Published : 22 Aug 2018 09:02 AM
Last Updated : 22 Aug 2018 09:02 AM

அண்ணா சிலை முதல் கருணாநிதி நினைவிடம் வரை பேரணி; செப்டம்பர் 5-ம் தேதி பலத்தை நிரூபிக்க அழகிரி தீவிரம்; 1 லட்சத்துக்கும் அதிகமானோரை திரட்ட முடிவு

அண்ணா சிலை முதல் கருணாநிதி நினைவிடம் வரை செப்டம்பர் 5-ம் தேதி நடைபெறவுள்ள பேரணியில் 1 லட்சத்துக்கும் அதிகமானோர் பங்கேற்பார்கள் என முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி தெரிவித்துள்ளார்.

மத்திய அமைச்சர், தென் மண்டல அமைப்புச் செயலாளர் என திமுகவில் செல்வாக்கோடு வலம் வந்த மு.க.அழகிரிக்கும், அவரது தம்பியும், திமுக செயல் தலைவருமான மு.க.ஸ்டாலினுக்கு இடையே மோதல் வெடித்தது. இதைத்தொடர்ந்து கடந்த 2014 மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக திமுகவில் இருந்து அழகிரி நீக்கப்பட்டார். அதன்பிறகு ஸ்டாலினை அவ்வப்போது விமர் சித்தாலும் அரசியலில் இருந்து அழகிரி ஒதுங்கியே இருந்தார். கடந்த 2016 சட்டப்பேரவைத் தேர்தலில் 89 தொகுதிகளில் வென்ற திமுக நூலிழையில் ஆட்சி அமைக் கும் வாய்ப்பை இழந்தது. அதனைத் தொடர்ந்து, ‘‘ஸ்டாலின் இருக்கும் வரை திமுக வெற்றி பெறாது’’ என அழகிரி விமர்சித்தார். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு நடந்த ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் திமுக டெபாசிட் இழந்தது. இது குறித்து கருத்து தெரிவித்த அழகிரி, ‘’ஸ்டாலின் செயல் தலைவர் அல்ல. செயல்படாத தலைவர்’’ என கடுமையாக சாடினார்.

இந்நிலையில் திமுக தலைவர் கருணாநிதி கடந்த 7-ம் தேதி காலமானார். அவர் சிகிச்சை பெற்ற 11 நாட்களும் அழகிரி, ஸ்டாலின் உள்ளிட்ட குடும்பத்தினர் மருத்துவமனையிலேயே இருந்த னர். அப்போது அழகிரி - ஸ்டாலின் இடையே இணக்கத்தை ஏற்படுத்த அவர்களது சகோதரி செல்வி மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியில் முடிந்தன. அழகிரியை மீண்டும் கட்சியில் சேர்க்க ஸ்டாலின் திட்டவட்டமாக மறுத்து விட்டதாகக் கூறப்படுகிறது.

கடந்த 13-ம் தேதி கருணாநிதி நினைவிடத்தில் குடும்பத்தினருடன் அஞ்சலி செலுத்திய அழகிரி, ‘கருணாநிதியின் உண்மையான விசுவாசிகள் என் பக்கம் உள்ளனர். அடுத்து என்ன செய்வது என்பதை விரைவில் அறிவிப்பேன்’ என கூறியிருந்தார். கருணாநிதி மறைந்த ஒரு வாரத்தில் அழகிரி எழுப்பிய இந்த கலகக் குரல் திமுகவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் தனது செல்வாக்கை நிரூபிக்கும் வகையில் வரும் செப்டம்பர் 5-ம் தேதி கருணாநிதி நினைவிடத்துக்கு பேரணி நடத்த அழகிரி திட்டமிட்டுள்ளார்.

இது தொடர்பாக ‘இந்து தமிழ்’ நாளிதழுக்கு நேற்று அவர் அளித்த பேட்டியில், ‘‘செப்டம்பர் 5-ம் தேதி அண்ணா சாலை, வாலாஜா சாலை சந்திப்பில் உள்ள அண்ணா சிலை யிலிருந்து மெரினா கடற்கரையில் உள்ள கருணாநிதி நினைவிடம் வரை அமைதிப் பேரணி நடத்த இருக்கிறேன். இதில் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந் தும் 1 லட்சத்துக்கும் அதிகமா னோர் பங்கேற்பார்கள். கருணாநிதி யின் உண்மையான விசுவாசிகள் என் பக்கம் உள்ளனர் என்பதை அப்போது அனைவரும் புரிந்து கொள்வார்கள். எனது பின்னணி யில் பாஜக உட்பட எந்தக் கட்சியும் இல்லை. கருணாநிதி யின் லட்சியத்தை நிறைவேற்று வதற்கான முயற்சியில் இறங்கி யுள்ளேன்’’ என்றார்.

வரும் 28-ம் தேதி திமுக பொதுக் குழுவில் கட்சித் தலைவராக ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட உள்ள நிலையில், அழகிரி பேரணி நடத்த உள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x