதி தமிழக சட்டப்பேரவை உறுப்பினராகவும், 5 முறை தமிழக முதல்வராகவும் இருந்திருக்கிறார். அவருடைய இரங்கல் கூட்டத்திற்கு பல்வேறு கட்சியினருக்கு அழைப்பு விடுக்கிறார்கள். அதில் கலந்துகொள்வதில் எந்த தவறும் இல்லையே?” என தெரிவித்தார்.

இதையடுத்து, இரங்கல் கூட்டத்தில் அதிமுகவினர் கலந்துகொள்வார்களா என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு, “எங்களுக்கு அழைப்பு விடுத்தால் கலந்துகொள்வது குறித்து கட்சியினருடன் ஆலோசித்து முடிவெடுக்கப்படும்” என தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x