Published : 24 Aug 2018 02:25 PM
Last Updated : 24 Aug 2018 02:25 PM

நமக்கு திடீர் காய்ச்சல் வருவதுபோல முக்கொம்பு அணை திடீரென உடைந்துள்ளது: முதல்வர் பழனிசாமி விளக்கம்

மனிதர்களுக்கு திடீரென நோய் ஏற்படுவது போலத்தான், கொள்ளிடம் மேலணையின் மதகுகள் உடைந்துள்ளன என, முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று (வெள்ளிக்கிழமை) திருச்சி, முக்கொம்பு கொள்ளிடம் மேலணையில் சேதமடைந்த கதவணைகளை பார்வையிட்ட பிறகு செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:

முக்கொம்பில், மேலணையின் 9 ஷட்டர்கள் உடைந்துள்ளன. அதை தற்காலிகமாக சீரமைக்கும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. இன்னும் 4 நாட்களுக்குள் அந்த சீரமைப்புப் பணி முழுமை பெறும்.

இதை தொடர்ந்து நிருபர்களின் கேள்விக்கு அவர் அளித்த பதில் வருமாறு:

கடந்த ஆண்டு கிருஷ்ணகிரி அணையில் உடைப்பு ஏற்பட்டது, இப்பொழுது கொள்ளிடம் மதகில் உடைப்பு ஏற்பட்டுள்ளதே?

கிருஷ்ணகிரி அணை உடையவில்லை, ஷட்டர் பழுதாகியிருந்தது. பழுதடைந்த ஷட்டரை சரி செய்துவிட்டார்கள்.

பொதுப்பணித்துறை சரியான திட்டமிடாத காரணத்தினால்....

அதெல்லாம் தவறு. கிருஷ்ணகிரியை பொறுத்தவரைக்கும், நிறைய கழிவுத் தண்ணீர் அந்த அணைக்கு வருகின்றது. அரிப்பு ஏற்பட்டு அந்த அரிப்பினால், அந்த ஷட்டர் பழுதடைந்தது, மாற்று ஷட்டர் அமைப்பதற்கு அதற்கு தகுந்தவாறு நடைமுறைப்படுத்தப்பட்டு, இன்றைக்கு பணிகள் நடைபெற்று வருகிறது, அந்தப் பணிகள் முடியும் தருவாயில் இருக்கின்றது.

9 மதகுகள் உடைவதற்கு என்ன காரணம்?

1836 ஆம் ஆண்டு கட்டப்பட்ட பழமையான கதவணை, கிட்டத்தட்ட 182 ஆண்டுகளுக்கு முன்பு, இந்த அணை கட்டப்பட்டிருக்கின்றது. இது முழுவதும் செங்கற்களால் கட்டப்பட்டிருக்கின்றது. கடந்த முறை 1924, 1977, 2005, 2013 அப்பொழுதெல்லாம் வெள்ளம் வந்த பொழுது, இந்த கொள்ளிடம் ஆற்றின் வழியாக, மேலணை வழியாக உபரிநீர் வெளியேறியிருக்கிறது.

அப்பொழுது, ஐந்து, ஆறு நாட்கள்தான் மேலணை வழியாக உபரிநீர் வெளியேறியிருக்கிறது. ஆனால், தற்பொழுது முதல்கட்டமாக 8 நாட்கள் தொடர்ந்து அதிக அளவில் உபரிநீர் இதன் வழியாக வெளியேறியது. அதற்குப் பிறகு இரண்டாம் கட்டமாக, 12 நாட்கள் தொடர்ந்து அதிக வெள்ள நீர், இந்த மேலணை வழியாக வெளியேறியிருக்கிறது. அதனுடைய அழுத்தத்தின் காரணமாக இது தற்பொழுது உடைந்திருக்கின்றது.

ஆண்டுதோறும் பராமரிக்கப்பட்டிருக்க வேண்டும், இதை முதலிலேயே பார்த்திருக்க வேண்டுமல்லவா?

