Published : 18 Aug 2018 05:05 PM
Last Updated : 18 Aug 2018 05:05 PM

இலங்கையில் தயாரிக்கப்பட்ட ராட்சத ஸ்ட்ராபெரி பீட்சா: 6 ஆயிரம் பேர் வரையிலும் சாப்பிடலாம்

உலகிலேயே மிகப்பெரிய ஸ்ட்ராபெரி பீட்சா இலங்கையில் தயாரிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் பிரபல சுற்றுலாத் தலமான நுவரெலியாவில் உள்ள கிரான்ட் நட்சத்திர ஓட்டலில் ராட்சத ஸ்ட்ராபெரி பீட்சா ஒன்றினைத் தயாரித்துள்ளனர். இந்த நிகழ்ச்சியில் நுவரெலியாவின் மேயர் சந்தன லால் கருணாரத்ன கலந்து கொண்டு பீட்சாவை வெளியிட்டார்.

இது குறித்து மேயர் சந்தன லால் கருணாரத்ன கூறுகையில், ''இலங்கையில் நுவரெலியா மாவட்டத்தில் மட்டும் உற்பத்தியாகும் ஸ்ட்ராபெரி பழங்களை உலகளவில சந்தைப்படுத்தும் நோக்கத்தில் இந்த ராட்சத ஸ்ட்ராபெரி பீட்சா தயாரிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இலங்கையில் உள்ள ஸ்ட்ராபெரி பழங்களை உற்பத்தி செய்யும் விவசாயிகளை ஊக்குவிக்க முடியும். இந்த பீட்சாவை 10 நாட்கள் பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டிருக்கும்'' என்றார்.

இலங்கையின் பிரபலமான உணவுத் தயாரிப்பாளர்களான பிரியந்த வீரசிங்க மற்றும் விராஜ்ஜயரத்ன ஆகியோர் தலைமையில் 100 சமையல் கலை நிபுணர்கள் இணைந்து இந்த பீட்சாவைத் தயாரித்துள்ளனர்.

இந்த ராட்சத பீட்சா 1,400 கிலோ எடை கொண்டது. இதில் சுமார் 200 கிலோ ஸ்ட்ராபெரி பழங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இந்த பீட்சா 25 அடி நீளமும், 6 அங்குல உயரமும் கொண்டது. இந்த ராட்சத ஸ்ட்ராபெரி பீட்சாவை 6000 பேர் வரையிலும் உண்ண முடியும், என இதனைத் தயாரித்த உணவுத் தயாரிப்பாளரான பிரியந்த வீரசிங்க செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x