Published : 24 Aug 2018 10:58 AM
Last Updated : 24 Aug 2018 10:58 AM

‘பிளாஸ்டிக் மாசில்லா தமிழ்நாடு  விழிப்புணர்வு பிரச்சாரத்தை தொடங்கி வைத்தார் முதல்வர்: விளம்பர தூதுவராக நடிகர் விவேக் நியமனம்

‘பிளாஸ்டிக் மாசில்லா தமிழ்நாடு’ என்ற விழிப்புணர்வு பிரச்சாரத்தை முதல்வர் கே.பழனிசாமி தொடங்கி வைத்தார். இதன் விளம்பர  தூதுவராக நடிகர் விவேக் நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழகத்தில் அடுத்த ஆண்டு ஜனவரி 1-ம் தேதி முதல் எளிதில் மக்காத பிளாஸ்டிக் பொருட்களை உற்பத்தி செய்யவும், விற்பனை செய்யவும் தடை விதிக்கப்படும் என சட்டப்பேரவையில் முதல்வர் பழனிசாமி அறிவித்திருந்தார். அதன் தொடர்ச்சியாக சுற்றுச்சூழல்

பாதுகாப்புச் சட்டம் 1986-ன்படி தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களைத் தயாரித்தல், விற்பனை செய்தல், சேமித்து வைத்தல், பயன்படுத்துதல் ஆகியவற்றை கண்காணிக்கவும், இது தொடர்பாக அரசுத் துறைகளால் எடுக்கப்படும் நடவடிக்கைகளை ஆய்வு செய்யவும் மண்டல ஒருங்கிணைப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர்.

இவர்கள் மூலம் பிளாஸ்டிக்குக்கு பதிலாக மாற்றுப் பொருட்கள் பயன்படுத்துவது குறித்து சென்னை, சேலம், மதுரை, கோவை, திருச்சி, நெல்லை ஆகிய 6 மண்டலங்களில் பயிலரங்குகள் நடத்த ரூ.54 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் ‘பிளாஸ்டிக் மாசில்லா தமிழ்நாடு’ என்ற விழிப்புணர்வு பிரச்சாரத்தை முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார். அதற்கான இலச்சினையையும் வெளியிட்டார். பிளாஸ்டிக் மாசு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த www.plasticpollutionfreetn.org என்ற இணையதளத்தையும், Plastic Pollution Free Tamilnadu என்ற செல்போன் செயலியையும் முதல்வர் தொடங்கி வைத்தார்.

அதுமட்டுமல்லாது, பிளாஸ்டிக் பயன்பாடுகளைத் தவிர்ப்பது,மறுசுழற்சி செய்வது குறித்துமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் தயாரிக்கப்பட்ட குறும்படங்களையும் முதல்வர் வெளியிட்டார். பிளாஸ்டிக் பொருட்களால் ஏற்படும் தீமைகளை விளக்கவும் பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்த்து துணி, சணல், காகிதப் பைகளை பயன்படுத்துவது குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த ‘பிளாஸ்டிக் மாசில்லா தமிழ்நாடு' விளம்பர தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள நடிகர் விவேக்கை நிகழ்ச்சியில் முதல்வர் அறிமுகப்படுத்தினார்.

பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக பாக்குமட்டையில் தட்டு,கோப்பை போன்றவற்றை தயாரிக்கும் 5 தொழில் முனைவோருக்கு மானியத்துடன் கூடிய ரூ.21 லட்சத்து 35 ஆயிரம் கடனுக்கான வரைவோலைகளையும் முதல்வர் வழங்கினார்.

பின்னர் நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் பழனிசாமி, ‘‘பிளாஸ்டிக் பொருட்களைப் பயன்படுத்துவதால் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. அதனால்தான் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு மக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

 ‘பிளாஸ்டிக் மாசில்லா தமிழ்நாடு' தூதராக நடிகர் விவேக் நியமிக்கப்பட்டுள்ளார். அவரோடு இணைந்து பணியாற்ற நடிகர்கள் சூர்யா, கார்த்திக், நடிகை ஜோதிகா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். தமிழக அரசு அலுவலகங்களில் இனி பிளாஸ்டிக் கோப்புகளுக்கு பதிலாக காகித கோப்புகள் மட்டுமே பயன்படுத்தப்படும்'' என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x