Published : 24 Aug 2018 03:32 PM
Last Updated : 24 Aug 2018 03:32 PM

வங்கிகள், நிதி நிறுவனங்களில் கண்காணிப்பு கேமரா கட்டாயம்: காவல்துறை ஆலோசனைக்கூட்டத்தில் முடிவு

வங்கி மற்றும் நிதி நிறுவனங்கள், தங்கள் வளாகங்கள் மற்றும் வெளிப்புறங்களில் கட்டாயம் சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும் என  சென்னை காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

சென்னையில் நடைபெற்ற குற்றங்கள், அசம்பாவிதங்கள், வாகன விபத்துக்கள் மற்றும் வன்முறை சம்பவங்களின்போது உண்மை தன்மையை அறிந்து கொள்வதற்கு சிசிடிவி கேமரா காட்சிகள் பெரிதும் உதவியுள்ளன.

மேலும், கொலை, கொலை முயற்சி மற்றும் கொள்ளை சம்பவங்களிலும், செயின் பறிப்பு, வழிப்பறி சம்பவங்களிலும் குற்றவாளிகளை கண்டுபிடிப்பதற்கு சிசிடிவி கேமராக்கள் உதவியுள்ளன.

ஆகவே, இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த சிசிடிவி கேமராக்களை சென்னை மாநகர் முழுவதும் அவசியம் பொருத்த வேண்டும் எனவும் இதுகுறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் எனவும் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் ஏ.கே.விசுவநாதன் உத்தரவிட்டார்.

இதன் பேரில், காவல்துறை சார்பாக பொதுமக்கள், வியாபாரிகள் மற்றும் தனியார் நிறுவனங்களிடையே சிசிடிவி கேமரா பொருத்துவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.

கண்காணிப்பு கேமராவின் அவசியம் குறித்து காவல்துறையினர் மூலம் துண்டு பிரசுரங்கள் மூலம் விழிப்புணர்வு பிரச்சாரங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

இதன் தொடர்ச்சியாக சென்னையிலுள்ள வங்கிகள் மற்றும் வங்கி அல்லாத நிதி நிறுவனங்களின் அதிகாரிகள் மற்றும் நிர்வாகிகளுடன் சென்னை பெருநகர காவல்துறை சார்பில் சிசிடிவி கேமராக்கள் பொருத்துவதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு கலந்தாய்வுக்கு கூட்டம் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நடைபெற்றது.

இந்த கலந்தாய்வு கூட்டத்தில், சென்னையிலுள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள், தனியார் வங்கிகள் மற்றும் நிதி நிறுவன அதிகாரிகளுடன் சென்னை காவல் கூடுதல் ஆணையர்கள் மகேஷ்குமார் அகர்வால், தினகரன், வடக்கு மண்டல இணை ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா, சட்டம் ஒழுங்கு நான்கு மண்டல இணை ஆணையர்கள் அன்பு, மகேஸ்வரி, விஜயகுமாரி, காவல் துணை ஆணையர்கள் மற்றும் காவல் அதிகாரிகள் கலந்துரையாடினர்.

சென்னையில் குற்றவாளிகளின் நடமாட்டத்தை கண்காணிக்கவும், குற்றங்கள் நடக்காமல் தடுக்கவும் சிசிடிவி கேமராக்கள் பெரிதும் உதவுகின்றன எனவும், இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த சிசிடிவி கேமராக்களை தங்களது வங்கி மற்றும் அலுவலக வளாகங்களின் வெளிப்புறங்களிலும் கட்டாயம் பொருத்த வேண்டும் எனவும், அவை சாலை மற்றும் சுற்றுப்புறங்களை கண்காணிப்பதற்கு ஏதுவாக அமைக்கப்பட வேண்டும் எனவும் காவல்துறை சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

இக்கலந்தாய்வில் கீழ்க்கண்ட சில அறிவுரைகள் மற்றும் ஆலோசனைகள் வழங்கப்பட்டன.

* நிதி நிறுவனங்கள் தங்களது வளாகங்களின் முக்கிய இடங்களிலும் குறிப்பாக நுழைவு வாயில்கள் மற்றும் அலுவலக மையப்பகுதிகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்த வேண்டும்.

* துரிதமாக தொடர்பு கொள்ளும் கருவிகள் மற்றும் தரம் வாய்ந்த சிசிடிவி கேமராக்கள் மற்றும் அதன் காட்சி பதிவுகளை சேமித்து வைக்க அதிக திறன் கொண்ட சேமிப்புத் திறன் கருவிகள் போன்றவை வைத்திருத்தல் வேண்டும்.

* 60 வயதுக்கு குறைந்த நபர்களே காவலாளிகளாக நியமிக்க வேண்டும்.

* காவலாளிகளை எளிதில் தொடர்பு கொள்ள செல்போன், பாதுகாப்பு தடுப்பு ஆயுதங்கள் வழங்க வேண்டும்.

* காவலாளிகள் நல்ல உடல்திறன், கண்பார்வை, கெட்டப் பழக்கங்கள் இல்லாத நபர்களாக இருத்தல் வேண்டும். மேலும், மேற்பார்வையாளர்கள் மூலம் அடிக்கடி காவலாளிகளை கண்காணிக்க வேண்டும்.

* வங்கி மோசடி குறித்து விழிப்புணர்வு வாசகங்கள் வங்கி படிவங்கள் பின்புறத்தில் அச்சிடப்பட்டிருத்தல் வேண்டும். அதே போல வங்கி வளாகத்தில் பொதுமக்கள் பார்க்கும்படி எழுதி வைத்திருத்தல் வேண்டும்.

* பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்த துண்டு பிரசுரங்கள் வங்கி வளாகங்களில் வைத்திருந்து அங்கு வருகை தரும் பொதுமக்களுக்கு வழங்க வேண்டும்.

* தங்களது எல்லைக்குட்பட்ட காவல் நிலைய தொலைபேசி எண்கள், அவசர தொலைபேசி எண்கள் தேவையான இடங்களில் எழுதி பொதுமக்களுக்கு தெரியும்படி வைத்திருத்தல் வேண்டும்.

* சோதனை செய்யும் கருவிகள், ஸ்கேனர் போன்றவை வைக்கப்பட்டு, வாடிக்கையாளர்களை சோதனைகளுக்கு பின்னரே அனுமதிக்க வேண்டும்.

* பாதுகாப்பு குறித்து தங்களது எல்லை காவல் நிலைய அதிகாரிகளுடன் மாதந்தோறும் கலந்தாய்வு நடத்தி, பாதுகாப்பினை உறுதிப்படுத்த வேண்டும்.

* அனைத்து வங்கிகளுக்கும் மேற்பார்வை அதிகாரிகள் (Nodal Officer) இருத்தல் வேண்டும்.

இக்கலந்தாய்வில் கலந்து கொண்ட வங்கி அதிகாரிகள் தெரிவித்த குறைகள் மற்றும் ஆலோசனைகள் காவல்துறையால் பெறப்பட்டு, குறைகளை நீக்குவதற்கான வழிவகைகள் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x