Published : 24 Aug 2018 10:25 AM
Last Updated : 24 Aug 2018 10:25 AM

மெரினா சாலையில் ரூ.2.52 கோடியில் எம்ஜிஆர் நூற்றாண்டு வளைவு: முதல்வர் கே.பழனிசாமி அடிக்கல் நாட்டினார்

சென்னை மெரினா கடற்கரை சாலையில் ரூ.2.52 கோடியில் அமைக்கப்பட உள்ள எம்ஜிஆர் நூற்றாண்டு வளைவுக்கு முதல்வர் கே.பழனிசாமி நேற்று அடிக்கல் நாட்டினார்.

இதுதொடர்பாக தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

மறைந்த முதல்வர் எம்ஜிஆரின் உயரிய லட்சியம், சிறப்புகளை நினைவுகூரும் வகையில் மாநிலம் முழுவதும் தமிழக அரசு சார்பில் அவரது நூற்றாண்டு விழா பிரம்மாண்டமாக கொண்டாடப்பட்டது. மதுரையில் கடந்த ஆண்டு ஜூன் 30-ம் தேதி தொடங்கப்பட்டு, டிசம்பர் 31-ம் தேதி திண்டுக்கல்லில் விழா நிறைவடைந்தது.

‘எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, சென்னையில் நினைவு வளைவு அமைக்கப்படும்’ என்று சட்டப்பேரவையில் முதல்வர் கே.பழனிசாமி கடந்த ஆண்டு ஜூன் 28-ம் தேதி அறிவித்தார். அதன்படி, சென்னை மெரினா காமராஜர் சாலையில் உள்ள பொதுப்பணித் துறை அலுவலகம் அருகே ரூ.2.52 கோடியில் எம்ஜிஆர் நூற்றாண்டு வளைவு அமைக்கப்படுகிறது. இதற்கு முதல்வர் கே.பழனிசாமி 23-ம் தேதி (நேற்று) காலை அடிக்கல் நாட்டினார்.

துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், சட்டப்பேரவைத் தலைவர் பி.தனபால் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில்  அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் மற்றும் அதிகாரிகள்கலந்துகொண்டனர்.கலைநயத்துடன் கூடிய சிற்ப வேலைப்பாடுகளுடன் சுமார் 66 அடி அகலம், 52 அடி உயரம் கொண்டதாக எம்ஜிஆர் நூற்றாண்டு வளைவு அமைக்கப்பட உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x