Published : 24 Aug 2018 10:56 AM
Last Updated : 24 Aug 2018 10:56 AM

பெரியார், அண்ணா, ஜெயலலிதாவுக்கு ‘பாரத ரத்னா’ விருது வழங்க வேண்டும்: அதிமுக செயற்குழு கூட்டத்தில் வலியுறுத்தல்; வாஜ்பாய், கருணாநிதிக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றம்

பெரியார், அண்ணா, ஜெயலலி தாவுக்கு ‘பாரத ரத்னா’ விருது வழங்க வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தி அதிமுக செயற்குழுவில்  தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அதிமுக செயற்குழுக் கூட்டம், சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் அவைத் தலைவர் இ.மதுசூதனன் தலைமையில் நேற்று நடந்தது. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்

செல்வம், இணை ஒருங்கிணைப் பாளர் கே.பழனிசாமி, துணை ஒருங்கிணைப்பாளர்கள் கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம், அமைச் சர்கள், எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள், மாவட்டச் செயலாளர்கள் உட்பட சுமார் 300 பேர் கலந்துகொண்டனர்.

இதில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய், திமுக தலைவர் கருணாநிதி, மக்களவை முன்னாள் தலைவர் சோம்நாத் சாட்டர்ஜி, திருப்பரங்குன்றம் எம்எம்ஏ ஏ.கே.போஸ், 50-வது ஜீயராக இருந்த ஸ்ரீமத் ஸ்ரீரங்க நாராயண ஜீயர் சுவாமிகள், காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள், எழுத்தாளர் மா.நன்னன், திரைப்படத் தயாரிப் பாளர் முக்தா சீனிவாசன், எழுத்தாளர் பாலகுமாரன், நடிகை ஸ்ரீதேவி உள்ளிட்டோர் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

மாவட்ட தலைநகரங்களில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை அரசு விழாவாக நடத்தியதற்கும், நிறைவு விழாவை சென்னையில் பிரம்மாண்டமாக நடத்த திட்டமிட்டிருப்பது, ஜெயலலிதா வழியில் பயணித்து, காவிரி நதிநீர்ப் பங்கீட்டில் தமிழகத்தின் உரிமையை நிலை நாட்டியது, தமிழகத்தில் தொழில் வளர்ச்சியை விரைவுபடுத்த சர்வதேச தொழில் முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்த முயற்சி மேற்கொள்வது, ரூ.50 கோடியே 80 லட்சத்தில் மெரினாவில் ஜெயலலிதாவுக்கு நினைவு மண்டபம் கட்டுவது, கேரளாவில் பெருவெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.10 கோடி நிவாரண நிதி, பல கோடி மதிப்புள்ள நிவாரணப் பொருட்கள் அனுப்பியது ஆகியவற்றுக்காக அரசுக்கு நன்றியும் பாராட்டும் தெரிவித்து தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.

அரசுக்கு பாராட்டு

எம்ஜிஆர். நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கடற்கரை சாலையில் நினைவு வளைவு அமைக்க அடிக்கல் நாட்டியதற்கும், ரூ.328 கோடியில் தமிழகத்தில் குடிமராமத்துப் பணிகளை மேற் கொண்டு நீர் ஆதாரத்தைப் பெருக்கியதற்கும், புதிதாக ஆண்டுதோறும் 1 லட்சத்து 30 ஆயிரம் வீடுகளையும், பசுமை வீடுகள் திட்டத்தின் கீழ் புதிதாக ஆண்டுதோறும் 20 ஆயிரம் வீடுகளையும் கட்டுவதற்கு நடவடிக்கைகள் எடுத்ததற்கும், இஸ்லா மியர்கள், கிறிஸ்தவர்கள் புனிதப் பயணம் மேற்கொள்ள நிதி ஒதுக்கியதற்கும் அரசுக்கு பாராட்டு தெரிவித்தும், பெரியார்,  அண்ணா, ஜெயலலிதா ஆகியோருக்கு `பாரத ரத்னா’ விருது வழங்க வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தியும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

திருவாரூர், திருப்பரங்குன்றம் தொகுதிகளில் இடைத்தேர்தலை சந்திப்பது, நாடாளுமன்றத் தேர்தல் பணிகளை தொடங்குவது குறித்து செயற்குழு கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

இதற்கிடையே கட்சி உறுப்பினர் சேர்க்கை குறைந்தது குறித்து செயற்குழுவில் பலர் கேள்வி எழுப்பியதாகவும், இது தொடர்பாக நிர்வாகிகளிடையே காரசார விவா தம் நடந்ததாகவும் அதிமுக வட்டாரங்கள் தெரிவித்தன. உறுப்பினர்கள் சேர்க்கைக்கான இலக்கை எட்டாததால் பல நிர்வாகிகள் மீது அதிருப்தி தெரிவிக்கப் பட்டதாகவும், அதற்கான காரணங்களை சம்பந்தப்பட்ட நிர்வாகிகள் கோபமாக தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டதாகவும் அதிமுக நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x