Published : 24 Aug 2018 10:53 AM
Last Updated : 24 Aug 2018 10:53 AM

முக்கொம்பு கொள்ளிடம் மேலணையில் உடைப்பு: முதல்வர் பழனிசாமி இன்று ஆய்வு செய்கிறார் - நிரந்தர தீர்வு குறித்து ஆலோசிப்பதாக பொதுப்பணித் துறை முதன்மை செயலர் தகவல்

திருச்சி முக்கொம்பு கொள்ளிடம் மேலணையில் உடைப்பு ஏற்பட்டுள்ள பகுதியை முதல்வர் பழனிசாமி இன்று நேரில் சென்று ஆய்வு செய்கிறார். உடைப்பை தற்காலிகமாக சீரமைப்பதுடன் நிரந்தர தீர்வு காண்பது குறித்து தமிழக முதல்வருடன் ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொதுப்பணித் துறை முதன்மைச் செயலர் எஸ்.கே.பிரபாகர் தெரிவித்தார்.

1836-ல் திருச்சி முக்கொம்பு கொள்ளிடம் ஆற்றில் கட்டப்பட்ட மேலணை, நேற்று முன்தினம் இரவு சுமார் 8.15 மணியளவில் உடைந்தது. அணையின் 5-வது தூண் முதல் தொடர்ச்சியாக 9 தூண்களும் அவற்றின் மதகுகளும் உடைந்து ஆற்றில் விழுந்தன.

திருச்சி-கரூர் சாலையில் உள்ள எலமனூர் மற்றும் திருச்சி-நாமக்கல் சாலையில் உள்ள வாத்தலை ஆகியவற்றுக்கு இடையே அமைந்துள்ள இந்த மேலணை பாலத்தை, பகல் வேளைகளில் இரு சக்கர வாகனத்தில் மக்கள் கடந்து செல்வது வழக்கம். மாலை 6 மணிக்குப் பிறகு இந்த மேலணை பாலம் மூடப்பட்டுவிடும். இதனால், மேலணை நேற்று இரவு உடைந்தபோது எந்த அசம்பாவிதமும் நேரிடவில்லை.

அணை உடைந்த தகவல் அறிந்து மாவட்ட ஆட்சியர் கு.ராஜா மணி, பொதுப்பணித் துறை அதிகாரிகள் உடனடியாக முக்கொம்புக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர்.

முதன்மைச் செயலர் ஆய்வு தொடர்ந்து, பொதுப்பணித் துறை முதன்மைச் செயலர் எஸ்.கே.பிரபாகர் நேற்று வந்து, உடைந்த அணையைப் பார்வையிட்டார். பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

“அணையில் ஏற்பட்ட உடைப்பு குறித்து அதிகாரிகள் ஆராய்ந்து வருகின்றனர். கொள்ளிடம் மேலணையில் சேதம் ஏற்பட்டுள்ளதால் விவசாயத்துக்கு தண்ணீர் வழங்குவதில் எந்த பாதிப்பும் கிடையாது. அதேவேளையில், கீழணை பகுதியில் உள்ள மக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் எச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

முதல்வருடன் ஆலோசனை மேலணையில் சேதமடைந்த பகுதியைத் தற்காலிகமாக சீரமைக்கவும், அதைத்தொடர்ந்து நிரந்தர தீர்வு காணும் வகையில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும் ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. முதல்வருடன் கலந்து ஆலோசித்து அதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலணையில் சேதம் ஏற்பட்டதற்கான காரணம் குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. மேலும், தமிழ்நாட்டில் உள்ள அணைகள், பாசனத் திட்டங்கள் அனைத்தும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன” என்றார்.

முதல்வரின் செயலர் ஆய்வு அதைத்தொடர்ந்து, முதல்வரின் தனிச் செயலர் எம்.சாய்குமார் முக்கொம்புக்கு வந்து அணை சேதங்களைப் பார்வையிட்டு, எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

பின்னர், ஆட்சியர் கு.ராஜாமணி செய்தியாளர்களிடம் கூறியதாவது:

“கொள்ளிடம் மேலணையில் ஏற்பட்டுள்ள உடைப்பைச் சீரமைக்கத் தேவையான தளவாடங்களைப் பொதுப்பணித் துறையினர்வரவழைத்துக் கொண்டிருக்கின்றனர். மாலைக்குள் பராமரிப்புப் பணிகள் தொடங்கும். இந்தப் பணிகள் ஒரு வாரத்தில் நிறைவடையும் என்று பொதுப்பணித் துறை அலுவலர்கள் கூறியுள்ளனர்.

தற்காலிக அடிப்படையில் பணிகள் மேற்கொள்ளப்பட்டாலும், அந்த கட்டுமானம் ஆற்றில் வெள்ளம் வந்தாலும் சமாளிக்கக் கூடிய வகையில் இருக்கும். அணையில் சேதமடைந்த தூண்கள், மதகுகளைத் தவிர்த்து எஞ்சியவற்றின் நிலைப்புத்தன்மை குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். அப்போது, அருகில் உள்ள வேறு தூண்களில் ஏதேனும் சேதம் இருப்பது கண்டறியப்பட்டால் அவற்றையும் சேர்த்து சீரமைக்கப்படும்.

மேலணையில் ஒரு மதகு சேதமடைந்திருந்ததாகவும், அதன் தொடர்ச்சியாக இந்த உடைப்பு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. ஆனால், இந்தத் தகவல் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.

மணல் குவாரிக்கும் கொள்ளிடம் மேலணை உடைந்ததற்கும் தொடர்பில்லை. காவிரியில் விவசாயத்துக்குத் தேவையான தண்ணீர் 25,000 கன அடிதான். ஆனால், தற்போது காவிரியில் 30 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் செல்கிறது. எனவே, விவசாயத்துக்கு தண்ணீர் வழங்குவதில் எந்த பாதிப்பும் இல்லை” என்றார்.

தளவாடங்கள் வரவழைப்பு அதைத்தொடர்ந்து, கொள்ளிடம் மேலணையை சீரமைக்கும் பணிகள் உடனடியாக தொடங்கின. சுமார் 50-க்கும் அதிகமான தொழி லாளர்கள் மூட்டைகளில் மணல் நிரப்பும் பணியில் ஈடுபட்டனர். மேலும், லாரிகள் மூலம் அணை சீரமைப்புக்குத் தேவையான சவுக்கு உள்ளிட்ட தளவாடப் பொருட்கள் கொண்டு வரப்பட்டன.

இந்நிலையில் மேலணையில் ஏற்பட்டுள்ள பாதிப்பை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்வதற்காக முதல்வர் பழனிசாமி இன்றுநேரில் வரவுள்ளதாக தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவித்தன. இதையடுத்து திருச்சி உள்ளிட்ட பகுதிகளில் போலீஸார் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x