ஆண்டுதோறும் பராமரித்துக் கொண்டுதான் வருகிறோம். நாம் கூட நன்றாகத்தான் இருக்கிறோம், திடீரென்று காய்ச்சல் வந்துவிடுகிறது அல்லவா? எல்லோரும் நன்றாகத்தான் இருக்கிறோம், யாருக்காவது நோய் வரும் என்று தெரியுமா? இது தற்காலிகமாக ஏற்பட்ட விபத்து. இதற்கான புதிய திட்டம் வகுக்கப்பட்டிருக்கின்றது. கொடி நடப்பட்டிருக்கின்றது, ஏற்கெனவே, மேலணையிலிருந்து 100 மீட்டருக்கு அப்பால் புதிய அணை ஒன்று கட்டுவதற்கு அரசு நடவடிக்கை எடுத்திருக்கின்றது.

முழுமையாக இரண்டு பக்கங்களிலும் கொள்ளிடத்தில் கட்டுகிறோம். 325 கோடி ரூபாய் மதிப்பில் இந்த பகுதியில் செய்கிறோம், அந்தப் பகுதியில் 10 கண்மாய் இருக்கிறது, அதற்கு 85 கோடி ரூபாய் மதிப்பில் அந்தப் பணியை அங்கு துவக்குகிறோம். ஆகவே, இரண்டு பகுதிகளிலுமே, புதிதாக 100 மீட்டருக்கு அப்பால் கதவணை கட்டப்படும், கிட்டத்தட்ட 15 மாதத்தில் கட்டுவதற்கு நிபுணர் குழு தெரிவித்திருக்கின்றார்கள். அந்தப் பணிகளெல்லாம் வேகமாக, துரிதமாக நடைபெறுவதற்கு உண்டான நடவடிக்கையை அரசு மேற்கொள்ளும்.

புதிய கதவணை கட்டும் பணி எப்பொழுது தொடங்கும்?

இப்பொழுதுதான் நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளது. முதற்கட்டப் பணி நடைபெறவேண்டும், அதற்கு விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு, விரைந்து வேகமாக துரிதமாக அந்தப் பணிகள் நடைபெற்று, அதை எந்த வடிவத்தில் கட்ட வேண்டும் என்பதையெல்லாம் நிபுணர் குழு மூலமாக ஆராயப்பட்டு, அந்தப் பணி விரைவில் துவங்கும்.

சம்பா விவசாயம் பாதிக்குமா?

எந்தவிதத்திலும் பாதிக்காது. ஏனென்றால், மேலணையைவிட காவிரி 2 அடி குறைவாக இருக்கின்றது. ஆகவே, இப்பொழுதே அதில் கிட்டத்தட்ட 15 ஆயிரம் கனஅடி தண்ணீர் சென்று கொண்டிருக்கிறது. இதில் மணல் மூட்டையை வைத்து, ஒன்றரை மீட்டர் தற்காலிகமாக தடுப்பு ஏற்படுத்தியிருக்கின்றார்கள், அப்படி தடுப்பு ஏற்படுத்தும்பொழுது எல்லா தண்ணீரும் அங்கு சென்று கொண்டிருக்கும். கிருஷ்ணசாகரிலிருந்து, கபினி அணையிலிருந்து தண்ணீரை இப்பொழுது குறைத்து விட்டார்கள். இப்பொழுது மேட்டூரிலிருந்து வரும் தண்ணீர் 15 ஆயிரம் கனஅடி தான்.

மணல் குவாரியினால்தான் இந்தப் பிரச்சினை என்று சொல்கிறார்களே?

மணல் குவாரிக்கும் இதற்கும் என்ன சம்பந்தம். மணல் குவாரியில் மணல் அள்ளுவதற்கு ஒரு வரைமுறை இருக்கின்றது. ஒரு அணையென்றால், அதிலிருந்து எவ்வளவு தூரம் அள்ளவேண்டுமென்ற வரைமுறைக்கு உட்பட்டுத்தான் மணல் அள்ளுவார்களேயொழிய புதிதாக அள்ளுவது கிடையாது. அனைத்து ஆட்சியிலும் அப்படித்தான் செய்தார்கள், அதிமுக ஆட்சியில் மட்டும்தான் என்பது தவறான கருத்து. குறிப்பிட்ட தூரத்திற்கு அப்பால்தான் மணல் அள்ளுவதற்கு அனுமதி கொடுக்கப்படுகிறது.

