Published : 24 Aug 2018 11:07 AM
Last Updated : 24 Aug 2018 11:07 AM

ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு போட்டித்தேர்வு: அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரள மக்களுக்கு தமிழக அரசு சார்பில் நீட் தேர்வுக்குப் பயிற்சி அளிக்கும் சைதன்யா பயிற்சி மையத்தின்  சார்பில் ரூ.1 கோடி மதிப்புள்ள நிவாரணப் பொருட்களை அனுப்பிவைக்கும் நிகழ்ச்சி சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலக  அரங்கில் நேற்று நடைபெற்றது. இதில், நிவாரண பொருட்களை 4 கன்டெய்னர் மூலமாக பள்ளிக்கல்வி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்  அனுப்பிவைத்தார். பின்னர் அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களிடம்  கூறியதாவது:

‘‘மழை வெள்ளத்தால் கடுமையாக  பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்கு ரூ.1 கோடி நிவாரணப் பொருட்கள் அனுப்பப்பட்டுள்ளன.  மேலும். ரூ.1 கோடி நிவாரண  தொகையும் வழங்கப்பட்டு இருக்கிறது. இதற்காக நீட் தேர்வு பயிற்சி நிறுவனத்தினரை பாராட்டுகிறேன்.

தற்போது அரசு மாதிரிப்பள்ளி முதல்முறையாக சென்னை எழும்பூரில் தொடங்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து அனைத்து மாவட்டங்களிலும் மாதிரி  பள்ளிகள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத்தேர்வுக்கு மாவட்டத்துக்கு 10 ஆசிரியர்களுக்கு 5 நாட்கள் பயிற்சி அளிக்கப்படுகிறது.

பயிற்சிபெற்ற ஆசிரியர்கள் ஒவ்வொருவரும் தலா 100 ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளிப்பார்கள்.   விரைவில் மாணவர்களுக்கு நீட் தேர்வு பயிற்சி அளிக்கப்படும்.

பட்டதாரி ஆசிரியர் நியமனத்தைப் பொறுத்தவரையில் வெயிட்டேஜ் முறை ரத்து செய்யப்பட்டு ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு போட்டித்தேர்வு நடத்தும் முறை நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. அந்த வகையில், டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு  விரைவில் போட்டித்தேர்வு நடத்தப்படும். அதற்கான அறிவிப்பு செப்டம்பர் மாதத்தில் வெளியாகும்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x