Published : 24 Aug 2018 02:24 PM
Last Updated : 24 Aug 2018 02:24 PM

முதல்வர் மீது ஊழல் புகார்: திமுக புகாரில் என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்? அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

நெடுஞ்சாலைத்துறையில் டெண்டர் வழங்கியதில் ரூ.4800 கோடி வரை முறைகேடு நடந்திருப்பதாக ஆர்.பாரதி லஞ்ச ஒழிப்புத் துறையில் அளித்த புகார் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரி தொடர்ந்த வழக்கில் அரசு பதிலளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் நெடுஞ்சாலை அமைக்க, பராமரிப்பு உள்ளிட்ட நெடுஞ்சாலைப் பணிகள் நடக்க டெண்டர் ஒதுக்கியதில் முறைகேடு நடைபெற்றதாக கூறி திமுக சார்பில் ஆர்.எஸ்.பாரதி லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் அளித்திருந்தார். அவரது புகாரில் நெடுஞ்சாலைப் பணிகளில் திட்டங்களை ஒதுக்கீடு செய்ததில் முறைகேடு நடந்ததுள்ளதாகவும், முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் கோரிக்கை வைத்திருந்தார்.

அவரது கோரிக்கை மனுவில் திண்டுக்கல், ஒட்டன்சத்திரம் தாராபுரம் அவினாசி நான்கு வழிச்சாலையில் திட்டப்பணிகளுக்கான திட்ட மதிப்பீட்டை ரூ.213 கோடியிலிருந்து ரூ.515 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளதாகவும், இந்த ஒப்பந்தப் பணிகள் முதல்வக்கு நெருக்கமானவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும், இதே போன்று சுமார் ரூ.720 கோடி கோடி மதிப்பிலான செங்கோட்டை கொல்லம் இடையிலான நான்குவழிச்சாலைப் பணிகள் வெங்கடாசலபதி அண்ட் கோ நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும், பெங்களூரு முதல் வாலாஜாபாத் வரையிலான 6 வழிச்சாலை திட்டப்பணிகளுக்கான 800 கோடி மதிப்பிலான நெடுஞ்சாலை திட்டப்பணிகள் முதலமைச்சரின் நெருக்கமானவர்கள், நண்பர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் குற்றம் சாட்டியிருந்தார்.

மேலும் திருவள்ளூர், கிருஷ்ணகிரி, பொள்ளாச்சி, விருதுநகர் ராமநாதபுரம் உள்ளிட்ட கோட்டங்களிலுள்ள நெடுஞ்சாலைகளை பராமரிப்பதற்கான, கட்டமைப்பதற்கான 5 ஆண்டுகான ரூ.2000 கோடி மதிப்பிலான திட்டப்பணிகளை வெங்கடாசலபதி அண்ட் கோ நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் நெடுஞ்சாலை ஒப்பந்தப் பணிகளில் 4800 கோடி ரூபாய் அளவிற்கு முறைகேடு நடந்துள்ளதாகவும் கூரியிருந்தார்.

இது குறித்து தாம் லஞ்ச ஒழிப்புத் துறையில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கடந்த ஜூன் மாதம் புகார் அளித்தும் இதுவரை நடவடிக்கை இல்லை, ஆகவே இது குறித்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என திமுக எம்.பி. ஆர்.எஸ்.பாரதி புகாரில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு உயர் நீதிமன்ற நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது லஞ்ச ஒழிப்புத் துறை சார்பில் ஆஜரான அரசு மூத்த வழக்கறிஞர், தனது பதிலை அளித்தார். அவரது வாதத்தில் “ஆர்.எஸ்.பாரதி புகார் மீது, லஞ்ச ஒழிப்புத் துறை சார்பில் கடந்த ஜூலை 22 முதல் பூர்வாங்க அடிப்படையிலான விசாரணை நடந்து வருகிறது. ஜூலை 22 முதல் ஆரம்பகட்ட விசாரணை நடத்தி வருகிறோம், பூர்வாங்க விசாரணை முடிந்த பின்னர்தான் மனுதாரரின் கோரிக்கை குறித்து பரிசீலிக்க முடியும்.” என்று தெரிவித்தார்.

மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ தனது வாதத்தில் “நாங்கள் புகார் அளித்து 2 மாதங்களுக்கு மேலாகிறது. உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் புகார் அளித்த 7 நாட்களுக்குள் ஆரம்பகட்ட விசாரணை நடத்தி முடித்துவிட்டு நடவடிக்கை எடுக்கவேண்டும்.

இல்லையென்றால் வழக்கு குறித்த விபரங்களை மனுதாரருக்கு தெரிவிக்க வேண்டும். ஆனால் லஞ்ச ஒழிப்புத் துறை இந்த விவகாரத்தில் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை, உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலுக்கு மாறாக விசாரணை என்ற பெயரில் தேவையற்ற முறையில் லஞ்ச ஒழிப்புத் துறை காலதாமதத்தை ஏற்படுத்தி வருகிறது.” என்று வாதிட்டார்.

அப்போது குறிக்கிட்ட நீதிபதி ஜெகதீஷ் சந்திரா ஏற்கெனவே 2 மாதம் கடந்து விட்ட நிலையில் வழக்கு விசாரணையை ஏன் இன்னும் முடிக்கவில்லை? வழக்கு எந்த நிலையில் உள்ளது. வழக்கு விசாரணையை எப்போது முடிப்பீர்கள்? என்று கேள்வி எழுப்பினார்.

அரசுத் தரப்பு இது குறித்து பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை செப்.4-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x