Published : 19 Aug 2018 01:53 PM
Last Updated : 19 Aug 2018 01:53 PM

முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 139 அடிக்குக் குறைக்கும் பேச்சுக்கே இடமில்லை: ஓ.பன்னீர்செல்வம் திட்டவட்டம்

முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தைக் குறைக்க வேண்டும் என்று பலதரப்பிலிருந்தும் அழுத்தம் வரும் நிலையில் 139 அடியாக குறைக்கும் பேச்சுக்கே இடமில்லை என்று தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்தார்.

முல்லைப் பெரியாறு அணையின் உபரி நீரும் இடுக்கி அணைக்கு வந்து சேர்வதால் இந்த அணையின் நீர் மட்டத்தை 139 அடியாக குறைக்க வேண்டும் என்று கேரள முதல் மந்திரி பினராய் விஜயன் வலியுறுத்தினார். அதன் அடிப்படையில் இரு மாநில அரசுகளும் பெரியாறு அணை நீர் மட்டத்தை குறைக்க பரிசீலனை செய்ய வேண்டும் என உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

இந்நிலையில் குமுளி செல்லும் மலைப்பாதையில் மண் சரிவை பார்வையிட வந்த துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், கூறும்போது, “முல்லைப் பெரியாறு அணையில் இருந்து உபரிநீர் கேரளாவுக்கு திறக்கப்பட்டுள்ளது. கடந்த 25 நாட்களுக்கு முன்பு இந்த அணையில் தொழில்நுட்ப குழுவினர் ஆய்வு செய்து அணை பலமாக இருப்பதாகவும், அணையில் 142 அடி வரை தண்ணீர் தேக்கலாம் என்றும் சான்றிதழ் வழங்கி உள்ளனர். இதில் அச்சப்பட எதுவும் இல்லை. அணை பலமாக இருப்பதாக பல ஆய்வுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளன.

அணையின் நீர்மட்டத்தை 139 அடியாக குறைக்க வேண்டும் என்ற பேச்சுக்கே இடமில்லை. பூகம்பம் ஏற்பட்டாலும் அணைக்கு பாதிப்பு ஏற்படாது. கேரள மாநிலத்தில் நம் சகோதர்கள் தான் வாழ்கிறார்கள். தமிழகம் வேறு, கேரளா வேறு என்று பிரித்துப் பார்க்கவில்லை. கேரளாவில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புக்கு தேனி மாவட்டத்தில் இருந்து தமிழர்கள் பலர் தன்னார்வலர்களாக நிவாரண பொருட்களை அனுப்பி வருகின்றனர். மாவட்ட நிர்வாகமும் நிவாரண பொருட்களை அனுப்பி வைத்துள்ளது” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x