Published : 24 Aug 2018 04:10 PM
Last Updated : 24 Aug 2018 04:10 PM

பாலியல் புகாருக்குள்ளான ஐஜி எப்படி முதல்வர் மீதான ஊழல் புகார்களை முறையாக விசாரிப்பார்? - ஸ்டாலின் கேள்வி

 புகாருக்குள்ளான லஞ்ச ஒழிப்புத் துறை இணை இயக்குனரை உடனடியாக இடமாற்றம் செய்து விட்டு, நேர்மையான ஐஜியை இணை இயக்குனராக நியமித்து ஊழல் புகார்களை விரைந்து விசாரிக்க வேண்டும் என, திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், “அமைச்சர்கள், துணை முதல்வர், முதல்வர் ஆகியோர் மீது கொடுக்கப்படும் ஊழல் புகார்கள் அனைத்தும் தமிழ்நாடு லஞ்ச ஊழல்தடுப்புத் துறையில் ஆமை வேகத்தில் கூட நகர முடியாமல் தேங்கிக்கிடப்பது அதிர்ச்சியளிக்கிறது.

தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் உள்ளிட்ட போலீஸ் டிஜிபிக்கள் மீது வருமான வரித்துறை அளித்த குட்கா டைரி தொடர்பான வழக்குகள் கிடப்பில் போடப்பட்டதால் இறுதியில் அந்த வழக்கினை சென்னை உயர் நீதிமன்றமே சிபிஐ விசாரணைக்கு அனுப்பி, அதை உச்ச நீதிமன்றமும் உறுதி செய்திருக்கிறது.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின் போது சுகாதாரத்துறை அமைச்சர் வீட்டிலும், அவரது அலுவலகங்களிலும் நடத்தப்பட்ட வருமான வரித்துறை சோதனை பற்றிய அறிக்கை தலைமைச் செயலாளருக்கு அனுப்பப்பட்டு, அதுவும் தற்போது லஞ்ச ஊழல் தடுப்புத் துறையில் முடங்கிக் கிடக்கிறது.

திமுக சார்பில், துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் மீது கொடுக்கப்பட்ட வருமானத்திற்கு அதிகமாக சொத்துக் குவித்த புகாரின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் லஞ்ச ஊழல் தடுப்புத்துறை அமைதி காத்தது. பிறகு திமுக சார்பில் தொடுக்கப்பட்ட வழக்கில் உயர் நீதிமன்றமே விசாரணைக்கு உத்தரவிட்டிருக்கிறது.

அந்த விசாரணையை மேற்கொள்ள, செப்டம்பரில் ஓய்வு பெற இருக்கும் திருநாவுக்கரசு என்ற கூடுதல் டிஎஸ்பியை போலீஸ் அகாடமியிலிருந்து அவசர அவசரமாக லஞ்ச ஊழல் தடுப்புத் துறைக்கு மாற்றி, அவர் மூலம் அந்த வழக்கை நீர்த்துப் போகச் செய்வதற்கான அனைத்து முயற்சிகளும் நடைபெறுகின்றன என்று செய்திகள் வருகின்றன.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி பொறுப்பில் உள்ள நெடுஞ்சாலைத்துறை ஊழல்கள் குறித்து விசாரித்து, அவர் மீது நடவடிக்கை எடுக்க திமுக சார்பில் லஞ்ச ஊழல் தடுப்புத் துறைக்கு புகார் அளிக்கப்பட்டு, அதுவும் கிடப்பில் போடப்பட்டிருக்கிறது.

அதிமுக அமைச்சர்கள், துணை முதல்வர், முதல்வர் ஆகியோர் மீது உள்ள ஊழல் புகார்களை விசாரிக்கும் இந்த லஞ்ச ஊழல் தடுப்புத் துறையின் இணை இயக்குனரான ஐஜி மீது, இப்போது ஒரு பெண் எஸ்பியே பாலியல் புகார் அளித்து, அந்தப் புகாரை , விசாகா கமிட்டி அடிப்படையில் தற்போது அவசரம் அவசரமாக அமைக்கப்பட்டுள்ள கூடுதல் டிஜிபி தலைமையிலான துறை சார்ந்த விசாரணைக் கமிட்டி வியாழக்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொண்டிருக்கிறது.

அதற்கு முன்பாகவே, பாலியல் தொல்லைக்கு உள்ளான எஸ்பி லஞ்ச ஊழல் தடுப்புத் துறையிலிருந்து மாற்றப்பட்டுள்ளார். ஆனால், புகாருக்கு ஆளாகியிருக்கும் அதே துறையின் இணை இயக்குனர் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

புகாருக்கு உள்ளான ஐஜியின் கீழ்தான் அதிமுக அமைச்சர்கள் முதல் முதல்வர் வரை உள்ள அனைத்து லஞ்ச ஊழல் புகார்களும் விசாரணையில் இருப்பதை இந்த நேரத்தில் மறந்து விட முடியாது. கடுமையான குற்றச்சாட்டுக்கு உள்ளான ஒரு அதிகாரியை வைத்து லஞ்சப் புகார்களை விசாரித்தால் எப்படி நியாயம் கிடைக்கும்? எப்படி ஊழல் மீது நடவடிக்கை எடுக்கப்படும்? என்பது கேள்விக்குறியாக இருக்கிறது.

ஆகவே, சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மீது வருமான வரித்துறை அனுப்பியுள்ள அறிக்கை விவரங்களை பொதுமக்களின் பார்வைக்கு வெளியிட்டு, அந்த அறிக்கையின் மீது நடவடிக்கை எடுக்கவும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மீதான ஊழல் வழக்கினை ஓய்வு பெறப் போகும் அதிகாரியை வைத்து விசாரிப்பதற்குப் பதிலாக, லஞ்ச ஊழல் தடுப்புத் துறையில் எஸ்பி அந்தஸ்தில் உள்ள அதிகாரியையே விசாரணை அதிகாரியாக நியமித்து விசாரிக்கவும், லஞ்ச ஊழல் தடுப்புத்துறை இயக்குநர், மாநில லஞ்ச ஒழிப்புத் துறை ஆணையர், தலைமைச் செயலாளர் ஆகியோர் நேர்மை-நியாயம்- நீதியைக் காப்பாற்ற உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதுமட்டுமின்றி, புகாருக்குள்ளான இணை இயக்குனரின் கீழ் நடைபெறும் இந்த ஊழல் விசாரணைகள் நிச்சயமாக பாரபட்சமற்ற முறையில் சுதந்திரமாக நடைபெறாது என்பதால், அவரை உடனடியாக மாற்றி விட்டு, நேர்மையான ஒரு ஐஜியை இணை இயக்குனராக நியமித்து, இந்த ஊழல் வழக்குகளை எல்லாம் விரைவாகவும் முறையாகவும் விசாரிக்க உத்தரவிட வேண்டும்” என மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x