Published : 24 Aug 2018 11:41 AM
Last Updated : 24 Aug 2018 11:41 AM

‘முல்லைப்பெரியாறு அணை நீரால் வெள்ள பாதிப்பு’- கேரள புகாருக்கு தமிழக முதல்வர் மறுப்பு; 142 அடி தண்ணீர் தேக்குவதை தடுப்பதாக புகார்

முல்லைப் பெரியாறு அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீரால் வெள்ளம் ஏற்பட்டதாக கேரள அரசு கூறியுள்ள புகாரை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக மறுத்துள்ளார். முல்லைப்பெரியாறு அணையில் 142 அடி வரை தண்ணீர் தேக்குவதை தடுக்கவே கேரளா புகார் கூறுவதாக அவர் விளக்கம் அளித்துள்ளார்.

திருச்சி முக்கொம்பு அணை மதகு உடைந்த நிலையில் அதனை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை பார்வையிட்டார்.

அப்போது, முல்லைப்பெரியாறு அணையில் இருந்து தமிழகம் திடீரென அதிகஅளவில் தண்ணீர் திறந்து விட்டதால் தான் கேரளாவில் மிக மோசமான வெள்ள பாதிப்பு ஏற்பட்டதாக உச்ச நீதிமன்றத்தில் கேரளா சார்பில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் பதிலளித்ததாவது:

‘‘கேரளாவில் ஏற்பட்ட பெரும் வெள்ளத்துக்கு அங்கு பெய்த கனமழையும், அந்த மாநிலத்தில் உள்ள பல்வேறு அணைகளில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டதுமே காரணம். முல்லைப்பெரியாறு அணையில் இருந்து கேரளாவுக்கு ஒரிடத்துக்கு மட்டுமே தண்ணீர் செல்கிறது.

முல்லைப்பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டபோது, முன்கூட்டியே மூன்று முறை எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அதன் பிறகே அணை திறக்கப்பட்டது. முல்லைப்பெரியாறு அணையில் 142 அடி வரை தண்ணீர் தேக்கக் கூடாது என்ற எண்ணத்தில் உச்சநீதிமன்றத்தில் கேரள அரசு தவறான தகவலை கூறியுள்ளது. அதில் துளியும் உண்மை இல்லை’’ எனக் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x