அதுமட்டுமல்ல, நாம் படிப்படியாக இந்த மணலை தடை செய்வதற்கு அரசு முயற்சி எடுத்துக் கொண்டிருக்கிறது. அதனால்தான், வெளிநாட்டிலிருந்து மணல் இறக்குமதி செய்வதற்கு, டெண்டர் விடப்பட்டு, இறுதி செய்யப்பட்டிருக்கிறது. அதுமட்டுமல்லாமல் மணலின் பயன்பாட்டை படிப்படியாக குறைத்து, எம்-சாண்ட் பயன்படுத்த வேண்டுமென்று அரசால் அறிவுறுத்தப்பட்டிருக்கின்றது.

கட்டுமான தொழில் செய்பவர்களுக்கும், பொதுமக்களுக்கும் அறிவுறுத்தப்பட்டு, ஆலோசனை வழங்கப்பட்டு, இப்பொழுது கிட்டத்தட்ட 20-லிருந்து 30 சதவிகித மக்கள் இன்றைக்கு எம்-சாண்ட் பயன்படுத்த வந்துவிட்டார்கள். படிப்படியாக விழிப்புணர்வை ஏற்படுத்தி, மணல் அள்ளுவது முழுவதும் தடைசெய்யப்பட்டு, முழுக்க, முழுக்க எம்-சாண்ட் மூலமாக கட்டுமானப் பணியை மேற்கொள்வதற்கு அரசு உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது. அதற்கு பொதுமக்களும், கட்டுமானத் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களும் ஒத்துழைக்க வேண்டும்.

கேரள வெள்ளத்திற்கு காரணம், முல்லைப் பெரியாறு அணையை திறந்ததுதான் என்று கேரள அரசு குற்றம் சாட்டியுள்ளதே?

ஒரு இடத்தில்தான் நம்முடைய தண்ணீர் செல்கின்றது. அனைத்து இடங்களுக்கும் எங்கிருந்து தண்ணீர் வந்தது? கேரளாவில் ஒரு இடத்தில் பாதிக்கவில்லை, இருக்கின்ற 80 அணைகளிலிருந்து உபரிநீர் வந்த காரணத்தினால்தான் பல இடங்களிலும் தண்ணீர் புகுந்து பாதித்திருக்கிறது. அரசு, வேண்டுமென்றே 152 அடிக்கு உயர்த்தக் கூடாது என்பதற்காக ஒரு தவறான கருத்தைச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

 ஏற்கெனவே, வெள்ளநீர் வருவதற்கு முன்பாகவே, ஒரு மாதத்திற்கு முன்பு, நிபுணர் குழு அங்கே வந்து ஆய்வு செய்து, அணை முழுமையாக பாதுகாப்பாக இருக்கின்றது என்று தெரிவித்திருந்தார்கள், 142 அடி தண்ணீர் தேக்கிக் கொள்ளலாம் என்று அவர்கள் தெரிவித்திருக்கின்றார்கள், பொதுப்பணித் துறை செயலாளர்கூட இதில் கலந்து கொண்டார்.

அதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள், நிபுணர்கள் மத்திய அரசிலிருந்து அனுப்பப்பட்டு, பார்வையிட்டு, ஆய்வு செய்து, ஆய்வின் அடிப்படையில் 142 அடி முழுமையாக தண்ணீரை தேக்கி வைத்துக் கொள்ளலாம், அந்த அளவுக்கு அணை பாதுகாப்பாக இருக்கின்றதென்று அவர்களே தெரிவித்தார்கள். அதற்குப் பிறகு, 20 நாட்களுக்குப் பிறகுதான் மழையே வந்தது. மேலும், மழை வந்தது இந்தப் பகுதியில் மட்டுமல்ல, கேரளாவிலே பல்வேறு பகுதிகளில் மழை வந்தது, பல்வேறு பகுதிகளில் நீர் சூழ்ந்தது.

இந்த ஒரு பகுதி மட்டுமாக இருந்தால் சொல்லலாம், மற்ற பகுதிகளுக்கு எப்படி நீர் வந்தது? அந்தந்த பகுதியில் இருக்கின்ற அணையில் அதிக நீர் இருந்த காரணத்தினாலே சேமிக்க முடியாத நீரெல்லாம் உபரிநீராக வெளியேறிய காரணத்தினாலே அங்கே வெள்ளநீர் சூழ்ந்து பாதிக்கப்பட்டிருக்கின்றதேயொழிய, முல்லைப் பெரியாறு அணையிலிருந்து திறக்கப்பட்ட நீரினால் அல்ல. மேலும், வெள்ளம் புகுந்து, பாதித்து, ஒரு வாரம் கழித்துத்தான் அங்கே தண்ணீரே திறக்கப்படுகிறது, உடனடியாக திறக்கப்படவில்லை.

