Published : 24 Aug 2018 02:53 PM
Last Updated : 24 Aug 2018 02:53 PM

கடைமடை பகுதிகளுக்கு காவிரி நீர் செல்வதை உறுதி செய்யாத தமிழக அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்: அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் அறிவிப்பு

கடைமடை பகுதிகளுக்கு காவிரி நீர் செல்வதை உறுதி செய்யாமல், தூர்வாரும் பணி என்ற பெயரில் நடைபெறும் தமிழக அரசின் முறைகேடுகளை கண்டித்து வரும் செப்டம்பர் 2 ஆம் தேதி திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக அக்கட்சி தலைமைக் கழகம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:

“தமிழகத்தின் வாழ்வாதாரமாக திகழும் காவிரி நீரின் உரிமைக்காக ஒட்டுமொத்த தமிழகமும் போராடியதை யாரும் மறந்திருக்க முடியாது. இயற்கை அன்னை நமக்கு துணையாக இருந்ததால், கர்நாடக மாநிலத்தில் தென்மேற்கு பருவ மழை பெய்து கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகளில் நீரைத் தேக்கிவைக்க முடியாமல், தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டது. இதனால், இரண்டு முறை மேட்டூர் அணை தனது முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது. மேட்டூரிலிருந்து வந்த காவிரி நீர் திருச்சி முக்கொம்பிலிருந்து காவிரி மற்றும் கொள்ளிடத்திற்கு அதிகளவில் திறந்துவிடப்பட்டது.

இந்நிலையில் காவிரி மற்றும் கொள்ளிடத்தில் வெள்ளம் கரைபுரண்டு சென்றாலும் கூட கடைமடை பகுதிகளுக்கு இதுவரை தண்ணீர் செல்லவில்லை என்று டெல்டா விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர். குறிப்பாக, தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை, பேராவூரணி, மதுக்கூர், திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி, பேரளம் மற்றும் நாகை மாவட்டம் மயிலாடுதுறை, சீர்காழி, திருமருகல் ஒன்றியங்களில் கடைமடை வரை தண்ணீர் இதுவரை செல்லவில்லை.

மேட்டூர் அணை இரண்டு முறை நிரம்பிய பின்னரும், கொள்ளிடத்திலிருந்து தண்ணீர் வீணாக கடலில் கலந்துக்கொண்டிருக்கிறது. கடைமடை பகுதிகளுக்கு தண்ணீர் செல்லாததற்கு காரணம் வாய்க்கால், ஏரி, குளங்கள், ஆற்று வழித்தடங்கள் ஆகியவற்றை இந்த அரசாங்கம் தூர்வாராததே என்று விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர்.

மேலும், விவசாயத்தை அழிக்கும் மத்திய அரசின் திட்டங்களான மீத்தேன், கெயில் மற்றும் கச்சா எண்ணெய், நிலக்கரி எடுக்கும் திட்டத்திற்காக பெட்ரோலிய மண்டலமாக குறிக்கப்பட்டுள்ள அப்பகுதிகளை தொடர்ந்து வறண்டு கிடக்கச் செய்யும் மிகப் பெரிய சதி திட்டத்தின் வெளிப்பாடுதான், அப்பகுதிகளில் தண்ணீரை எடுத்துச் செல்ல இந்த அரசு முனைப்பு காட்டாததற்கு காரணம் என்று விவசாயிகள் வேதனையடைகின்றனர்.

காவிரியில் நீர் கரைபுரண்டோடும் நிலையிலும், டெல்டா மாவட்டங்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏரிகள் வறண்டு கிடப்பதையும், பல லட்சம் ஏக்கர் பாசனப் பகுதி இன்னும் பாலைவனமாக உள்ளதையும் அங்கு நிலத்தடி நீர் மட்டமும் குறைந்துக்கொண்டு வருவதையும் எடுத்துரைத்து, அரசாங்கத்தின் அலட்சியத்தைக் கண்டித்து வரும் செப்டம்பர் 2 ஆம் தேதி அன்று மாலை 4 மணி அளவில் திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் பெரியார் சிலை அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

விவசாயத்தையும், விவசாயிகளையும் பாதுகாப்பதை எப்போதும் முதற் கடமையாக கொண்டு செயல்படும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கலந்துகொண்டு உரையாற்றுவார்.

இக்கண்டன ஆர்ப்பாட்டத்தில், டெல்டா பாசன விவசாயிகள் சங்க தலைவர் எஸ்.ரங்கநாதன், தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கத்தின் தலைவர் அய்யாகண்ணு, தமிழக அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் பி.ஆர்.பாண்டியன் ஆகியோரும் கலந்துகொள்ள இருக்கின்றனர்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x