Published : 24 Aug 2018 04:38 PM
Last Updated : 24 Aug 2018 04:38 PM

ஒரு நாளைக்கு 20 முறை வலிப்பு: மருத்துவர்கள் கைவிட்ட மகனை கருணைக் கொலை செய்ய பெற்றோர் மனு; உயர் நீதிமன்றம் புதிய உத்தரவு

வலிப்பு நோய் மற்றும் மூளை பாதிப்புக்குள்ளான மகனை மருத்துவர்கள் கைவிட்ட நிலையில் கருணைக் கொலை செய்ய அனுமதி கோரி பெற்றோர் தொடர்ந்த வழக்கில், அச்சிறுவனை பரிசோதிக்க தகுதியான மருத்துவர்களை தேர்வு செய்வதற்கு 3 மருத்துவ நிபுணர்கள் கொண்ட குழுவை அமைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடலூர் மாவட்டம் சோழத்தரத்தை சேர்ந்த திருமேனி. தையல் தொழிலாளியான இவருக்கு இரண்டு மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். கடந்த 2008-ம் ஆண்டில் பிறந்த இவரது மகனால் வாய் பேச முடியாது. மேலும் அவனுக்கு அடிக்கடி வலிப்பு ஏற்படுவதோடு, மூளையும் பாதிக்கப்பட்டுள்ளது.

பத்து வயதான இவரது மகனை பல்வேறு குழந்தைகள் நல மருத்துவர்களிடம் சென்று சிகிச்சை அளித்தும் இதுவரை எந்த பயனும் இல்லை. மேலும் தையல் தொழிலாளி என்பதால் பெரிய அளவில் சிகிச்சை அளிக்கவும் பொருளாதார வசதி இல்லை. இதைவிட கொடுமையாக தினமும் அந்த சிறுவனுக்கு 20 முறை வலிப்பு வரும்.

இதை பெற்றோரால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. மருந்துகள் கொடுத்தால் வலிப்பு ஏற்படும் எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கிறது. இந்நிலையில் சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள் உங்கள் மகனை குணப்படுத்த முடியாது என திருமேனியிடம் தெரிவித்துவிட்டனர்.

ஒரு நாளைக்கு 20 முறைக்கு மேல் வலிப்பு வந்து கஷ்டப்படும் மகனின் நிலையை காணச்சகிக்காத திருமேனி தனது மகனை கருணைக்கொலை செய்ய அனுமதிக்க வேண்டும் என கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் என்.கிருபாகரன், எஸ்.பாஸ்கரன் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. சிறுவனை பரிசோதனை செய்வதற்கான தகுதியான மருத்துவர்களை தேர்வு செய்வதற்காக 3 மருத்துவ நிபுணர்கள் கொண்ட குழுவை அமைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

அதன்படி அக்குழுவில் அப்பல்லோ மருத்துவமனை நரம்பியல் துறை மருத்துவர் ரெஜினால்ட், ஓய்வுபெற்ற குழந்தைகள் நல மருத்துவர் ராமச்சந்திரன், மத்திய அரசின் சுகாதார திட்டங்களுக்கான தலைமை அதிகாரி உமா மகேஸ்வரி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இந்த மூவர் குழு சென்னையில் உள்ள அரசு பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் ஆலோசனை செய்து, பாதிக்கப்பட்ட சிறுவனை பரிசோதனை செய்ய தகுதியான மருத்துவர்களை தேர்வு செய்து அதற்கான அறிக்கையை செப்டம்பர் 10-ம் தேதி தாக்கல் செய்யவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x