Published : 20 Aug 2018 01:15 PM
Last Updated : 20 Aug 2018 01:15 PM

பார்சலுக்குப் பாத்திரம் கொண்டுவந்தால் 5% தள்ளுபடி: தமிழ்நாடு ஓட்டல் சங்கம் அறிவிப்பு

பார்சலுக்குப் பாத்திரம் கொண்டுவந்தால் பில்லில் 5% தள்ளுபடி என தமிழ்நாடு ஓட்டல் சங்கம் அறிவித்துள்ளது. இந்தச் சங்கத்தில் 10,000-க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் உள்ளனர். பிளாஸ்டிக் பைகளுக்கு தடை விதித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ள நிலையில், தமிழ்நாடு ஓட்டல் சங்கத்தினர் இந்தத் தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளனர்.

இது குறித்து சென்னை ஓட்டல்கள் சங்கத் தலைவர் எம்.ரவி கூறும்போது, "சராசரியாக, ஒவ்வோர் உணவு பார்சலுக்கும் 3% முதல் 4% வரை நாங்கள் செலவழிக்கிறோம். வாடிக்கையாளர்கள் அவர்களே பார்சலுக்கான பாத்திரங்களை கொண்டுவந்துவிட்டார்கள் என்றால் 5% பில்லில் சலுகை அளிக்கத்தயாராக இருக்கிறோம். இது தொடர்பாக அறிவிப்புப் பலகைகளை வைக்குமாறு சென்னை உணவகங்களுக்கு அறிவுறுத்தியுள்ளோம்" என்றார்.

சங்கத்தின் செயலர் ஆர்.ஸ்ரீநிவாசன் கூறும்போது, "மாநிலம் முழுவதும் 2 லட்சம் உணவகங்கள் இருக்கின்றன. வேலூர், சிதம்பரம், மதுரை போன்ற நகரங்களில் உள்ள உணவகங்கள் ஏற்கெனவே பார்சலுக்கு பாத்திரம் கொண்டுவருமாறு அறிவுறுத்தத் தொடங்கிவிட்டது. இதனால், கேரியர் சாப்பாடு காலம் திரும்பக்கூடும். 40 ஆண்டுகளுக்கு முன்னர் கேரியரில் சாப்பாடு வாங்கிச் செல்வது பரவலாக பழக்கத்தில் இருந்தது. எல்லா வீடுகளிலும் பித்தளை கேரியர்கள் இருக்கும். பிளாஸ்டிக் பைகள் வருகை கேரியர்களுக்கு முழுக்குப் போட வைத்தது. தற்போது இந்த அறிவிப்பு மீண்டும் கேரியர்களைக் கொண்டு வரும்" என்றார்.

அதேவேளையில் எல்லோரும் கேரியர் கொண்டுவர முடியாது என்பதால் வாழை இலை, தையல் இலை, அலுமினியம் ஃபாயில்கள் பயன்படுத்தவும் சில ஓட்டல்கள் முடிவு செய்துள்ளன. பிளாஸ்டிக்குக்கு மாற்றாக காட்போர்டு அட்டைகள் போன்றவற்றை வரவேற்பதாக அடையார் ஆனந்த பவன் உரிமையாளர் விஷ்ணு சங்கர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x