Published : 24 Aug 2018 11:11 AM
Last Updated : 24 Aug 2018 11:11 AM

உறவினர்கள், பினாமிக்கு 4,833 கோடி ஒப்பந்தம் அளித்ததாக புகார்; முதல்வர் பழனிசாமி மீது வழக்கு பதிவு செய்ய கோரி திமுக மனு: உயர் நீதிமன்றத்தில் விரைவில் விசாரணை

நெடுஞ்சாலைத் துறையில் ரூ.4,833 கோடி மதிப்புக்கு ஒப்பந்தப் பணிகளை தனது உறவினர்கள், பினாமிக்கு வழங்கியதாக முதல்வர் பழனிசாமி மீது வழக்கு பதிவு செய்யக் கோரி திமுக சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.

இதுதொடர்பாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:

முதல்வர் பழனிசாமி பொது நிர்வாகம், உள் துறை, பொதுப்பணி, நெடுஞ்சாலை, சிறு துறைமுகங்கள் என பல துறைகளை தன்னிடம் வைத்துள்ளார். ஒட்டன்சத்திரம் – தாராபுரம் - அவினாசிபாளையம் வரையான 70.20 கி.மீ. தொலைவுக்கு உலக வங்கியின் நிதியுதவியுடன் நான்கு வழிச் சாலை அமைக்க ரூ.713.34 கோடிக்கு திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு, பின்னர் அந்த மதிப்பு ரூ.1,515 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்தப் பணி ராமலிங்கம் அண்ட் கோ என்ற கம்பெனிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த கம்பெனியின் இயக்குநர் களில் ஒருவரான சந்திரகாந்த் ராம லிங்கம், முதல்வர் பழனிசாமியின் மகன் மிதுன் குமாரின் சகளை. இந்த திட்டத்தை தற்போதைய சந்தை நிலவரப்படி ரூ.200 கோடி யில் முடித்துவிடலாம். ஆனால் இதற்கு ரூ.1,515 கோடி ஒதுக்கப்பட் டுள்ளது.

இதேபோல திருநெல்வேலி - செங்கோட்டை - கொல்லம் வரை யான 45.64 கி.மீ. தொலைவுக்கு 4 வழிச் சாலை அமைக்க ரூ.900 கோடி ரூபாய்க்கு ‘வெங்கடா ஜலபதி அண்ட் கோ’ என்ற நிறுவனத்துக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனத்தின் உரிமை யாளரான பி.சுப்பிரமணியத்தின் மகள் திவ்யாவைத்தான் முதல்வரின் மகன் மிதுன்குமார் திருமணம் செய்துள்ளார். மேலும் இந்த நிறுவனத்தின் மற்றொரு பங்குதாரரான மதுரை எஸ்பிகே குழுமத்தின் நாகராஜன் செய்யாத் துரை, முதல்வரின் பினாமி. இந்த திட்டத்தை ரூ.130 கோடியில் முடித்துவிடலாம். ஆனால் இதற்கு ரூ.900 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

27 கி.மீ. மதுரை ரிங் ரோட்டை 4 வழிச் சாலையாக மாற்ற சென்னை பாலாஜி டோல்வேஸ் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்துக்கு ரூ.218.57 கோடிக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனத்தில் முதல்வரின் சம்பந்தி பி.சுப்ரமணியம், பினாமி நாகராஜன் செய்யாத்துரை ஆகியோர் இயக்குநர்களாக உள்ளனர்.

வண்டலூர் – வாலாஜா இடை யிலான 4 வழிச் சாலையை 6 வழிச் சாலையாக மாற்ற எஸ்பிகே அண்ட் கம்பெனிக்கு ரூ.200 கோடிக்கு ஒப்பந்தம் வழங்கப்பட் டுள்ளது. ராமநாதபுரம், திருவள் ளூர், கிருஷ்ணகிரி, விருதுநகர் கோட்டங்களில் சாலை பராமரிப் புப் பணிகளுக்காக ரூ.2 ஆயிரம் கோடி ஒப்பந்தம் எஸ்பிகே மற்றும் வெங்கடாஜலபதி அண்ட் கோ நிறு வனங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.

பொது ஊழியராக பதவி வகிக் கும் முதல்வர் பழனிசாமி, அதிகார துஷ்பிரயோகம் செய்து சம்பந்தி பி.சுப்பிரமணியம், நெருங்கிய உற வினரான சந்திரகாந்த் ராமலிங்கம், பினாமி எஸ்பிகே நாகராஜன் செய்யாத்துரை, ஆகியோருக்கு ஒப்பந்தங்களை வழங்கி ஆதாயம் அடையும் நோக்கில் செயல்பட்டுள்ளார்.

இவர்களைத் தவிர்த்து, தகுதியான ஒப்பந்தகாரர்களுக்கு நெடுஞ் சாலைத் துறையில் பணி வழங்கப்படாமல் சட்ட விதிகள் அப்பட்டமாக மீறப்பட்டுள்ளன. ஒப்பந்தங்களில் வெளிப்படைத் தன்மை கடை பிடிக்கப்படவில்லை.

நாகராஜன் செய்யாத்துரையின் 10-க்கும் மேற்பட்ட எஸ்பிகே குழும நிறுவனங்களிலும், அவரது விலை உயர்ந்த கார்களிலும் வருமான வரித் துறையினர் நடத்திய சோத னையில் கணக்கில் வராத ரூ.163 கோடி, 100 கிலோ தங்கம் பறி முதல் செய்யப்பட்டுள்ளது. கணக்கில் காட்டப்படாத சொத்து ஆவணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

இந்த ஒப்பந்தங்களின் மூலம் முதல்வரின் உறவினர்கள், பினாமியாக செயல்பட்டவர்களுக்கு ரூ.4,833 கோடி அளவுக்கு பணிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதில் முதல்வரின் துணையுடன் ஊழல் நடந்துள்ளது.

பொது ஊழியர் என்ற முறையில் முதல்வர் பழனிசாமி மீதும், முறைகேடுகளில் ஈடுபட்டவர்கள் மீதும் ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுதொடர்பாக லஞ்ச ஒழிப்புத் துறைக்கு கடந்த ஜூன் 13-ல் புகார் அனுப்பியும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, நான் கொடுத்த புகாரை பரிசீலித்து முதல்வர் பழனிசாமி மீது லஞ்ச ஒழிப் புத் துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கோரியுள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x