Published : 18 Aug 2018 04:46 PM
Last Updated : 18 Aug 2018 04:46 PM

நீலகிரி, கோவை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு: வானிலை மையம் எச்சரிக்கை

நீலகிரி, கோவை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. கேரள மாநிலத்தில் வரலாறு காணாத வெள்ளத்தால் இதுவரை மழை சார்ந்த உயிரிழப்புகள் 324 ஆக அதிகரித்துள்ளது. மீட்புப் பணிகளில் ராணுவம் மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழகத்திலும் கோவை, திண்டுக்கல், தேனி, நீலகிரி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. சேலம் மாவட்டம் மேட்டூர் அணையில் இருந்து 1.90 லட்சம் கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளதால் காவிரி கரையோர பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

அதேபோல், தென்மேற்குப் பருவமழை தீவிரம் காரணமாக, திருநெல்வேலி மாவட்டத்தில் குற்றாலம் பிரதான அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவி, மணிமுத்தாறு அருவி, அகஸ்தியர் அருவி ஆகிய அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், அந்த அருவிகளில் குளிக்க 5 ஆவது நாளாக தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சனிக்கிழமை செய்தியாளர்களை சந்தித்த சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன், “தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வெப்பச் சலனம் காரணமாக ஓரிரு இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளது. தென் கடலோரப் பகுதிகளில் குளச்சல் முதல் தனுஷ்கோடி வரை கடல் சீற்றமாக காணப்படும். நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், நெல்லை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.

வங்கக்கடலில் காற்றின் வேகம் அதிகமாக இருக்கும் என்பதால் மீனவர்கள் ஆழ்கடல் பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம்” என தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x