மேலும், மூன்று முறை எச்சரிக்கை விடப்பட்டிருக்கிறது, 139 அடி வருகின்றபொழுதே எச்சரிக்கை விடப்படுகிறது, அதற்குப் பிறகு 141 அடி வரும்பொழுது எச்சரிக்கை விடப்படுகிறது, பின்னர் 142 அடி வரும்பொழுது எச்சரிக்கை விடப்படுகிறது. கிட்டத்தட்ட 11 ஆயிரம், 12 ஆயிரம் கனஅடி தண்ணீர், சிறிது சிறிதாகத்தான் திறக்கப்படுகிறதேயொழிய, ஒரேயடியாக தண்ணீர் திறக்கப்படவில்லை. ஆகவே, வெள்ளநீர் வருவதற்கு முன்பாகவே, கேரளா பகுதியில் பொழிந்த கனமழையின் காரணமாக அங்கே இருக்கின்ற அணைகள் முழுவதும் நிரம்பி, உபரி நீராக வெளியேறி, அந்த உபரி நீரினால் தான் கேரளாவிலே வெள்ளம் பாதித்தது.

தமிழ்நாடு முழுவதும் பாதிப்பாக இருக்கின்றது, அடுத்தகட்டமாக என்ன செய்யப் போகின்றீர்கள்?

அணைகள் எல்லாம் பாதுகாப்பாகத்தான் இருக்கின்றது, பாதுகாப்பாக இல்லையென்பது தவறான கருத்து. நீங்களே கைவிடப்பட்ட பாலம் என்கிறீர்கள், வலுவிழந்த பாலம், கைவிடப்பட்ட பாலம் என்று சொல்லும்பொழுது அதை எப்படி சீர் செய்யமுடியும்? வலுவிழந்த பாலம் என்பதால்தான் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. அதில், அத்துமீறிப்போனால் என்ன செய்ய முடியும்? வலுவிழந்த பாலத்திற்கு பதிலாகத்தான் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெய்லலிதா அதற்கு அருகாமையிலேயே புதிய பாலம் ஒன்று கட்டவேண்டுமென்று ஆணையிட்டு, அந்த ஆணையின்படி நெடுஞ்சாலைத் துறையின் மூலமாக அந்தப் பணி மேற்கொள்ளப்பட்டு, பணி நிறைவு செய்து, போக்குவரத்துப் பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டு, அதில் போக்குவரத்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

மாயனூரில் காவிரிக்கரையில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. அதுபோல, நாகப்பட்டினம், ஆலங்குடியிலும் கொள்ளிடம் கரையிலும் உடைப்பு ஏற்பட்டிருக்கிறதே?

நீண்ட நாளைக்குப் பிறகு தண்ணீர் வருகின்ற காரணத்தினால்தான். இது, இப்பொழுது ஏற்பட்ட பாதிப்பு மட்டுமல்ல, ஒவ்வொரு முறையும் தண்ணீர் வருகின்றபொழுது ஏதாவது ஒரு இடத்தில் உடைப்பு ஏற்படும். இப்பொழுது மட்டுமல்ல, காலங்காலமாக, பழங்காலத்தில் இருந்து நடைமுறைகளை எடுத்துப் பார்க்கின்றபொழுது, ஏதாவது ஒரு பகுதியில் கரை சற்று பலவீனமாக இருக்கின்றபொழுது அந்த இடத்தில் உடைப்பு ஏற்படும், உடனே சரி செய்து விடுவார்கள். வெள்ளம் திடீரென்று வருகிறது, சொல்லிக்கொண்டு வருவதில்லை. அந்த நேரத்தில், வேகமாக, துரிதமாக, நம்முடைய அதிகாரிகள் செயல்பட்டு, உடைப்புகளை எல்லாம் சரிசெய்து, எக்காரணத்தைக் கொண்டும் மக்களோ, விளைநிலங்களோ பாதிக்காத அளவிற்கு தமிழக அரசால் பாதுகாப்பான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x