Published : 18 Aug 2018 01:33 PM
Last Updated : 18 Aug 2018 01:33 PM

கேரள வெள்ளப் பாதிப்பு; மேலும் ரூ.5 கோடி நிதியுதவி: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

கேரள வெள்ளப் பாதிப்புகளுக்காக தமிழக அரசு ஏற்கெனவே 5 கோடி ரூபாய் அளித்துள்ள நிலையில், மேலும் 5 கோடி ரூபாயை முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து அளிக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், “நமது அண்டை மாநிலமான கேரளாவில், வரலாறு காணாத கனமழையின் காரணமாக பல மாவட்டங்கள் வெள்ளத்தால் சூழப்பட்டு, மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதுவரை 300-க்கும் அதிகமான மக்கள் உயிரிழந்துள்ளதாகவும் தெரிய வருகிறது. இந்த தொடர் கனமழையின் காரணமாக உயிரிழந்து வாடும் குடும்ப உறுப்பினர்களுக்கு, தமிழ்நாடு மக்களின் சார்பிலும், தமிழ்நாடு அரசின் சார்பிலும் என்னுடைய ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இது சம்பந்தமாக, 10.8.2018 அன்று, முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து 5 கோடி ரூபாய் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்காக அளித்திருந்தேன். மேலும், தமிழ்நாடு மக்களிடமிருந்து இதுவரை பல கோடி ரூபாய் மதிப்பிலான நிவாரணப் பொருட்கள் பெறப்பட்டு, கேரள மாநிலத்திற்கு அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் மூலம் ஒருங்கிணைத்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இப்பணி தொடர்ந்து நடைபெறும்.

தற்போது அங்குள்ள பாதிப்பின் தன்மையைக் கருத்தில் கொண்டு, முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து கூடுதலாக 5 கோடி ரூபாய் அளிப்பதுடன், பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்கு நிவாரணப் பொருட்களாக 500 மெட்ரிக் டன் அரிசி, 300 மெட்ரிக் டன் பால் பவுடர் மற்றும் 15 ஆயிரம் லிட்டர் உயர் வெப்ப நிலையில் பதப்படுத்தப்பட்ட பால், வேட்டிகள், கைலிகள், 10 ஆயிரம் போர்வைகள், அத்தியாவசிய மருந்துகளுடன் மருத்துவம் மற்றும் கால்நடை மருத்துவக் குழுக்கள் ஆகியவை உடனடியாக அனுப்பி வைக்கப்படும்.

இப்பணிகளை ஒருங்கிணைக்க தமிழ்நாடு அரசின் வருவாய் நிர்வாக ஆணையரின் தலைமையின் கீழ், இரண்டு மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் சந்தோஷ் பாபு மற்றும் டரேஸ் அகமது ஆகியோர் பணியாற்ற நான் உத்தரவிட்டுள்ளேன்” என தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x