Published : 18 Aug 2018 02:36 PM
Last Updated : 18 Aug 2018 02:36 PM

இடிந்து விழும் நிலையில் கொள்ளிடம் பாலம்: ஸ்டாலின் கண்டனம்; அதிமுக பதிலடி

கொள்ளிடம் பாலத்தில் விரிசல் ஏற்பட்டு எந்நேரத்திலும் இடிந்து விழலாம் என்ற நிலையில், அதிமுக அரசு அமைதி காப்பது கண்டனத்திற்குரியது என்ற ஸ்டாலினின் ட்விட்டரில் தெரிவிக்க, அதற்கு அதிமுக பதில் கொடுத்துள்ளது.

சேலம் மாவட்டம் மேட்டூரில் இருந்து 2 லட்சம் கனஅடிக்கும் அதிகமான தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்படுகிறது. இந்த தண்ணீர் திருச்சி கொள்ளிடம் ஆற்றில் 1 லட்சம் கனஅடிக்கும் மேல் திறந்து விடப்பட்டுள்ளது. இந்நிலையில், திருச்சி கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள பழமை வாய்ந்த பாலத்தின் 18 ஆம் எண் கொண்ட தூணில் இரு தினங்களுக்கு முன் பெரிய விரிசல் ஏற்பட்டது. இதனால், அந்த பழமையான பாலம் முழுமையாக எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.

இந்தப் பாலத்தை வெள்ளிக்கிழமை மாவட்ட ஆட்சியர், சுற்றுலாத் துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வளர்மதி உள்ளிட்டோர் ஆய்வு செய்தனர். அந்தப் பாலத்தை முழுமையாக இடித்து அப்புறப்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

இந்நிலையில், இதுதொடர்பாக திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், “கொள்ளிடம் பாலத்தில் விரிசல் ஏற்பட்டு எந்நேரத்திலும் இடிந்து விழலாம் என்ற நிலையில், போக்குவரத்தை மட்டும் தடை செய்துவிட்டு அதிமுக அரசு அமைதி காப்பது கண்டனத்திற்குரியது. மேட்டூர் அணையிலிருந்து தொடர்ந்து தண்ணீர் திறந்து விடப்படுவதால் ராணுவ உதவியுடன் உடனடியாக பாலத்தை சீரமைக்க வேண்டும்” எனப் பதிவிட்டார்.

அவருடைய இந்தப் பதிவுக்கு அதிமுகவின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்பதிவில், “ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட இந்தப் பழைய இரும்புப் பாலம் காலாவதியாகி பயன்பாட்டுக்கு உகந்தது அல்ல என்று ஒதுக்கப்பட்டு மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஆட்சியில் புதிய கொள்ளிடம் ஆற்றுப்பாலம் கட்டப்பட்டு 2015 ஆம் ஆண்டு போக்குவரத்துக்காக திறந்து விடப்பட்டு ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன.

இந்த உண்மைகளை மறைத்து இட்டுக்கட்டிய பொய்யை உரக்கச் சொல்லி மக்களுக்கு பயத்தை உண்டாக்கி அதிமுக ஆட்சிக்கு அவப்பெயர் தேடித்தர முனைந்த எதிர்க்கட்சித் தலைவரின் விஷம் கலந்த பதிவு கண்டனத்துக்குரியது” என பதிவிடப்பட்டுள்ளது.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x